என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சிவகிரி வள்ளிபுரம் அருகே உள்ள நாவாங்கட்டு தோட்ட பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாய கூலி தொழிலாளி. இவர் 33 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த ஆடுகளை வழக்கம் போல் தோட்டத்தில் மேய்த்துவிட்டு வீட்டின் அருகில் உள்ள பட்டியில் அடைப்பார். அதேபோல் நேற்று முன்தினம் மேய்த்துவிட்டு மதியம் 12 மணி அளவில் வீட்டுக்கு ஓட்டி வந்தார்.
பின்னர் வீட்டின் அருகே பெரிய பிளாஸ்டிக் வாளியில் ஆடுகள் குடிப்பதற்காக தண்ணீர் வைத்தார். அந்த தண்ணீரை ஆடுகள் குடித்தன. இதில் 20 ஆடுகள் திடீர் என்று வாயில் நுரை தள்ளியபடி ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்தன. சிறிது நேரத்தில் 20 ஆடுகளும் இறந்தன. இதைப்பார்த்த தங்கவேல் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோட்டில் இருந்து கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகளின் உடல்களை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த ஆடுகளின் உடற்கூறுகள் ரசாயன பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்புதான் ஆடுகள் குடித்த தண்ணீரில் விஷம் கலந்து இருந்ததா? அல்லது பிளாஸ்டிக் வாளியில் உள்ள ரசாயனம் விஷமாக மாறியதா? என்பது தெரிய வரும்.
20 ஆடுகளும் தண்ணீர் குடித்தபோது மற்ற 13 ஆடுகள் ஒதுங்கி நின்றதால் உயிர் தப்பின. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேஷ் வழக்கு பதிவு செய்து ஆடுகள் தண்ணீர் குடித்த வாளியில் யாராவது விஷம் கலந்து விட்டனரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆயிக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது அனைத்து நிறுவனங்களும் இயங்க தடை விதிக்கபட்ட நிலையில் வடமாநில தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்து தவித்து வந்தனர். இந்த நிலையில் இங்கு தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் கணக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதற்காக அவர்களின் விவரங்களை கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட இ- பாஸ் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த இ-பாஸ் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையங்கள் மூலம் வழங்க முடிவு செய்யபட்டது. இது குறித்து தகவல் அறிந்த வட மாநில தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
காலை 10 மணியளவில் இ-சேவை மையம் திறக்கப்பட்ட பின்னர் அங்கு சர்வர் வேலை செய்யாதது தெரிய வந்தது. இது குறித்து தாசில்தாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சர்வர் இயக்கத்திற்கு வந்த பின்னர் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் காத்து நின்ற வடமாநிலத் தொழிலாளர்கள் ஏக்கத்துடன் திரும்பி சென்றனர்.
ஈரோடு:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஈரோட்டுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
வீடுகள் நெருக்கமாக இல்லாத பகுதிகளில் உள்ளவர்களை வீடுகளிலே தனிமைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு சடையம்பாளையம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்க தக்க வாலிபர் சென்னையில் பணியாற்றி கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஈரோடு திரும்பினார்.
இதனை அறிந்த சுகாதாரத் துறையினர் அந்த வாலிபரை வீட்டிலே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள உத்தரவிட்டனர். மேலும் அவரது வீட்டிற்கு முன்பாக தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீசும் ஒட்டினர்.
ஆனால் அந்த வாலிபர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வீதிகளில் உலா வருவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார், சுகாதாரத்துறையினர் நேரில் என்று அந்த வாலிபரை எச்சரித்தனர். ஆனாலும் அந்த வாலிபர் தொடர்ந்து வீதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
இது போல் தோல் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை, செங்கல் சூளை, கட்டிட பணி என குடும்பங்களாகவும், தனித் தனியாகவும், குழுக்களாகவும் தங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி முடங்கி உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளி மாநிலம் செல்ல விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கடந்த 2 நாட்களாக இதற்கான விண்ணப்பம் பெறப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர்.
விண்ணப்பத்தில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற சொந்த விலாசத்துக்கான ஆவண நகல் பெறப்படுகிறது. இது தவிர அந்த தொழிலாளர் பணிபுரியும் நிறுவன முகவரி அவர் எந்த மாவட்டத்தில் இருந்து எந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்ற விவரம் அவரது வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் தரப்படுகின்றன.
