என் மலர்
ஈரோடு
அம்மாபேட்டை:
ஊரடங்கு தொடர்ந்து அமுலில் உள்ள நிலையில் அம்மாபேட்டை அருகே கோனேரிப்பட்டி கதவனை போலீஸ் சோதனை சாவடி ஈரோடு - சேலம் மாவட்ட எல்லை என்பதால் அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை அனுமதிப்பது இல்லை.
இந்நிலையில் அந்த வழியாக வந்த 4 டிப்பர் லாரியில் அரசு பணிக்காக என ஸ்டிக்கர் ஒட்டிகொண்டு எம் சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அம்மாபேட்டை அருகே உள்ள கருங்கரடு பகுதியில் இருந்து ஒரு கல் குவாரியில் எம் சாண்ட் மணல் ஏற்றி கொண்டு எடப்பாடி பகுதியில் கட்டுமான பணிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
மேலும் சேலம் மாவட்டத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அனுமதி கடிதத்தை வைத்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் வாகனம் இயங்குவதால் அதற்கான அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும் எனவும், மேலும் புறப்படும் இடம் சேரும் இடத்திற்கான அனுமதிச்சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என எச்சரித்து அனுப்பினர்.
இது போல் சில வாகனங்களில் சம்பந்த மில்லாமல் அரசு பணிக்காக என ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். அவர்களையும் போலீசார் விசாரித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுற்றுவட்டார கிராம பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது கரும்பு வெட்டுதவற்கான சீசன் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூர் ஆட்கள் இன்னும் வந்து சேரவில்லை.
சமீபத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி சுமார் 30 தொழிலாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து சென்னிமலை பகுதிக்கு வந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசங்கள் அணியாமலும் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டதால் சென்னிமலை போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து பின்னர் அவர்களது சொந்த ஊருக்கே அனுப்பி வைத்தனர்.
அதே ஆட்கள் வெட்டி போடப்பட்ட கரும்புகள் வேறு ஆட்கள் மூலம் லாரியில் ஏற்றி ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது கரும்பு வெட்டுவதற்கு ஆட்கள் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், சென்னிமலை பகுதியில் தற்போது தான் கரும்பு வெட்டுவதற்கான சீசன் தொடங்கியுள்ளது. இப்போது தொழிலாளர்கள் இருந்தால் தான் ஒவ்வொரு தோட்டமாக கரும்புகளை வெட்டுவதற்கு சரியாக இருக்கும். ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூர் தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. நாங்கள் வங்கியிலும், வெளியிலும் கடன் வாங்கித்தான் கரும்பு பயிரிட்டுள்ளோம். அதனால் ஊரடங்கு சட்டத்தை மதித்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கரும்பு வெட்ட வரும் தொழிலாளர்களை அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரையில் ஆசிரியர்கள் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர். முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விருப்பம் உள்ள ஆசிரியர்களின் பெயர்கள், செல்போன் எண் மாவட்ட கலெக்டர்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கொரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பின்னர் முதல்வர் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பார்.
பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடபுத்தகங்கள், ஷூ, ஷாக்ஸ் போன்ற பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 ஆக இருந்தது.
சென்னைக்கு அடுத்தபடியாக ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக இருந்ததால் ஈரோடு மாவட்டத்தை மத்திய அரசு சிகப்பு மண்டலமாக அறிவித்தது.17 இடங்களை சீல் வைத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதில் ஒருவர் பலியானார். 65 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மீதி உள்ள 4 பேர் மட்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களும் குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினார்கள்.
அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் ஈரோடு மாவட்டம் கொரோனோ தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.
ஈரோடு சிகப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற வாய்ப்புள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளும் ஓரளவு தளர்த்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. கணவர் மற்றும் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் கடந்த 2017-ம் ஆண்டு அந்த பெண்ணின் 2-வது கணவரும் இறந்துவிட்டார். இதனால் அந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
அப்போது 2-வது கணவரின் நண்பரான பிரபு என்பவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து உள்ளார். கூலித்தொழிலாளியான அவர், அந்த பெண்ணின் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இந்த பழக்கத்தை பயன்படுத்தி பிரபு அந்த பெண்ணை வற்புறுத்தி உல்லாசம் அனுபவித்தார். இதை அந்த பெண்ணுக்கு தெரியாமல் செல்போன் மூலம் பிரபு படம் பிடித்து உள்ளார். பின்னர் அந்த படத்தை காட்டி அவரை மிரட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதற்கிடையே அந்த பெண், இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறினார்.
இதையறிந்த பிரபு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று செல்போனில் இருந்த வீடியோவை மீண்டும் காட்டியதுடன், ‘நான் அழைக்கும்போதெல்லாம் உல்லாசத்துக்கு வரவேண்டும். இல்லையென்றால் உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன்’ என கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண், கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 70 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 65 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினார்கள். முதியவர் ஒருவர் இறந்தார்.
தற்போது பெருந்துறை மருத்துவமனையில் 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த 12 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தபட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை யாருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் முழுமையாக குணமடைந்து விட்டனர். அவர்கள் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.
அவர்களை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பழங்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார்கள்.
14 நாட்கள் வரை புதியதாக கொரோனா தொற்று இல்லாவிட்டால் தற்போது சிகப்பு மண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் ஊரடங்கில் தற்போதுள்ள கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து ஒரு சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 43). ஜவுளி நிறுவன உரிமையாளர். இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில்ருந்த 6 பவுன் நகையும், ரூ.40 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
திருடர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயரத், பழனிவேல், ராமராஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
திருட்டு போன பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சம்பவத்தன்று 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு பெரியசேமூர் எல்லப்பாளையம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ் (38), மேட்டூர் நங்கவள்ளியை சேர்ந்த ஏழுமலை (28), திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா (24) ஆகியோர் என்பதும், மற்றொருவர் ஈரோடு எல்லப்பாளையத்தை 18 வயது வாலிபர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் சேர்ந்து இளங்கோவின் வீட்டில் நகை-பணத்தை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 பவுன் நகையை மீட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரும் கல்வியாண்டில் 50 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அதேபோல 35 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று உள்ளதால் சீருடைகள் தைக்கும் பணி நடைபெறவில்லை. பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கழித்து மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கப்படும். மாணவர்களுக்கான காலணிகள் தயாராக உள்ளன. ஆசிரியர், ஆசிரியைகள், தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வசதி படைத்தவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்யலாம். அவ்வாறு செய்பவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு பொருள் உதவிகளை வழங்கலாம். அவ்வாறு பொருட்கள் வழங்கும்போது கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதியில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது. இவர்களில் கடந்த 22-ந் தேதி வரை 65 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள். ஒரு முதியவர் மட்டும் இறந்தார். மீதமுள்ள 4 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதன் பின்னர் கடந்த 11 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. கடந்த 20-ந்தேதி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் இன்று வரை அதாவது 7 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் இன்று வீடு திரும்புகிறார்கள்.






