என் மலர்
ஈரோடு
கோபி:
கோவை கரட்டூர் மேட்டை சிறந்தவர் சார்ஜகான் (வயது 39). இவர் நேற்றிரவு கோபி அருகே உள்ள உடையாம் பாளையத்தில் உள்ள ஒருவரின் காரை விலைக்கு வாங்குவதற்காக தனது காரில் உடையாம் பாளையத்திற்கு வந்தார்.
பின்னர் விலைக்கு வாங்கிய காரை சார்ஜஹான் ஓட்டிப் பார்த்தார். பின்னர் மீண்டும் தனது காரில் சார்ஜஹான் மற்றொருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கார் திடீரென தீ பிடிக்க தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்ஜஹான் மற்றொருவர் காரில் இருந்து வேகமாக கீழே இறங்கி ஓடி வந்தனர்.
இது குறித்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தனர். எனினும் கார் எரிந்து நாசமானது. காரில் இருந்து இரண்டு பேர் இறங்கி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு அறிவுறுத்தலின்படி ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதிகளான தாளவாடி, சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 4 தியேட்டர்களில் காட்சிகள் வரும் 31-ந்தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள மழலையர் தொடக்க பள்ளிகள் என 1000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வரும் 31-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்களான கொடிவேரி அணை, பவானிசாகர் பூங்கா, குண்டேரி அணை போன்ற பகுதிகளில் மறுஉத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பார் வசதிகளுடன் கூடிய டாஸ்மாக் கடைகள் மறுஉத்தரவு வரும்வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 105 பார்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜவுளி சந்தை திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெறும். இது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் நடைபெறும் சந்தையில் 3 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 360 தினசரி கடைகள், 60 வாரச்சந்தை கடைகள் என 420 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
நாளை கருங்கல் பாளையத்தில் நடைபெற உள்ள மாட்டுச்சந்தைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 கோடி வர்த்தகம் முடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் காவலிபாளையத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது26). தனது உறவினர்களுடன் ஈரோடு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ஆயிகவுண்டம் பாளையத்தை சேர்ந்த மெளனிகா என்பவருக்கும் கடந்த மாதம் 14-ந் தேதி காதல் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தங்களுக்கு பெண் வீட்டாரால் இடையூறு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு தர கோரி தஞ்சம் அடைந்தோம். இரு குடும்பத்தாரை அழைத்து போலீசார் சமாதானம் பேசினர்.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மெளனிகாவின் உறவினர் போன் செய்தார். மெளனிகாவின் தந்தை ரகுபதி உடல் நலக்குறைவால் பெருந்துறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறி அழைத்தார்.
இதை நம்பி நானும், என் மனைவியும் மருத்துவமனை சென்றோம். வழியில் மாமனார், சித்தப்பா குடும்பத்தினர் சேர்ந்து என்னை தாக்கி, எனது மனைவியின் நகையை பறித்து, அவளை கடத்தி சென்றனர்.
இது பற்றி பெருந்துறை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனது மனைவியை மீட்பதுடன், கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (55) விவசாயி. இவரும் இவரது தம்பி குமாரசாமி இருவரும் சம்பவதன்று ஓலப்பாளையம் பிரிவு பைபாஸ் ரோட்டில் உள்ள ஓரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றனர்.
டீ குடித்து கோவிந்தசாமி தனது சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டை கடந்துள்ளார். அப்போது, சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் ஒன்று இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோவிந்தசாமி தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே பூனாட்சி ஓடை மேடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 30). கட்டிட தொழிலாளி .இவரது மனைவி ராஜேஸ்வரி .இவர்களுக்கு அருண்குமார் (8) என்ற மகன் உள்ளான். அருண்குமார் குருவரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
கதிர்வேல் வீடு பின்புறம் ஒரு ஓடை செல்கிறது. இதில் தற்போது குறைந்த அளவு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று மாலை கதிர்வேல் வீட்டின் அருகே முள் வெட்டிக் கொண்டிருந்தார். வீட்டில் அருண்குமார் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி இருந்தார். ராஜேஸ்வரி வேலை விசயமாக வெளியே செல்வதாக சென்றுவிட்டார். அருண்குமார் மட்டும் வீட்டில் இருந்தான். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஓடை பகுதியில் வாத்து செல்வதை பார்த்த அருண்குமார் ஓடைப் பகுதிக்கு சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் ஓடைக்குள் விழுந்து மூழ்கினான். ஆனால் இது குறித்து வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியவில்லை.
