என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு, கோபி பகுதியில் விளை நிலங்களில் உரக்கடைக்காரர்கள் உர மூட்டைகளை கொண்டு சென்று விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இதனை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) முருகேசன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு தொடரும் நிலையில் விவசாயிகளுக்கு உரம், இடு பெருட்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வராமல் இருக்க வேண்டும். அதற்காக அந்தந்த பகுதியில் உள்ள உர வினியோகஸ்தர்கள் வாகனங்களில் தேவையான உரங்களை வயல் வெளிக்கு எடுத்து சென்று வினியோகம் செய்கின்றனர்.
மாவட்டத்தில் தேவையான அளவு உரம் உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. கோபி பகுதியில் 8 ஆயிரத்து 122 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் 3 உர விற்பனையாளர்கள் கரட்டடிபாளையம், பங்களா புதூர், பா. வெள்ளாள பாளையம், நஞ்ச கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களில் 16 டன் உரங்களை வயல்வெளிகளில் வைத்து விற்பனை செய்துள்ளனர்.
எனவே உரம் தேவைப்படும் விவசாயிகள், உர உற்பனையாளர் அல்லது வேளாண்மை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தால் வயல்வெளிக்கு வந்து வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ஈரோடு வேளாண்மை துணை இயக்குனர் ஆசைத்தம்பி, கோபி வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவதயானள், வேளாண்மை அதிகாரி (தரக்கட்டுப்பாடு) வைத்தீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடியில் கோடை வெயிலுக்கு ஏற்ற நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. கவுந்தப்பாடி பஸ் நிலையத்தில் 3 கண் உடைய சீவிய காய் , தோண்டி எடுத்த 3 நுங்கு ரூ. 10-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் போதிய வருமானம் இல்லாததால் வேறு வேலைக்கு சென்று விட்டதால் ஒரு சிலர் மட்டுமே பனை மரம் ஏறி பதநீர் இறக்குவது, நுங்கு விற்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்புக்காக கடந்த, 25-ந் தேதி முதல் ஊரடங்கு தொடர்கிறது. இதில் ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலை, பெரிய மாரியம்மன் கோவில் பகுதி, மணிக்கூண்டு பகுதி, காந்திஜி சாலை, காளை மாட்டு சிலை பகுதி, ரெயில் நிலையம் என பல பகுதிகளிலும், 1,000-க்கும் மேற்பட்ட வெளியூர் தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள், ஊனமுற்றவர்கள், மனநிலை பாதித்தோர், வீடு இருந்தும் வெளியே உண்பர்கள் என உள்ளனர்.
இவர்களுக்கு, ஈரோடு சிறகுகள், அக்ஷயம், தாய்மை, உணர்வுகள் போன்ற பல்வேறு அறக்கட்டளை சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், பொட்டலமாக உணவு வழங்கி வந்தனர். மேலும் பலர் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட், பிரட், சுண்டல், பால் என பலவற்றையும் வழங்கினர்.
இதனால், ஈரோட்டில், மாநகராட்சி பள்ளிகளில், 180 பேர் வரை தங்க வைக்கப்பட்டு, பொது அமைப்பினர் உணவு வழங்குகின்றனர். ஆனால், 800-க்கும் மேற்பட்டோருக்கு உணவு கிடைக்காததால், ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள, 11 அம்மா உணவகங்களையும் நம்பி வருகின்றனர். தற்போது இவர்கள் அம்மா உணவகங்களில் சாப்பிட தொடங்கியுள்ளதால் அம்மா உணவுகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக உள்ளது.
இதுபற்றி, அம்மா உணவகத்தினர் கூறியதாவது:-
கொரோனாவுக்கான ஊரடங்குக்கு முன், ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் தினமும், 300 நபர்கள் சாப்பிடும் அளவுக்கு காலை, மாலையில் இட்லி, சாம்பார், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் தயாரித்து வழங்கினோம்.
