என் மலர்
ஈரோடு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார். அதன்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்தனர். இந்த சுய ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த சுய ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். இந்தியா முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு வெற்றி பெற்றது.
ஈரோடு மாவட்டத்திலும் 100 சதவீதம் இந்த சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றினர். அதன்படி அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வேன்கள் இயங்கவில்லை. கடைகள் வணிக நிறுவனங்கள் ஓட்டல்கள், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதே சமயம் அத்தியாவசிய பொருட்களான ஆவின் பால் கடைகள், மருந்தகங்கள் திறந்திருந்தன. ஆனால் நேற்று எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், காளைமாடு சிலை, பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, சக்தி ரோடு, ஈ.வின்.என் ரோடு போன்ற பகுதிகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாலை 5 மணி அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் செவிலியர்கள் அரசு ஊழியர்கள், காவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரோடு மக்கள் தங்கள் வீடுகளில் கைதட்டி அவர்களுக்கு ஆரவாரம் செய்தனர்.
இன்று காலை 5 மணியுடன் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் வருகின்ற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க மத்திய அரசு பரிந்துரை செய்தது.
அதன்படி இன்று ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஈரோடு பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட்டில் கடைகள் திறந்து இருந்தன. மேலும் ஒரு சில டீக்கடைகளும் திறந்து இருந்தது. ஆவின் பால் மற்றும் மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கியது.
50 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின. பஸ்களிலும் குறைந்த அளவே பயணிகள் சென்றனர். கொரோனா பீதி காரணமாக வேலைக்கு செல்லும் ஊழியர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் என பெரும்பாலானோர் முக கவசத்துடன் செல்வதை காண முடிந்தது.
கோபி பஸ் நிலையத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கின. ஆனால் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்தனர்.
இதேபோல் அந்தியூர், சத்தியமங்கலம், பெருந்துறை, புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடைகள் திறந்திருந்தன. பஸ்கள் இயங்கினாலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. பவானியில் கடைகள் வழக்கபோல் திறந்து இருந்தது. பஸ்களும் இயங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய கோவில்களின் திருவிழாக்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரிய ஜவுளி கடைகள் நகை நிறுவனங்கள் கடைகள் 31-ந்தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறும்போது:-
ஈரோடு மாவட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எந்தப் பகுதியில் இருந்தார்களோ அந்த பகுதி மக்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
தற்போது ஈரோடு உள்பட தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று முடிவு செய்யும் அதன் பிறகுதான் நான் எதுவும் கூற முடியும் என்றார்.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அருகே உள்ள 60 வேலம்பாளையம், குணாங்காட்டு வலசு, திருக்கல்காட்டுத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (75) விவசாயி. இவரது மனைவி பருவதம் (70). இவர்களது மகன் பிரகாஷ். இவர் கோவையில் குடும்பத்துடன் தவசித்து வருகிறார்.
துரைசாமி - பருவதம் மட்டும் திருக்கல்காட்டுத் தோட்டத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் துரைசாமியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளை கும்பல் தூங்கிக்கொண்டிருந்த துரைசாமி மற்றும் அவரது மனைவி பருவதத்தை கட்டையால் தாக்கினர். இதில் அவர்கள் மயக்கம் அடைந்தனர்.
பின்னர் அவர்களின் செல்போன்களை பறித்துக்கொண்டு வீட்டின் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ஒன்றரை லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து அவரது மகன் பிரகாசுக்கு கொடுத்த தகவலின் பேரில் கோவையிலிருந்து விரைந்து வந்த அவர் உடனடியாக அரச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் காயமடைந்த விவசாயி துரைசாமி மற்றும் அவரது மனைவி பருவதம் ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. மேலும் மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வஞ்சரம், ஊழி,பாறை, சங்கரா, கொடுவாய், அயிரை, மத்தி, நெத்திலி, சூறை, கருப்பு வாவல், இறால், நண்டு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரோடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ வஞ்சரம் மீன் ரூ. 700-க்கு விற்பனையானது. தற்போது கிலோவுக்கு ரூ. 100 வரை அதிகரித்து உள்ளது. ஊழி மீன் ஒரு கிலோ ரூ. 450-க்கு விற்பனையானது. தற்போது ரூ. 50 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ. 450-க்கு விற்ற பாறை மீன் தற்போது 500-க்கு விற்கப்படுகிறது. இறால் ஒரு கிலோ ரூ. 500-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ நண்டு முன்பு 300-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ. 500-க்கு விற்பனையாகிறது.
ஆற்று மீன்களான ரோகு, கெண்டை மீன்கள் ரூ. 150-ல் இருந்து 180-க்கு விற்பனையாகிறது.