பின்னர் சிறிது நேரத்தில் அருண்குமார் தந்தை மற்றும் தாய் வீட்டுக்கு வந்தபோது மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் மகனை தேடி பார்த்தனர் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒருவேளை ஓடை பகுதிக்கு சென்று இருக்கலாம் என்று அங்கேயும் தேடி பார்த்தனர். இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அருண்குமாரை தேடி பார்த்தனர் பின்னர் இரவு நேரம் என்பதால் பணியை நிறுத்தி விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் அருன்குமாரை தேடும் பணி நடந்தது. அப்போது ஓடை பகுதியில் அருண்குமார் உடல் மிதந்தது . மகன் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. இதுவரை 2 பேர் இறந்துள்ளனர்.
குறிப்பாக கர்நாடக, கேரளா மாநிலங்களில் கொரோனா அறிகுறியுடன் நிறைய பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடக, கேரளா செல்லும் வாகனங்களுக்கு 12பேர் கொண்ட குழுவினர் நியமித்து கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
அதேபோன்று கர்நாடக, கேரளாவில் இருந்து வரும் வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக ஆசனூர் திம்பம் மலைப்பாதை உள்ளது.
இங்குள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் பஸ், லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரானா வைரஸ் தடுப்பு துண்டுபிரசுராங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை பள்ளத்து மாகாளியம்மன் கோவில் மற்றும் கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பவானிசாகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது கோவிலின் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொத்தமங்கலம் மாரியம்மன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 2 மணி அளவில் 3 மர்ம நபர்கள் கையில் வேலுடன் பைக்கில் வந்து கோவில் பூட்டை உடைக்கின்றனர். பின்னர் உள்ளே நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடி கொண்டு ஓடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து பவானிசாகர் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றபோது காராச்சிக்கொரை மேடு பகுதியில் இருந்து புதுபீர்கடவு செல்லும் சாலை ஓரமாக வனப்பகுதியில் உண்டியல் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உண்டியலில் சுமார் 5,000 பணம் இருந்ததாக கூறப்படுகிறது. சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெருந்துறை அடுத்த நஞ்சனபுரம் பகுதியைச் சேர்ந்த பூசப்பன், பூங்கொடி தம்பதியினரின் மகள் சத்யா என்கிற சாரதாம்பாள் (வயது 26). இவருக்கும் பெருந்துறை ஆர்.எஸ். குளத்துபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரதாம்பாள் தனது தாய் பூங்கொடி மற்றும் சகோதரியிடம் தனது கணவர் சதீஷ் தன்னை துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சாரதாம்பாள் தனது தாய் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். அதில் எனது சாவுக்கு காரணம் எனது கணவர்தான் என்று எழுதி அனுப்பி இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் சதீஷ் வீட்டுக்கு சென்று பார்த்த போது சாரதாம்பாள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உங்கள் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் சாரதாம்பாள் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இன்று காலை சாரதாம்பாள் தாய் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு வந்து தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடலை வாங்க மாட்டோம் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாரதாம்பாள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடினர்.
இதனால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ராஜு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாரதாம்பாள் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் அவரது உறவினர்கள் ஆர்.டி.ஓ. முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்து உள்ள பணிக்கம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அருகிலேயே பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
ஒடிசா மாநிலம் குண்டாபாய் பகுதியை சேர்ந்த நாகேந்திரா பெகாரா (வயது30), அதே மாநிலத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பெஹாரா(19) ஆகியோர் அந்தக் பனியன் கம்பெனிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர்.
நாகேந்திர பெகாராவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 4 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் அந்த 4 பேரும் நேற்று இரவு நாகேந்திரபெகாரா தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அந்த கும்பலுக்கும் அவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீரெனு அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அருவாள் ,கத்தியால் நாகேந்திர பெகாராவை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் விழுந்து உயிருக்காக்க போராடினார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகேந்திர பெகாராவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்தபெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார் ,பெருந்துறை இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலைக்கு தொடர்புடைய சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக பயணிகளிடம் லேப்டாப், செல்போன் உள்ளிட்டவை தொடர்ந்து திருடப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். சம்பவத்தன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா கார பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(50) என்பதும் ரெயில் பயணிகளிடம் லேப்டாப் செல்போன் திருடியதும் தெரிய வந்தது.
இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியினை சேர்ந்தவர் ஆனந்த்பாபு, (வயது 25). இவர் கடந்த ஒரு மாதமாக சென்னிமலையில் தங்கி பவானியினை சேர்ந்த வெங்கடேஷ்வரன், என்பவரின் டூரிஸ்ட் வேனை ஓட்டி வந்தார்.
ஆனந்த்பாபு தினமும் சென்னிமலையில் இருந்து பனியன் தொழிலாளர்களை அழைந்து கொண்டு பெருமாநல்லூரில் உள்ள கம்பெனியில் விட்டு, விட்டு இரவு அழைந்து வரும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
ஆனந்த்பாபு டூரிஸ்ட் வேனை சென்னிமலை பி.ஆர்.எஸ்., ரோடு, பெரியார்நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி அதில் படுத்து கொள்வார்.
நேற்று பங்கில் வேனில் படுத்து இருந்தவர் வெகு நேரமாகியும் வராத காரணத்தால் பங்கில் பணியாற்றியவர்கள் சென்று பார்த்த போது ஒரு பிளாஸ்டிக் கயிற்றில் வேனிலேயே தூக்குப்போட்டு இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனந்த்பாபு எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஆனந்த்பாபுவிற்கு திருமணம் ஆகி வினோதா என்ற மனைவியும் மோகனா(3) என்ற குழந்தையும் உள்ளது.
அம்மாபேட்டை அருகேயுள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட முரளி அடுத்துள்ள கோணபுளியந்தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (எ) பொன்னுசாமி (46) விவசாயி.
இவருக்கு திருமணம் ஆகி ஜஸ்வர்யா (28) என்ற மனைவியும் சுஜீத்( 7) என்ற மகனும் உள்ளனர்.
வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் கணவன் மனைவி இருவரும் 4 ஏக்கர் விவசாய நிலத்தில் சொந்தமாக விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது நள்ளிரவில் பக்கத்து தோட்டப்பகுதியில் இருந்து யானை, யானை என சத்தம் போட்டு உள்ளனர். அதனை கேட்ட பொன்னுசாமி எழுந்துள்ளார்.
பொன்னுசாமி எழுந்தவுடன் அவர் மனைவியும் எழுந்து உள்ளார். பொன்னுசாமி வீட்டை விட்டு வெளியே வந்து வாசற்படியில் நின்று பார்த்துள்ளார் .
அப்போது திடீரென அங்குவந்த யானை பொன்னுசாமியை கீழே தள்ளி நெஞ்சு பகுதியில் மிதித்ததில் அவர் துடிதுடித்து மனைவியின் கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஊர்மக்கள் ஒன்று கூடினர்.
ஐஸ்வர்யா தனது கணவனின் உடலை தனது மடியில் வைத்து அழுது கொண்டிந்தார். அப்போது மீண்டும் அங்கு யானை வந்தது. அதனை பார்த்த மற்றவர்கள் ஓடிவிட்டனர்.
ஆனால் ஜஸ்வர்யா தனது கணவரை மடியில் வைத்து அழுது கொண்டிருந்ததார். அப்போது யானை பொன்னுசாமியின் கால் பகுதியை தனது தும்பிக்கையால் தட்டிப்பார்த்து விட்டு ஜஸ்வர்யாவை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
யானை சென்று விட்டதை அறிந்து அப்பகுதி மக்கள் மீண்டும் வீட்டின் முன்னால் கூட தொடங்கினர். அதனையடுத்து இது குறித்து சென்னம்பட்டி வனத்துறை அலுவலருக்கு தகவல் தந்தனர். விரைந்துவந்த அவர் பார்வையிட்டு வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே இப்பகுதியில் யானை மிதித்து மூன்று பேர் இறந்து உள்ளனர். மேலும் வனவிலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்களை நாசம் செய்தும் விவசாயிகளை கொன்றும் விடுவதால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






