என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வடவள்ளி குத்தியாலத்தூர் காப்புக்காட்டுக்கு உள்பட்ட பகுதி கரிக்கால்மொக்கை. இந்த பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னார்ட் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு யானை இறந்து கிடந்ததை பார்த்தனர். உடனே இதுபற்றி மாவட்ட வன அலுவலர் அருண்லாலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கால்நடை டாக்டர் அசோகன் அங்கு சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அவர் கூறும்போது, ‘இறந்தது பெண் யானை. இறந்த யானைக்கு 25 வயது இருக்கும். குடற்புழு நோய் தாக்கி யானை இறந்துள்ளது.’ என்றார். பிரேத பரிசோதனைக்கு பிறகு யானையின் உடல் மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொரோனா சிறப்பு (தனிமை) வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வார்டில் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகளுடன் 4 பெண்கள் உள்பட 6 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. இது குறித்து அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ஞானகண் பிரேம் நவாஸ் கூறிய தாவது:-
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. அங்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 6 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா பாதிப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் பவானி காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தேவராஜன் சந்திப்பில் வசிப்பவர் ரமேஷ் (49). டி.வி. மெக்கானிக்.
இவர் மார்க்கெட் பகுதிகளில் இருந்து அழுகிய பழங்கள் மற்றும் வெல்லம் உள்ளிட்ட பொருட்களை அதிக அளவில் வாங்கி சென்றுள்ளார். இது அப்பகுதியில் உள்ளவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மெக்கானிக் ரமேஷ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண் பானையில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்தது தெரிய வந்தது.
குக்கர் மூலம் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. ரமேசிடம் போலீசார் விசாரித்த போது டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து மது வாங்க முடியவில்லை. எனவே வீட்டில் யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்ச முயன்றதாக தெரிவித்தார்.
அவரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 20 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு ஸ்டோனி பாலம் அருகில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட போதிலும், மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படாததால் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட் வழக்கம்போல் செயல்பட்டது. அப்போது சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்கள் முந்தியடித்து கொண்டு மீன்களை வாங்கி சென்றனர். இதுநோய் பரவுதலுக்கு காரணமாக இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு தடை விதித்தனர். அன்றையதினத்தில் இருந்து மீன் மார்க்கெட் மூடப்பட்டது.
இந்தநிலையில் மீன் மார்க்கெட் செயல்பட அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள். அதன்படி சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது. அங்கு பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் மீன் கடைகளுக்கு முன்பு தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருந்தன. முக கவசம் அணிந்து வரும் பொதுமக்களுக்கு மட்டுமே மீன் மார்க்கெட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மார்க்கெட்டின் நுழைவு வாயிலில் பொதுமக்களின் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல் ஈரோட்டில் இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்தனர். சில கடைகளில் தயாராக வைக்கப்பட்டு இருந்த இறைச்சி பார்சல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்துக்கான கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு 20 பேருக்கு ரூ.7 லட்சத்து 35 ஆயிரத்து 900 நகைக்கடனை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய் பரவல் காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து உள்ளதால், மக்களின் நலன் கருதி அவசர தேவையை நிறைவேற்றும் வகையில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரமும், கிராமுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 6 சதவீத வட்டி வீதத்தில் 3 மாத தவணை காலத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும், ரூ.2 லட்சம் வரை காப்பீடு வசதியும் இலவசமாக வழங்கப்படும்.
பள்ளிக்கூடங்கள் எப்போது திறப்பது என்பது குறித்து, முதல்-அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு முடிவு செய்து அறிவிக்கும். தனியார் பள்ளிக்கூடங்களில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத மாணவர்கள் சேர்க்கைக்காக ரூ.218 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிக்கூடங்களில், கல்வி கட்டணத்தை செலுத்தக்கூறி கட்டாயப்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் நேற்று முன்தினம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. இதற்கு தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மது வாங்க வருபவர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் . மது விற்பனையில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் விற்பனை செய்ய வேண்டும். மேலும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் மது வாங்க வருபவர் கட்டாயமாக குடை கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 45 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெரும்பாலான கடைகளில் அரசு அறிவித்த நிபந்தனைகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என புகார் எழுந்தது.