தற்போது, இரவில் ரவை உப்புமா, சில நாள் சாம்பார் சாதம் வழங்குகிறோம். ஒரு இட்லி, ஒரு ரூபாய், சாம்பார் சாதம், ஐந்து ரூபாய், தயிர் சாதம், மூன்று ரூபாய், உப்புமா, ஐந்து ரூபாய் என்ற விலையில் விற்கிறோம். தற்போது, ஒவ்வொரு உணவகத்திலும் ஒவ்வொரு நேரமும் கூடுதலாக, 200 நபர்களுக்கு உணவு தயாரித்து வழங்குகிறோம்.
இவ்வாறு, 11 உணவகத்திலும், 2,200 பேருக்கு கூடுதல் உணவு தரப்படுகிறது இருந்தும், வீதிகளில் வசிப்போர் அதிகமாக வருவதால், அவ்வப்போது கூடுதலாக, 50 பேருக்கு பகிர்ந்து வழங்கும் நிலை கூட ஏற்படுகிறது.
பொது அமைப்பினர், பொதுமக்கள் வழங்கும் உணவை, அம்மா உணவகத்தில் வைத்து வழங்க அனுமதித்தால், கடைசியாக வரும் பலரும் பசியாறுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஈரோடு:
பவானிசாகர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருபவர் வாணிஸ்ரீ. இவர் நேற்று மதியம் 12 மணி அளவில் மீன்வள பாதுகாவலர் ஷர்புதீன் மற்றும் குத்தகைதாரரின் மேலாளர் சம்பத் குமார் ஆகியோருடன் பவானிசாகர் மேட்டுப்பாளையம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் மூட்டை முடிச்சுகளுடன் வந்துகொண்டு இருந்தார். அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்திருந்த மூட்டையில் சுமார் 30 கிலோ ரோகு மற்றும் ஜிலேபி மீன்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் தூர மொக்கையை சேர்ந்தவர் என தெரிய வந்தது. மேலும் பவானிசாகர் அணையில் சட்ட விரோதமாக மீன்களை திருடி வந்ததும் தெரியவந்தது.
சிறிது நேரம் கழித்து அதே பகுதியில் மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் மூட்டை முடிச்சுகளுடன் வந்தார். அவரையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது வண்டியின் முன்புறம் இருந்த மூட்டையில் 20 கிலோ ரோகு மற்றும் மிர்கால் மீன்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் உள்ள சீட்டை விலக்கி பார்த்தபோது அதில் சுமார் 15 கிலோ ரோகு மட்டும் ஜிலேபி மீன்கள் இருந்ததும் தெரியவந்தது.
இவரும் பவானிசாகர் அணையில் சட்ட விரோதமாக மீன்களை பிடித்து வந்தது தெரியவந்தது. பிடிபட்ட இருவரிடமிருந்தும் சுமார் 65 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.6450 ஆகும். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பலியானார். இதைத்தொடர்ந்து பெருந்துறையில் கண்ணகி வீதி, திலகர் வீதி உள்பட 9 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதபடியும், அங்குள்ளவர்கள் வெளியே வரமுடியாத படியும் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பெருந்துறை கண்ணகி வீதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சுகாதார துணை இயக்குனர் சவுண்டம்மாள், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் மணி உள்பட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த வரதநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தாளார்குளம் ஏரி உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியில் மேட்டூர் அணையின் இடதுகரை பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டபோது மீதியான தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது இந்த ஏரியில் மீன் வளர்க்க ஒருவர் குத்தகைக்கு எடுத்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து அங்கு மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதற்காக குளத்தில் உள்ள மீன் குஞ்சுகளுக்கு உணவாக அவர் கருவாடுகளை சிறு சிறு பொடிகளாக்கி 3 நாட்களுக்கு ஒரு முறை பரிசலில் சென்று குளத்தில் வீசி வந்தார். அவர் சென்னையில் இருந்து கருவாடுகளை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் தடை பட்டதால் அவரால் கருவாடுகளை வாங்க முடியவில்லை. இதனால் மீன்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்த நிலையில் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தர்பூசணி பயிரிட்டு உள்ள விவசாயிகள் அதை பறித்து விற்க முடியாமலும், வாங்க வியாபாரிகள் கிடைக்காததாலும் அதை அப்படியே விட்டு விட்டனர். இதனால் தர்பூசணிகள் அழுகியும், வெயிலில் வெந்தும் காணப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மீன் பிடிக்க குத்தகை எடுத்த ஒப்பந்ததாரர், பவானி பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து அழுகிய மற்றும் வெயிலில் வெந்த தர்பூசணிகளை வாங்கி வந்து ஏரிக்கரையில் குவித்து உள்ளார். அந்த தர்பூசணிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பரிசலில் கொண்டு சென்று குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக வீசி வருகிறார். அதுமட்டுமின்றி கம்பு, மக்காச்சோளம் போன்றவைகளையும் பொடியாக்கி மீன்களுக்கு உணவாக போடுகிறார்.
