search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோட்டில் கடைகள் அடைப்பு- 50 சதவீத பஸ்கள் இயக்கம்

    கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஈரோடு பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட்டில் கடைகள் திறந்து இருந்தன. மேலும் ஒரு சில டீக்கடைகளும் திறந்து இருந்தது.
    ஈரோடு:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார். அதன்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்தனர். இந்த சுய ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த சுய ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். இந்தியா முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு வெற்றி பெற்றது.

    ஈரோடு மாவட்டத்திலும் 100 சதவீதம் இந்த சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றினர். அதன்படி அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வேன்கள் இயங்கவில்லை. கடைகள் வணிக நிறுவனங்கள் ஓட்டல்கள், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதே சமயம் அத்தியாவசிய பொருட்களான ஆவின் பால் கடைகள், மருந்தகங்கள் திறந்திருந்தன. ஆனால் நேற்று எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், காளைமாடு சிலை, பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, சக்தி ரோடு, ஈ.வின்.என் ரோடு போன்ற பகுதிகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    மாலை 5 மணி அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் செவிலியர்கள் அரசு ஊழியர்கள், காவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரோடு மக்கள் தங்கள் வீடுகளில் கைதட்டி அவர்களுக்கு ஆரவாரம் செய்தனர்.

    இன்று காலை 5 மணியுடன் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் வருகின்ற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க மத்திய அரசு பரிந்துரை செய்தது.

    அதன்படி இன்று ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஈரோடு பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட்டில் கடைகள் திறந்து இருந்தன. மேலும் ஒரு சில டீக்கடைகளும் திறந்து இருந்தது. ஆவின் பால் மற்றும் மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கியது.

    50 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின. பஸ்களிலும் குறைந்த அளவே பயணிகள் சென்றனர். கொரோனா பீதி காரணமாக வேலைக்கு செல்லும் ஊழியர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் என பெரும்பாலானோர் முக கவசத்துடன் செல்வதை காண முடிந்தது.

    கோபி பஸ் நிலையத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கின. ஆனால் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்தனர்.

    இதேபோல் அந்தியூர், சத்தியமங்கலம், பெருந்துறை, புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடைகள் திறந்திருந்தன. பஸ்கள் இயங்கினாலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. பவானியில் கடைகள் வழக்கபோல் திறந்து இருந்தது. பஸ்களும் இயங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய கோவில்களின் திருவிழாக்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரிய ஜவுளி கடைகள் நகை நிறுவனங்கள் கடைகள் 31-ந்தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறும்போது:-

    ஈரோடு மாவட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எந்தப் பகுதியில் இருந்தார்களோ அந்த பகுதி மக்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

    தற்போது ஈரோடு உள்பட தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று முடிவு செய்யும் அதன் பிறகுதான் நான் எதுவும் கூற முடியும் என்றார்.
    Next Story
    ×