என் மலர்
ஈரோடு
கடத்தூர்:
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப் படுத்தப்படும் என அரசின் அறிவுரை வழங்கி வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சிறிதும் பாதிக்காத வகையில் அவர்களுக்கான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கடைக்காரர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் கடைகளுக்கு திறக்கப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் கடைகளைத் திறக்கலாம் என அரசு உத்தரவு பிரப்பித்துள்ளது.
இந்த நிலையில் அரசின் அறிவிப்புகளை சிறிதும் மதிக்காமலும், சமூக விலகளை கடைபிடிக்காமலும், பொருட்கள் மீது கூடுதலாக பணம் வைத்து விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து கடத்தூர் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகளில் கடத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், பேரூராட்சி அலுவலர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ஜெய்சில் குமார், பேரூராட்சி பணியாளர்கள் மோகன் செந்தில் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் ஓட்டல்களில் உணவு பொருட்களை பார்சல் மட்டுமே கட்டி வழங்க வேண்டுமென அறிவுறுத்தியும், அவற்றை மதிக்காமல் சில ஓட்டல்களில் மக்களை அமர வைத்து உணவு பரிமாறி வந்தனர்.
எலக்ட்ரிக்கடைகள், ஜவுளி கடை மற்றும் கண்ணாடி கடைகள் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்களுக்கு முதற்கட்டமாக அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து திறக்க கூடாது என எச்சரித்தனர்.
மேலும் இது போன்று செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.
ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 43). ஜவுளி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த 18-ந்தேதி தனது குடும்பத்துடன் மொடக்குறிச்சி அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
இந்தநிலையில் நேற்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். வீட்டில் இருந்த பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறிக்கிடந்தன.
மேலும் வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 16 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுபற்றி இளங்கோ ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கைரேகை நிபுணர்களும் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.
ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் மஞ்சள் ஏலம் நடைபெறும் 4 மார்க்கெட்டுகளில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கமும் ஒன்றாகும். அங்கு மஞ்சள் தரம் உயர்த்தப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் மஞ்சள் தூள், குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு தனி பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் பெரும்பாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.500-க்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மஞ்சள் தூளும் வழங்கப்படுகிறது. எனவே தேவையான மஞ்சள் தூள் தயாரிக்கும் பணி ஈரோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து சங்க ஊழியர் ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் மஞ்சள் மதிப்புக்கூட்டு பொருட்களாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகை பொருட்களுடன் மஞ்சள் தூளும் வழங்கப்படுகிறது.
மஞ்சள் தூள் தயாரிக்கப்பட்டு 100 கிராம் பாக்கெட்டுகளாக போடப்படுகிறது. கரூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்கு தேவையான மஞ்சள் தூள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்துக்கு 25 ஆயிரம் பாக்கெட்டுகளும், நாமக்கல் மாவட்டத்துக்கு 15 ஆயிரம் பாக்கெட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு தேவையான மஞ்சள் தூள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 50 ஆயிரம் பாக்கெட்டுகள் தேவைப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சங்கத்தில் 60 பணியாளர்கள் வேலை செய்வார்கள். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக குறைந்த தொழிலாளர்களை கொண்டு வேலை நடந்து வருகிறது. தற்போது மஞ்சள் தூள் தயாரிக்கும் பணியில் 10 தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான மஞ்சள் தூள் தயாரிக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மஞ்சள் மார்க்கெட் ஏலம் நடைபெற வில்லை. ஆனால் அதுவரை மஞ்சள் தூள் உற்பத்தி செய்வதற்கு தேவையான மஞ்சள், போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளியில் மஞ்சள் வாங்கும் தேவை இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சீனாபுரம், சுள்ளிப்பாளையம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், கராண்டிபாளையம், பொன்முடி, போலநாயக்கன்பாளையம், பாப்பம்பாளையம், சீலம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் மானாவாரி விவசாய நிலங்களாக உள்ளன. அங்கு நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டாலும், ஆழ்குழாய் கிணறுகளை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண்மை செய்து வருகிறார்கள். அங்கு தென்னை, வாழை, மரவள்ளி கிழங்கு, சேனை கிழங்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்கிறார்கள். இந்தநிலையில் ஆழ்குழாய் கிணறுகளை பயன்படுத்தி விவசாயிகள் பலர் சுமார் 350 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர். அந்த வாழை நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து புதுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி வாசுஆறுமுகம் கூறியதாவது:-
வாழைத்தார்கள் நன்கு வளர்ச்சி அடைந்துவிட்டன. ஆனால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால், வாழையை வெட்ட முடியவில்லை. இதனால் மரத்திலேயே வாழைத்தார்கள் பழுத்து வீணாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. வாழை இலைகளும் காற்றில் கிழிந்து வீணாகி விட்டன. ஒரு ஏக்கரில் 700 வாழைக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. இந்த வாழைகளை வளர்க்க மொத்தம் ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. எனது நிலத்தில் 2 ஏக்கரில் வாழையை சாகுபடி செய்துள்ளேன். இதுவரை சுமார் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலவு செய்துள்ளேன். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக முதலீடு செய்த பணம் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