கடந்த 8-ம் தேதி முதல் மூச்சு திணறல் காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 60 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முதியவருக்கு ஏற்கனவே சர்க்கரை, மூளை நரம்பு பாதிப்பு போன்ற பிரச்சனை இருந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த முதியவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதியவர் வசித்து வந்த பெருந்துறை பகுதியில் 1 கிமீ சுற்றுக்கு வீதிகளை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஈரோட்டை சேர்ந்த 29 வயது இளம்பெண் அவரது 10 மாத குழந்தை, மற்றும் வேலைக்கார பெண் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஈரோட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தான் அவர் கோவைக்கு மாறுதலாகி சென்றார். அப்போது தான் அவருக்கும் அவரது குழந்தை வேலைக்கார பெண்ணுக்கும் கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் இளம்பெண், அவரது குழந்தை, வேலைக்கார பெண் ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இது குறித்து இளம்பெண் கூறியதாவது:- எனக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என்னை விட எனது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருந்ததை கண்டு மிகவும் கவலை அடைந்தேன்.
எனக்கு நண்பர்கள், வேலை செய்த இடத்தில் இருந்தவர்கள் நம்பிக்கை அளித்தனர். கொரோனா தொற்று குறித்து யாரையும் பழி சொல்லக்கூடாது. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
எந்த ஒரு நபரும் நோய் பரப்ப வேண்டும் என விரும்ப மாட்டார்கள். நாம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் இருந்து 7 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தனர். அவர்கள் ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் மத பிரச்சாரம் செய்தனர். அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது. அவர்களில் ஒருவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
மற்ற 6 பேர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்த போது 3 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் சுற்றுலா விசா மூலம் ஈரோடு வந்ததாகவும், விசா விதியை மீறி மதப்பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதாகவும், மேலும் தங்களுக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பது தெரிந்தும் கூட அவைகள் பொதுமக்களுக்கு பரவும் வகையில் வீடுகளுக்கு சென்று மத பிரச்சாரம் செய்ததாக ஈரோடு தாசில்தார் பரிமளா தேவி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து தாய்லாந்தில் இருந்த வந்த சொவங்க் டொன்றாமரன், வாங்கிமர்பொ, இராமன்தாவசக், லாட்ச் கொரால்டு, சோஹனையாமனட், முகம்மது ஆகிய 6 பேர் மீது பாஸ்போர்ட் விதி மீறல், நோய்களை பரப்புதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒருவர் கூட வைரஸ் தாக்குதலால் உயிர் இழக்க கூடாது என இரவு, பகல் பாராது ஒவ்வொரு அரசுத் துறையும் செயல்பட்டு வருகிறது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரின் ஒரு நாள் ஊதியம் ரூ. 70 கோடி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
மாணவர்கள் நலன் கருதி 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக அரசு யூடியூப் சேனல் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்று தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாட்டுப்புற கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள், திருமண நிகழ்ச்சிக்கு இசை நிகழ்ச்சிகள் நடத்துவோர் என அனைவருக்கும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






