என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரத்து 750 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராசாம்பாளையம் சுடுகாடு பின்புறமுள்ள ஒரு காலி இடத்தில் 6 பேர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது.

    அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரத்து 750 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
    கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இதுவரை ஈரோடு மாநகர் பகுதியில் 2 நாட்களில் 56 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் நோய்த்தடுப்பு விதி முறைகளை பின்பற்றாமல் சில கடைகள் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

    இது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டார். அதன்படி மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் போலீசார் ஈரோடு மாநகர் பகுதி முழுவதும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    முதல் நாள் ஆய்வில் ஒரு ஏ.டி.எம் .உள்பட 46 கடைகள் முறையாக நோய் தடுப்பு முறையை பின்பற்றாததால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 2-வது நாளாக சூரம்பட்டி பகுதி முழுவதும் உதவி ஆணையாளர் விஜயா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கிருமிநாநினி வைக்காமலும் செயல்பட்டு வந்த கடைகள் சீல் வைக்கப்பட்டன. இவ்வாறாக நேற்று மட்டும் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு 2 நாட்களில் 56 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று 3-வது நாளாகவும் மாநகராட்சி உதவி ஆணை யாளர்கள் தலைமையில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தனிக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அந்த கடைகளில் கடை ஊழியர் முக கவசம் அணிந்து தான் பொருட்கள் வழங்க வேண்டும்.

    மேலும் கடைக்கு வரும் மக்களும் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். அவ்வாறு கடைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 3 அடி தூரம் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால் சில கடைகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்து வருகின்றனர். இந்த பணி தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா தொற்று காரணமாக பெண் டாக்டர் குடும்பம், அவரது தாய் என 7 பேர் தனிமைப்படுத்தபட்ட நிலையில், அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த 7 குடும்பத்தினர் தனிமைப்படுத்தபட்டனர்.
    சென்னிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெண் டாக்டர் ஒருவர் தனது கணவர் மற்றும் சகோதரி குடும்பத்தினர் என மொத்தம் 6 பேருடன் சென்னிமலை யூனியன் ஈங்கூர் சிப்காட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன் வந்தார்.

    இவர்களில் பெண் டாக்டரின் கணவருடைய சகோதரிக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண் டாக்டர் குடும்பம், அவரது தாய் என 7 பேர் தனிமைப்படுத்தபட்டனர். இது தவிர இவர்கள் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த 7 குடும்பத்தினர் என மொத்தம் 34 பேர் தற்போது தனிமைப் படுத்தபட்டு உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் வருகிற 14-ந் தேதி வரை தனிமைப்படுத்தபட்டு உள்ளனர்.

    மேலும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதி முழுவதும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அங்கு யாரும் செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.

    மொடக்குறிச்சி அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி கஸ்பாபேட்டை அருகே உள்ள கள்ளகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி (45) வியாபாரி. இவர் குடும்பத்துடன் அவல்பூந்துறையில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் துளசிமணி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துளசிமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட துளசிமணிக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
    கோபியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நகர்ப்பகுதியில் இயங்கி வந்த செல்போன் கடைக்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் முகாமை கலெக்டர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சுகாதார பணியாளர்களிடம் முகாமில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தடையின்றி உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    மேலும் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களிடம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    கோபி பகுதியில் அனுமதி வேண்டி விண்ணப்பித்து இருந்த இரு தனியார் மில்களை ஆய்வு மேற்கொண்டார். அங்கு கடைப்பிடிக்கப்படும் சமூக இடைவெளி, பணியாளர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

    சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நகர்ப்பகுதியில் இயங்கி வந்த செல்போன் கடைக்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    பின்னர் பண்ணாரி சோதனை சாவடிக்கு சென்று வாகன தணிக்கை மேற்கொண்டார். அங்கு வாகனங்களில் வருபவர்கள் முறையான வாகன அனுமதி பெற்று உள்ளார்களா? எனவும் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என அலுவலர்களிடம் கேட்டறிந்தார். போலீசாரின் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு மாநகராட்சி சார்பில் இன்று முதல் மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே பொது மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் காந்திஜி ரோடு, சின்ன மார்க்கெட், சூளை, சூரம்பட்டி உட்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனாவை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

    இந்த தடை உத்தரவு காலங்களிலும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

    கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் ஈரோடு மாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக பொது மக்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு வரும் 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இதையடுத்து அம்மா உணவகங்களில் 17-ந் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அம்மா உணவகங்களில் சாப்பிட வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கூட்டம் கூடுவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ள காரணத்தால் ஈரோடு மாநகராட்சி சார்பில் இன்று முதல் மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே பொது மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கேயே சாப்பிட அனுமதி இல்லை.

    இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஈரோடு மாநகர் பகுதிகளில் 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் தற்போது 3 வேளையும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இலவச உணவு வரும் 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாப்பிட்டு வருவதால் கூட்டம் அதிகமாக வருகிறது.

    ஒரு அம்மா உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் சாப்பிடும் அளவு இடம் உள்ளது. பாத்திரங்கள் குறைந்த அளவே உள்ளது. ஆனால் இதை தவிர்க்கும் வகையில் பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக உள்ளதால் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் இன்று முதல் வரும் 17-ந் தேதி வரை அம்மா உணவகங்களில் பார்சல் மட்டுமே உணவு வழங்கப்படும்.