ஈரோடு மாவட்டத்தில் 143 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மது வாங்க வந்தவர்கள் மதுவை வாங்கி சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் ரூ.8 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்துக்கு மது விற்பனையானது.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மது விற்பனை நடந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக 5 கோடியே 47 லட்சத்து 42 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆயின.
இந்நிலையில் மதுக்கடைகளில் முறையாக நிபந்தனைகள் பின்பற்றவில்லை என்று கூறி நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது .மேலும் ஆன்லைன் மட்டும் விற்பனை செய்யலாம் என அனுமதி அளித்தது. இந்த உத்தரவு குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவு தெரியாமல் சில குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் முன் காத்துக்கிடந்தனர். பின்னர் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டது என்ற தகவல் அறிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மதுக்கடை மூடும் உத்தரவுக்கு பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடை மூடப்பட்டது குறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் இளங்கோ கூறியதாவது:-
நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை. இதற்கான முறையான அறிவிப்பு வந்தால் நிபந்தனைகளுடன் ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்ததன் பயனாக ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது. தொடர்ந்து இங்கு நோய் தொற்றுக் இல்லாததால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியது.
ஆனால் அரசு இதற்கான அறிவிப்பை இன்னும் முறையாக அறிவிக்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில் சில தளர்வு, நிபந்தனைகளுடன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தனிக்கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இதில் தெளிவான அறிவிப்பு இல்லாததால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
மேலும் ஒரு சில இடங்களில் திறக்கப்பட்ட கடைகளை போலீசார் மூட உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வணிகர்கள், வியாபாரிகள் குழப்பமான நிலையில் இருந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தெளிவான விளக்கம் அளித்து எந்தெந்த கடைகள் செயல்பட வேண்டும். எந்தெந்த கடைகள் செயல்படக்கூடாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் ஊரடங்கு முடியும் வரை எந்தெந்த கடைகள் செயல்பட வேண்டும். எந்தெந்த கடைகள் செயல்படக்கூடாது என்பது குறித்து செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் குளிர்சாதனங்களுடன் கூடிய கடைகள், நகைக்கடைகள் அனைத்து வகையான துணி கடைகள் மற்றும் துணி மார்க்கெட், டீக்கடை, குளிர்பானக் கடை, அழகு நிலையங்கள், சலூன் மற்றும் ஸ்பா கடைகள், டிபார்ட் மெண்டல் ஸ்டோர்ஸ், மார்கெட் காம்ப்ளெக்ஸ், உடற்பயிற்சி நிலையம், விளையாட்டு திடல், நீச்சல் குளம், திரையரங்குகள், தங்கும் விடுதி, மதுக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத்தலங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிறுவனங்கள் ஆகிய கடைகள் ஊரடங்கு முடியும் வரும் மே 17-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை இயங்க அனுமதி கிடையாது.
அதேபோல் ஹார்டுவேர் சிமெண்ட், உலோக கடைகள், கட்டுமான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், ஆட்டோமொபைல், புத்தக விற்பனை நிலையம், சானிடரி வேர், மின் சாதன விற்பனைக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மினி மோட்டார் பழுது, கண்கண்ணாடி விற்பனை கடைகள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மளிகை கடை, மருந்து கடைகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்), ஸ்டூடியோ, பேக்கரி, அச்சகங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சர்வீஸ் சென்டர், இறைச்சிக் கடைகள் (வெளியிலிருந்து வெட்டி பார்ச்சல் செய்யப்பட்ட) இந்த கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாள்ர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணிந்து வருவதை கடையின் உரிமையாளர், பணியாளர் உறுதி செய்ய வேண்டும்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர் மேற்படி நிபந்தனையை பின்பற்றாமல் இருந்தால் கடையின் உரிமையாளர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடையின் நுழைவாயில் கிருமிநாசினி மற்றும் சோப் போன்றவை கைகளை கழுவ கண்டிப்பாக வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம் ஈரோடு மாவட்டத்தில் சில நாட்களாகக் குழம்பி வந்த நிலை தற்போது மாறியுள்ளது.
