search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மில்லில் கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்த காட்சி.
    X
    மில்லில் கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்த காட்சி.

    பவானி அருகே மில்லில் பணியாற்றிய பீகார் தொழிலாளிக்கு கொரோனா அறிகுறி

    பவானி அருகே மில்லில் பணியாற்றிய பீகார் தொழிலாளிக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால் கலெக்டர் கதிரவன் நேரில் சென்று மில்லை மூடுமாறு உத்தரவிட்டார்.
    பவானி

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மைலம்பாடி போத்தநாயக்கன் புதூரில் சேகர், கருப்புசாமி ஆகியோரின் மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இவர்களில் 2 பேர் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு 2 நாட்களுக்கு முன் மீண்டும் வேலைக்கு திரும்பி வந்துள்ளனர்.
    அவர்களில் ஒருவருக்கு காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்பட்டதால் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்கு கொரோனோ அறிகுறி காணப்பட்டதால் கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், பவானி தாசில்தார் பெரியசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவ குழுவினர் மில்லில் தங்கி உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்தனர்.
    இதனை தொடர்ந்து பீகார் சென்று திரும்பிய 2 தொழிலாளர்களும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் கலெக்டர் ககிரவன் மில்லில் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது மில்லை மூடுமாறு உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து மில் சீல் வைக்கப்பட்டது. மின் இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்பட்டது.மேலும் கவனக்குறைவாக செயல்பட்ட மில் உரிமையாளர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் 3 பேர், மில் உரிமையாளர்கள் குடும்பத்தினர் உள்பட 9 பேரையும் தொடர்ந்து 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து பருவாச்சியில் உள்ள  தனியார் பால் பொருள் உற்பத்தி ஆலையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கடந்த 6 மாதமாக வெளி மாநில தொழிலாளர்கள் புதிதாக வேலைக்கு வரவில்லை எனவும், இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்கு செல்லவில்லை என்பதும் தெரிய வந்தது. ஆய்வின் போது பவானி தாசில்தார் பெரியசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், மைலம்பாடி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் உள்பட பலர் உடன் சென்றனர். 
    Next Story
    ×