    அம்மா உணவகத்தில் உணவு வாங்க வருபவர்கள் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்து வர வேண்டும். பாத்திரம் எடுத்து வராதவர்களுக்கு பாக்குமட்டை தட்டில் உணவு வழங்கப்படும். உணவுகளை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல வேண்டும். அங்கே சாப்பிட அனுமதி இல்லை. இந்த நடவடிக்கை மூலம் ஒரே நேரத்தில் அம்மா உணவங்களில் சேரும் கூட்டம் தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் கர்நாடக மதுபாட்டிலை பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தாளவாடி:

    கொரோனா வைரஸ் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

    அதேபோல கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதற்கிடையே கர்நாடகத்தில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வருகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு, தனியார் மொத்த விற்பனை கடைகள் மற்றும் அரசின் சில்லறை விற்பனை மதுக்கடைகளை கடந்த 4-ந் தேதி திறந்தது. இதனால் மது பிரியர்கள் சந்தோசம் அடைந்தனர்.

    தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதி குடிமகன்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று மது வாங்கி குடித்து வந்தனர். இந்நிலையில் பைனாப்புரம் ஜோரா ஒசூர் பகுதியில் கர்நாடக மது பாக்கெட் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு தாளவாடி இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப் - இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு போலீஸ் குமார் மற்றும் போலீசாருடன் சென்று சோதனை செய்த போது மோட்டார் சைக்கிளில் சிவமல்லு என்பவர் கர்நாடக மாநில மது கடையிலிருந்து 45 மது பாட்டில்கள் சுமார் 2160 பாக்கெட் வாங்கி வந்து தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் தாளவாடி அடுத்த சிமிட்டகள்ளி சிவமல்லு (வயது 38), மாதேஷ் (27), டிரைவர் பனகஹள்ளி மல்லன் (60) என தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் மது பாக்கெட்களையும் பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு தேவாலயத்தில் வைத்து திருமணம் நடத்தி வைக்க முயன்ற பாதிரியார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மீனாட்சி சுந்தரனார் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் திருமணம் செய்வதற்காக ஈரோட்டை சேர்ந்த மணமகன், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மணமகள் குடும்பத்தினர் 3 காரில் வந்தனர். 

    தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் தேவாலயத்துக்குள் சென்று திருமணம் செய்ய அனுமதி இல்லை என கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் இரு வீட்டாரையும் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அரசு உத்தரவை மீறி தேவாலயத்தில் திருமணத்திற்கு அனுமதி அளித்த பாதிரியார் மற்றும் மணமகன், மணமகள் பெற்றோர் இருவர் மீதும் நோய் தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    கடந்த 21 நாட்களாக புதிதாக தொற்று எதுவும் இல்லாததால் தற்போது ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாறி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்திறகு தாய்லாந்து நாட்டில் இருந்து மத பிரசாரத்துக்கு வந்த 3 பேருக்கு முதன் முதலில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மூலம் கொரோனா மேலும் பரவ தொடங்கியது. பெண் டாக்டர் உள்பட 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் ஒரு முதியவர் இறந்து விட்டார்.

    கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் முதன் முதலாக ரெட் அலார்ட் நிலைக்கு சென்றது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது. கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

    பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஈரோடு பெரிய மார்க்கெட் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 2 இடங்களில் இயங்கி வந்த உழவர் சந்தை ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டது. கோபி, சத்தி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த மார்க்கெட் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து சென்றதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது.

    கடந்த 21 நாட்களாக புதிதாக தொற்று எதுவும் இல்லாததால் தற்போது ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாறி உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களே காரணம்.

    ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளதால் தற்போது உள்ள அதே நடைமுறைகள் பின்பற்றப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஈரேடு:

    ஈரேடு மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாற்றப்பட்டாலும் ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளதால் தற்போது உள்ள அதே நடைமுறைகள் பின்பற்றப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கூறும் போது, நோய் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் தீவிர முயற்சிக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    அப்போது தான் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து பச்சை மண்டலத்தில் நீடிக்கும். பொது மக்கள் தொடர்ந்து சமூக விலகல், முககவசம் அணிவது உள்ளிட்டவைகளை பின்பற்ற வேண்டும். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளவர்கள் உரிய விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள கடைசி தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சத்து மாத்திரைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    கொரோனாவுக்கான தீர்வு காணப்பட்டவுடன் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள கடைசி ஒரு தேர்வும் நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படும்.

    மேலும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி இன்று முதல் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    பவானி அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் 499, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

    மேலும் இங்கு பணிபுரியும் சுமார் 183, பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தற்போது அவர்களுக்கு வேலையில்லாமல் இருந்தனர். இதனால் பவானி போலீசார் சார்பில் அரிசி, பருப்பு, ஆயில், காய்கறிகள் போன்றவற்றை பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், கவுன்சிலர் வாத்தியார் என்கின்ற குப்புசாமி, உதவி செயற்பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர் சுப்பிரமணி, காண்ட்ராக்டர் பாக்கியா, அஸோசியே‌ஷன் வெங்கடேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வடிவேல் குமார் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×