என் மலர்
ஈரோடு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியினை வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து பலர் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பண உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.70 கோடி கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் 90 சதவிகிதம் தயார் நிலையில் உள்ளது.
தனியார் பள்ளிகளில் ஊரடங்கின் போது மாணவர்களின் கல்வி கட்டணம் கட்டாய வசூல் செய்யப்படுவது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்..
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
முதல்வரின் அறிவுரைப்படி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடமாடும் காய்கறி வாகனசந்தை அமைக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தின் உதவியுடன் புதிய ராட்சத எந்திரம் மூலம் கிருமி நாசினியை புகையாக தெளிக்கும் பணி தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு மற்றும் கோபி பகுதியில் செயல்படுத்தப்படஉள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கவும் அடிப்படை வசதிகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் நகைக்கடன் கட்டாய வசூல் குறித்து புகார் வந்தால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. இதில் நேற்று முன்தினம் மட்டும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகள், அருகில் உள்ள வீதிகள் ஆகியன தனிமைப்படுத்தப்படுகின்றன.
அதன்படி கோபிசெட்டிபாளையத்தில் கருமாயாவீதி, ராமர் எக்ஸ்டன்சன், தேர் வீதி, வாய்க்கால்ரோடு, ஜெயராம் வீதி, கிட்டாச்சாமி வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, கடை வீதி, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் சென்று தனிமைப்படுத்துவதற்கான விளக்கத்தை அளித்தனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியே வராத வகையிலும், மற்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத வகையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. துப்புரவு பணியாளர்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கோபியில் குறிப்பிட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு 1,800 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேவையான தண்ணீர், காய்கறி, மருந்து போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்” என்றனர்.
இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரோடு மாநகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் தொடர்பு உடைய பகுதிகளை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரும் வகையில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் நேற்று ஈரோடு மண்டபம் வீதி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. மரப்பாலம் முதல் வளையக்கார வீதி அருகே உள்ள வாணிப பிள்ளையார் கோவில் பகுதி வரை முற்றிலும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுபோல் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் சில வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளுக்கு வெளி நபர்கள் உள்ளே செல்லவும், இங்கு இருப்பவர்கள் அத்தியாவசிய தேவை தவிர்த்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இங்கு உள்ள பொதுமக்கள் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட உள்ளனர். தேவையான பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்படும்.
கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீதிகளில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுடன் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சென்றார். அப்போது அவர் வீடுகளில் தனித்து இருந்து பொதுமக்களிடம், ‘அனைவரும் அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்பு தந்து பாதுகாப்புடன் இன்னும் சில நாட்கள் தனித்திருங்கள். அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டில் இருந்து ஒருவர் மட்டும் வெளியே சென்று வாருங்கள்’ என்று பொதுமக்களிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்தார். பின்னர் சுகாதார பணியாளர்களுக்கு அமைச்சர் உணவு வழங்கினார்.
அமைச்சர் கே.சி.கருப்பணனுடன் பேரூராட்சி செயல் அலுவலர் வீ.ராமகிருஷ்ணன், நிலவள வங்கித் தலைவர் யு.எஸ்.சுந்தரராசன், ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் எ.ஈஸ்வரமூர்த்தி, துணை தலைவர் பங்க் பாலு, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ராதா உள்பட பேரூராட்சி பணியாளர்கள் இருந்தனர்.
இதேபோல் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற சுகாதார பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் பேரூராட்சி, சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்ததுடன், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவரின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் டாக்டர் ஒருவர் பரிசோதனை செய்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிராமப்புற பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அரசின் அறிவுப்புகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா பரவி உள்ளதாக அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினார்கள். இது குறித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 17 வயது மற்றும் 19 வயது கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்தனர்.
கைதான 17 வயது மாணவர் கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கூடத்திலும், 19 வயது மாணவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 19 வயது மாணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் 19 வயது மாணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே காலனியில் ரெயில்வே மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டது.
அந்த பெண் டாக்டர் ஈரோடு ரெயில்வே ஆஸ்பத்திரியில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன் பணி மாறுதல் பெற்று கோவை போத்தனூர் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார். அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பிற டாக்டர்கள் நர்சுகள் மற்றும் பிற பணியாளர்கள் என 32 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் அவர்களின் குடும்பத்தினரையும் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ரெயில்வே ஆஸ்பத்திரி முழுமையாக மூடப்பட்டு உள்ளது. பெண் டாக்டருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் சிகிச்சை அளித்தவர்கள் விவரம், அவர் சென்று வந்த இடங்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கவுந்தப்பாடி அருகே மாணக்காவலசு கிராமத்தில் வசிப்பவர் முருகேசன். இவரது மனைவி கவிதா (வயது 34). இவர்கள் கடந்த 14 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
முருகேசனுக்கு குடி பழக்கம் உள்ளதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்படும். சம்பவத்தன்று முருகேசன் குடித்து விட்டு வரவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. கணவனிடம் கோபித்துக்கொண்டு கவிதா வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.
முருகேசன் அவரது மகன் இருவரும் சேர்ந்து கவிதா அறையை தட்டினர். கதவை திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது விட்டத்தில் சேலையில் தூக்கிட்டு கவிதா பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கவுந்தப்பாடி போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கவிதாவின் தந்தை துளசிமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
இந்நிலையில், கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த நபர் (வயது 40) ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.
ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் அச்சத்தினால் ஈரோட்டின் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், மல்லிகை பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே விடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் நாளொன்றுக்கு 25 டன் பூக்கள் வீணாகி வருவதுடன், ரூ.1 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என பூ சாகுபடி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதுடன், தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திகினாரை மற்றும் பனகள்ளி ஆகிய கிராமங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் 30 பேரும் நேற்று தாளவாடி வந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் தாளவாடி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சிவா தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதே போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தாளவாடி திரும்பிய 2 வாலிபர்களையும், இத்தாலியில் இருந்து திரும்பி வந்த பெண்ணையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும் போது, வெளிமாநிலங்களில் இருந்து தாளவாடி பகுதிக்கு திரும்பியவர்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மேலும் அவர்கள் தங்கள் விவரங்களை வருவாய் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தகவல் பரப்புவோர் மீது போலீஸ் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் துக்கநாயக்கன் பாளையம் கிழக்கு மலை ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்த பூபாலன், இந்திரா வீதி கார்த்திகேயன் ஆகியோர் சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துக்கநாயக்கன் பாளையம் ஆரம்ப சுகதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து பூபாலன், கார்த்திகேயன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்துள்ளார்.
கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கண்ணாடி புதூர் சிறுவலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). கார் டிரைவர். இவரது மனைவி அனு (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராமச்சந்திரன் தனது நண்பர் காரை கவுந்தப்பாடி அய்யன் காட்டை சேர்ந்த கார்த்தியிடம் அடமானம் வைத்து ரூ. 25 ஆயிரம் பெற்றுள்ளார். நீண்ட தாமதத்திற்கு பிறகு கார்த்தியிடம் ராமச்சந்திரன் தான் வாங்கிய கடனை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கார்த்தி, ராமச்சந்திரன் மனைவி அனுவிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அனு தனது கணவர் ராமச்சந்திரனிடம் கூறி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த ராமச்சந்திரன் குருணை மருந்தை தின்று மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அனு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராமச்சந்திரன் இறந்தார்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