சென்னிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
கோவிலுக்கு விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். மேலும் முகூர்த்த தினங்களில் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து வந்தது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கோவில்கள் அடைக்கப்பட்டன.
இதனால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தினமும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னி மலை முருகன் கோவிலில் திருமணம் செய்வதற்காக பொதுமக்கள் கோவில் அலுவலகத்தில் அனுமதி கேட்டு வருகின்றனர்.
ஆனால் அரசின் மறு உத்தரவு வரும் வரை சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்ய அனுமதி இல்லை என கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை வங்கிகள் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும். வழக்கமாக மாத தொடக்கத்தில் சம்பந்தப்பட்ட முதியோர் வங்கிகளுக்கு வந்து பணத்தை எடுத்துச்செல்வார்கள். அரசு சார்பில் பணம் செலுத்த தாமதம் ஆனால் 2 அல்லது 3 முறை முதியோர்கள் வங்கிகளுக்கு வந்து தங்கள் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு இருக்கிறதா? என்று கேட்டு தெரிந்து அதன் பின்னர் பணம் எடுத்துச்செல்வார்கள்.
தற்போது ஊரடங்கு காலத்திலும் முதியோர்கள் வங்கிகளுக்கு வந்து தங்கள் கணக்கில் பணம் உள்ளதா என்று பார்த்து எடுத்துச்செல்கிறார்கள். மேலும் கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் வங்கிகளுக்குள் அதிகம் பேர் அனுமதிக்கப்படுவதில்லை. வங்கி வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் இடைவெளி விட்டு வெளியே காத்திருக்க வேண்டும். இதற்காக பலரும் வங்கி திறப்பதற்கு முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருக்கிறார்கள்.
இவ்வாறு நேற்று ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் முதியோர் உதவித்தொகை பணம் எடுப்பதற்காக ஏராளமான முதியோர்கள் வந்திருந்தார்கள். அதில் சில மூதாட்டிகள் காலை 8 மணிக்கே வந்து வங்கியின் அருகே உள்ள கடைகளின் ஓரங்களில் காத்து இருந்தனர்.
தற்போது வங்கி கணக்கில் உள்ள பணத்தை தபால்க்காரர் மூலம் வீடுகளில் இருந்தே எடுக்கும் வசதி அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கான வீடுகளுக்கு தபால்துறை மூலம் பணத்தை வினியோகம் செய்தால், கொரோனா தொற்று, கடும் வெயில் இவற்றில் இருந்து முதியவர்களை பாதுகாக்க முடியும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உத்தரவு பெட்டியில் பக்தர்களின் கனவில் வரும் பொருட்களை வைத்து அவ்வப்போது பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இப்போது இந்த உத்தரவு பெட்டியில் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கட்டப்பட்டு திருமாங்கல்யம் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் வெள்ளிக்கிழமை அன்று மாலை தங்கள் வீட்டு வாசல் முன்பு மஞ்சள் நீர் தெளித்து கோலம் போட்டு அதில் 9 அகல் விளக்குகளை ஏற்றி சுமங்கலி பெண்கள் வழிபட்டால் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பார். மேலும் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும் என்று கூறப்பட்டது.
இதையொட்டி ஈரோடு, சூரம்பட்டி, அணைக்கட்டு, செட்டிபாளையம், பெரிய செட்டி பாளையம், மூலப்பாளையம் மற்றும் அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, கவுந்தப்பாடி உள்பட ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு 9 அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாவக்காட்டு பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார்.
2 ஆயிரம் கணித ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகின்றனர். நாளை மறுதினம் ஆடிட்டர் தேர்வுக்கு ஆன் லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும். கொரோனா நோய் தொற்றுக்கு தீர்வு காணப்பட்டவுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனையின் பேரில் உயர் மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும். பள்ளிகள் திறந்ததும் மாணவ- மாணவிகளுக்கு சமூக இடைவெளி குறித்து கற்றுத்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






