search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    சத்தியமங்கலத்தில் கழிப்பிட வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    சத்தியமங்கலத்தில் கழிப்பிட வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் கொங்கு நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லையாம். இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும் என பலமுறை கேட்டு கொண்டார்களாம். மனுவும் கொடுத்தார்களாம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். சத்தியமங்கலம் வடக்குப் பேட்டையில் உள்ள அத்தாணி ரோட்டில் பொதுமக்கள் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்தனர்.சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சாலை மறியல் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பொதுமக்கள் கூறும் போது, “30 வருடமா எங்களுக்கு எந்தவித கழிப்பிட வசதி இல்லை நகராட்சியிலும் பலமுறை கேட்டு உள்ளோம் மனுக்களும் கொடுத்து உள்ளோம்.

    ஆனால் அவர்கள் உங்கள் பகுதிக்கு கழிப்பிட வசதி வராது என்று கூறிவிட்டனர். கழிவு தண்ணீரை வீட்டிலிருந்து நாங்களே வெளியே கொண்டு வந்து ஊற்றுகிறோம்.

    இதனால் எங்களுக்கு பலவிதமான தொற்று நோய்களால் அவதிபடும் நிலை உள்ளது.

    இதனால் எங்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும்“ என்று கூறினர்.

    இது குறித்து உங்கள் கோரிக்கையினை நகராட்சி அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் கூறியதை தொடர்ந்து சமாதானம் ஆன பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் இந்த போராட்டத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×