என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா உணவகம்
    X
    அம்மா உணவகம்

    அம்மா உணவகங்களில் இன்று முதல் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்படும்

    ஈரோடு மாநகராட்சி சார்பில் இன்று முதல் மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே பொது மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் காந்திஜி ரோடு, சின்ன மார்க்கெட், சூளை, சூரம்பட்டி உட்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனாவை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

    இந்த தடை உத்தரவு காலங்களிலும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

    கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் ஈரோடு மாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக பொது மக்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு வரும் 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இதையடுத்து அம்மா உணவகங்களில் 17-ந் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அம்மா உணவகங்களில் சாப்பிட வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கூட்டம் கூடுவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ள காரணத்தால் ஈரோடு மாநகராட்சி சார்பில் இன்று முதல் மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே பொது மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கேயே சாப்பிட அனுமதி இல்லை.

    இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஈரோடு மாநகர் பகுதிகளில் 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் தற்போது 3 வேளையும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இலவச உணவு வரும் 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாப்பிட்டு வருவதால் கூட்டம் அதிகமாக வருகிறது.

    ஒரு அம்மா உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் சாப்பிடும் அளவு இடம் உள்ளது. பாத்திரங்கள் குறைந்த அளவே உள்ளது. ஆனால் இதை தவிர்க்கும் வகையில் பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக உள்ளதால் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் இன்று முதல் வரும் 17-ந் தேதி வரை அம்மா உணவகங்களில் பார்சல் மட்டுமே உணவு வழங்கப்படும்.

    அம்மா உணவகத்தில் உணவு வாங்க வருபவர்கள் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்து வர வேண்டும். பாத்திரம் எடுத்து வராதவர்களுக்கு பாக்குமட்டை தட்டில் உணவு வழங்கப்படும். உணவுகளை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல வேண்டும். அங்கே சாப்பிட அனுமதி இல்லை. இந்த நடவடிக்கை மூலம் ஒரே நேரத்தில் அம்மா உணவங்களில் சேரும் கூட்டம் தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×