search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சள்தூள் பாக்கெட்டுகளை அடுக்கி வைக்கும் பெண்கள்
    X
    மஞ்சள்தூள் பாக்கெட்டுகளை அடுக்கி வைக்கும் பெண்கள்

    ஈரோட்டில் 5 ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் தயாரிக்கும் பணி தீவிரம்

    கோவையில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு தேவையான 5 ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் தயாரிக்கும் பணி ஈரோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் மஞ்சள் ஏலம் நடைபெறும் 4 மார்க்கெட்டுகளில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கமும் ஒன்றாகும். அங்கு மஞ்சள் தரம் உயர்த்தப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதில் மஞ்சள் தூள், குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு தனி பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் பெரும்பாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.500-க்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மஞ்சள் தூளும் வழங்கப்படுகிறது. எனவே தேவையான மஞ்சள் தூள் தயாரிக்கும் பணி ஈரோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து சங்க ஊழியர் ஒருவர் கூறியதாவது:-

    ஈரோடு வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் மஞ்சள் மதிப்புக்கூட்டு பொருட்களாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகை பொருட்களுடன் மஞ்சள் தூளும் வழங்கப்படுகிறது.

    மஞ்சள் தூள் தயாரிக்கப்பட்டு 100 கிராம் பாக்கெட்டுகளாக போடப்படுகிறது. கரூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்கு தேவையான மஞ்சள் தூள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்துக்கு 25 ஆயிரம் பாக்கெட்டுகளும், நாமக்கல் மாவட்டத்துக்கு 15 ஆயிரம் பாக்கெட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு தேவையான மஞ்சள் தூள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 50 ஆயிரம் பாக்கெட்டுகள் தேவைப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சங்கத்தில் 60 பணியாளர்கள் வேலை செய்வார்கள். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக குறைந்த தொழிலாளர்களை கொண்டு வேலை நடந்து வருகிறது. தற்போது மஞ்சள் தூள் தயாரிக்கும் பணியில் 10 தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான மஞ்சள் தூள் தயாரிக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும்.

    ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மஞ்சள் மார்க்கெட் ஏலம் நடைபெற வில்லை. ஆனால் அதுவரை மஞ்சள் தூள் உற்பத்தி செய்வதற்கு தேவையான மஞ்சள், போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளியில் மஞ்சள் வாங்கும் தேவை இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×