ஈரோடு தலைமை தபால் நிலைய உதவி போஸ்ட் மாஸ்டர் சஞ்சீவி கூறியதாவது:-
தனியார் கொரியர் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்ப தற்போது கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தபால் மூலம் முறையான அனுமதி பெற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பருத்தி நூல் இலைகளில் உற்பத்தி செய்யப்படும் முக கவசங்களுக்கு பல்வேறு நாடுகளில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெற்ற ஈரோடு மாஸ்க் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து மாஸ்க் பார்சல்களை அனுப்பி வைக்கின்றனர்.
சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை தவிர அமெரிக்கா, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கடந்த ஒரு வாரமாக முக கவசம் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 1500 கிலோ எடை கொண்ட முக கவசம் அனுப்பப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதே நேரத்தில் இது சம்பந்தமான வதந்திகளும் சமூக வலைத்தளங்கான வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் பரப்பி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் ஈரோடு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகிறது. இதன் காரணமாக கோழி மற்றும் ஆட்டு இறைச்சி வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பற்றிய சரியான காரணம் தெரியாமல் வீணாக வதந்தியை பரப்பும் நபர்களை கண்டுபிடிக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன்பேரில் பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வதந்தியை பரப்பும் நபரை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பிட்ட வாட்ஸ்-அப் எண்ணை சைபர் கிரைம் உதவியுடன் தேடி வந்தனர்.
இதில் செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் வதந்தியை பரப்பியவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி நடுப்பட்டி அருகே உள்ள கொங்கம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 30) என்பதும், அவர் நடுப்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வீண் வதந்திகளை வாட்ஸ்-அப்பில் பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்தனர். பின்னர் அவர் பெருந்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மாஜிஸ்திரேட்டு 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக கோபியில் உள்ள வீட்டிலும், அலுவலகத்திலும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்திக்க வரவேண்டாம் என்று அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தோட்டத்தில் உள்ள கதவின் முன்பாகவும், கோபி புதுப்பாளையத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்திலும் ஒரு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், "கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு 16-3-2020 முதல் வருகிற 31-3-2020 வரை கோபியிலும், சென்னையிலும் அமைச்சரை (கே.ஏ. செங்கோட்டையன்) சந்திக்க வருவதைத் தவிர்த்து பொதுமக்கள் மற்றும் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.
அந்தியூர்:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவர், பொய்யேரி கரையை சேர்ந்த 2 பேர் என 3 பேர் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றனர்.
அவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பினார்கள். இந்த தகவல் கிடைத்ததும் சுகாதாரத்துறையினர் அவர்களது வீட்டிற்கு விரைந்து சென்றனர். சின்னதம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் சென்ற மருத்துவ குழுவினர் மலேசியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 3 பேரை பரிசோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. ஆனாலும் அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு பச்சமாளி அடுத்த சஞ்சய் நகரைச் சேர்ந்தவர் ரவி (வயது53). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ரவி திருச்செங்கோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். மகனும், மகளும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். ரவி மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரவி சோகத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ரவி எலி மருந்தை (விஷம்) எடுத்துக் குடித்து விட்டார்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார். அவர் எந்த காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் அசோகபுரம், திருநகர் காலனி மின் பாதைகளில் உயர் அழுத்த மின் புதைவடம் கம்பிகளை மின் கம்பங்கள் மேல் பொருத்தும் பணி மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
இதையொட்டி நாளை (19-ந் தேதி) மற்றும் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
வி.சி.டி.வி. ரோடு, வீரபத்திரா வீதி, ஏ.பி.டி. ரோடு, காவேரி ரோடு, முனி சிபல் காலனி, அண்ணாமலை லே-அவுட், 16 ரோடு, வீரப்பன்சத்திரம், சி.என்.கல்லூரி, தேவராயன் காடு.
வி.சி.டி.வி. ரோடு, மாதவக்காடு, சிந்தன் நகர், கமலா நகர், கிருஷ்ணம் பாளையம், கக்கன் நகர், வி.ஜி.பி. நகர், ஆர்.கே.வி. நகர், ராஜகோபால் தோட்டம் ராம்மூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், வண்டியூரான் கோவில் பகுதி.
இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோபி:
கோபி அருகே உள்ள உக்கரம் தக்கார குட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதிஷ் (20). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சதிஷ் தனது நண்பரும் கல்லூரி மாணவருமான சிவக்குமாருடன் (21) மோட்டார் சைக்கிளில் புளியம்பட்டியில் இருந்து வந்தார். மோட்டார் சைக்கிளை சதிஷ் ஓட்ட சிவக்குமார் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
வண்டிப்பாளையம் மதிப்பானூர் துரையன் தோட்டம் பகுதியில் வளையில் மோட்டார் சைக்கிள் திரும்பிய போது திடீரென நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த பாறையில் மோதியது.
இதில் சதிஷ், சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்திமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சதிஷ் பரிதாபமாக இறந்தார்.
சிவக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