வாழையில் நல்ல லாபம் கிடைக்கும் என்றே, ஆழ்குழாய் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்தோம். பெருந்துறை சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சுமார் 350 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.2 கோடி நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர்- கோவை ரோடு பகுதியில் 20 வயது மதிக்க தக்க வாலிபர் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் அவினாசி ஆகும். கடந்த 6 வருடங்களாக நம்பியூரில் வசித்து வந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். அவரது மருத்துவ அறிக்கையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை நம்பியூரில் அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் கொண்டு சென்றனர். இதற்கு நம்பியூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
அவர்கள் இங்கு உடலை புதைக் கூடாது. வாலிபரின் சொந்த ஊரான அவினாசிக்கு கொண்டு செல்லட்டும் என்றனர். தகவல் கிடைத்ததும் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், டி.எஸ்.பி. தங்கவேல், நம்பியூர் தாசில்தார் வெங்கடேசன், வட்டார ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அவர்கள் வாலிபரின் மரணம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரின் உடலை வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என எடுத்து கூறினார்கள். இதனை பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
நள்ளிரவு 1 மணி வரை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து வாலிபரின் உடலை கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகிறார்கள். நெல், வாழை, கரும்பு, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, மல்பெரி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் மரவள்ளி கிழங்கு குறைந்த தண்ணீரில் சிறந்த லாபம் தரும் பணப்பயிராக உள்ளதால், விவசாயிகள் ஏராளமானோர் சாகுபடி செய்துள்ளனர். அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்தாணி, ஆப்பக்கூடல், பர்கூர் உள்ளிட்ட இடங்களில் மரவள்ளி அதிகஅளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 10 மாத பயிரான மரவள்ளியை 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இங்கு விளைந்துள்ள மரவள்ளி கிழங்கு மூலமாக வெள்ளை ரவை, மைதா, ஜவ்வரிசி ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. மேலும், விவசாய கூலித்தொழிலாளர்கள் கிடைக்காததால் மரவள்ளி கிழங்குகள் அறுவடை செய்யப்படாமல் கிடக்கிறது. இதனால் மரவள்ளி சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்னனர்.
இதுகுறித்து பர்கூரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-
மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்ய குறைந்தபட்ச தண்ணீர் இருந்தாலே போதுமானது. இதனால் நாங்கள் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்துள்ளோம். மரவள்ளி கிழங்குகள் 10 மாதங்களில் நன்கு வளர்ச்சி அடைந்துவிடும். இங்கு அறுவடை செய்யப்படும் கிழங்குகள் அம்மாபேட்டை, எண்ணமங்கலம், சேலம் மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைப்போம்.
இதேபோல் கர்நாடகா மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். அங்கு ரவை, மைதா, ஜவ்வரிசி போன்ற உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் இருந்து கிடைக்கும் கழிவுகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. அதில் கொழுப்பு, மாவு, புரத சத்துகள் அதிகமாக உள்ளன.
இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் தொழிற்சாலைகளில் இருந்து மரவள்ளியை கொள்முதல் செய்வது கிடையாது. மேலும், கூலி ஆட்கள் கிடைக்காமல் பெரும் சிரமப்படுகிறோம். 10 மாதங்களில் வெட்டி எடுத்தால்தான் ஒரு டன்னுக்கு ரூ.8 ஆயிரம் வரை விலை கிடைக்கும்.
தாமதமானால் கிழங்கின் பால்தன்மை குறைந்து விறகுபோல் மாறிவிடும். இதனால் கிழங்குக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்படும். மேலும், கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும். இதன் காரணமாக பெரிய நஷ்டத்தை சந்திக்கும் விளைவு ஏற்படும். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகுதான் விவசாய கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு வருவார்கள். அதன்பிறகு நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் முகக்கவசம் கிடைக்காமல் பலர் சிரமப்பட்டு வருகிறார்கள். மார்க்கெட், கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் ஈரோட்டில் ஒருவர் சைக்கிளில் வீதிவீதியாக சென்று முகக்கவசம் விற்பனை செய்து வருகிறார். அவர் முக்கிய இடங்களுக்கு சென்று முகக்கவசம் விற்பனை செய்தார். அவரிடம் பொதுமக்கள் பலர் முகக்கவசங்களை வாங்கினார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மண்டல சிறப்பு கண்காணிப்பு குழு தலைவர் வெங்கடேஷ் மற்றும் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் லட்சுமி ஆகியோர் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி பெருந்துறை பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்தும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்டனர்.
அதைத் தொடர்ந்து கவுந்தப்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சென்று அங்குள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஜம்பை வட்டார மருத்துவ அலுவலர் தனலட்சுமி, பவானி வட்டார வளர்ச்சி துணை அலுவலர் கணேஷ்பிரியா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், செவிலியர்கள் உடன் இருந்தனர்.
மேலும் சத்தியமங்கலம் பகுதியில் 16 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 2071 குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயிரத்து 768 நபர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்டனர்.