ஈரோட்டில் பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல 1,100 பேர் பதிவு செய்து உள்ளனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் வட மாநிலத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
மாநில வாரியாக விண்ணப்பங்கள் பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது செல்லும் வழியில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பதிவு செய்திருந்தால் ஈரோடு அல்லது திருப்பூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அல்லது கேரளா உள்ளிட்ட பிற பகுதியில் இருந்து செல்லும் ரெயிலில் இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப இவர்கள் அனுப்பி வைக்கபடுவார்கள். சிறப்பு ரெயில் இயக்கப்படும் போது அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெருந்துறையை அடுத்துள்ள பட்டக்காரன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு ஆயிக்கவுண்டன் பாளையம் மற்றும் பட்டக்காரன் பாளையம் பகுதியில் உள்ள ஆலமரத்தடியில் வாரம் தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மளிகை, காய்கறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
தற்போது கடந்த 6 வாரங்களாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிழக்கு ஆயிக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தடையை மீறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ஊடங்கு உத்தரவை மீறி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்த வியாபாரிகள் முககவசம் அணியாமலும், போதிய சமூக இடைவெளியின்றியும் வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தி கடைகள் அமைத்திருந்த 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சூழ்நிலையில் மதுபானக்கடைகள் திறந்தால் ஏழை குடும்பங்களில் சிறிதளவு மீதி இருக்கின்ற பணமும் டாஸ்மாக் கடைகளில் செலவழிக்கப்படும். இதனால் பல குடும்பங்களில் அடிப்படை தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் போகும். கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாத இந்த சூழ்நிலையில் அதிகபட்சம் மக்கள் இன்னும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் குடும்ப சண்டை, சச்சரவுகள் அதிகமாகும்.
மதுபானங்கள் வாங்குவதற்காக மக்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதை காரணம் காட்டி அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவெடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மே 7-ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற உத்தரவை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சூரம்பட்டி:
கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த மாதமும் இலவச பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அனைத்து ரேஷன் கடைகளிலும் சர்க்கரை, எண்ணெய், பருப்பு, அரிசி, கோதுமை ஆகிய பொருட்கள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
ஈரோடு எஸ்.கே.சி ரோட்டில் உள்ள ஒரு ரேஷன் கடைகளில் இலவச பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் இலவச பொருள்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதிதாக கொரோனா தொற்று இல்லை.
ஏப்ரல் 14-ந்தேதிக்கு பின்னர் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. எனவே ஆரஞ்சு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. நாளையில் இருந்து ஈரோடு பச்சை மண்டலத்திற்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது:-
இன்று ( செவ்வாய்க்கிழமை) கடந்து விட்டால் ஈரோடு பசுமை மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிக்க உள்ளது. தற்போது அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மற்றும் போக்குவரத்து அரசு உத்தரவின் அடிப்படையில் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகன் எஸ்.சதீஸ்குமார். 34 வயதாகும் இவர் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராக உள்ளார். கொரோனா தொற்று ஊரடங்கில் வீட்டில் இருக்கும் ஓவியர் சதீஸ் குமார் கொரோனா தொற்றில் இருந்து ஈரோடு மாவட்டம் மீண்டு இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, தர்பூசணியில் சிற்பம் வடித்து உள்ளார்.
10 ஆண்டுகளாக ஓவியம் மற்றும் காய்கறி சிற்பங்களை உருவாக்கி வரும் சதீஸ் குமார் இதனை 2 மணி நேரத்தில் செய்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் மிகவும் கஷ்டப்பட்டு பணியாற்றினார்கள். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அரசின் சிங்க முக இலச்சினையை பொறித்தேன். தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு நிலை இல்லை என்று தெரிந்தும், அனைத்து இடங்களுக்கும் சென்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். எனவே அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தூய்மை பணியாளர் உருவம் பொறித்தேன். கொரோனா குறித்த விழிப்புணர்வு பத்திரிகை மற்றும் ஊடகத்துறை மூலம்தான் மக்களை சென்று அடைந்தது. அவர்களை பாராட்டும் வகையில் செய்தியாளர் உருவம் பொறித்து உள்ளேன். ஒரு ஓவியராக எனது பாராட்டை இந்த முறையில் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பிற மாவட்ட வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன், ஜெயராமன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையிலான அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று இருந்த அனைவரும் குணமான நிலையிலும் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி, இனிமேல் கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். எனவே ஈரோடு மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன.
அனைத்து நுழைவு வாயில்களிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சோதனைச்சாவடி வழியாக நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
வாகனங்களுக்கு அனுமதி உள்ளதா? அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்கள் வருகிறார்களா? என்று சோதனை செய்த பின்னரே வாகனங்கள் தொடர்ந்து உள்ளே வர முடியும். அதுமட்டுமின்றி லாரி உள்ளிட்ட அனைத்து வாகன டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை அங்கேயே செய்யப்படுகிறது. அவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.






