என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே வாய்க்காலில் மிதந்த வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிரோடு அருகில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் ஆண் பிணம் மிதப்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்தவரின் சட்டை, பேன்ட், ஷூ ஆகியன வாய்க்காலின் கரையில் இருந்தன. இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? அவர் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர், பெங்களூரு, சாம் ராஜ்நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர், சாம்ராஜ் நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று பந்த் நடந்து வருகிறது. மராட்டியர்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு கர்நாடக பாரதிய ஜனதா அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதை கண்டித்து கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் இன்று (சனிக்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்து அங்கு பந்த் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து கர்நாடகாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இன்று காலை முதல் மாலை வரை பஸ்கள் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படாது என அரசு போக்குவரத்து துறை அறிவித்தது.

    அதன்படி சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர், பெங்களூரு, சாம் ராஜ்நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது.

    சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி மற்றும் பண்ணாரி வரை மட்டுமே பஸ்கள் சென்று வந்தன. மேலும் கர்நாடகா மாநில பஸ்களும் அங்கு செல்லாமல் சத்தியமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டன.

    இதனால் சத்தியமங்கலம் பகுதி பயணிகள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல வேண்டிய பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.

    கர்நாடகா மாநிலம் செல்லும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பாதுகாப்பு கருதி இன்று காலை பண்ணாரி சோதணை சாவடி பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் ரோட்டோரம் வாகனங்கள் அணி வகுத்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
    விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 160 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் ஈரோடு அரசு தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தலைமையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு முன்னிலையில் கட்சியினர் பலர் ஈரோடு காந்திஜிரோட்டில் நேற்று காலை திரண்டனர்.

    அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொழில்சங்க நிர்வாகிகள் சின்னசாமி, சுப்பிரமணி, துளசிமணி, பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம், மின்துறையை தனியாரிடம் கொடுக்க வழிவகுக்கும் மின்சார சட்டம் -2020 ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    இதில் 30 பெண்கள் உள்பட மொத்தம் 160 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக ஈரோடு காந்திஜிரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை மேற்கொண்டு வரும் கனிமொழி எம்.பி. நேற்று சத்தியமங்கலத்துக்கு வந்தார்.

    அப்போது அவரிடம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையால் தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தி.மு.க. வாக்கு வங்கியை சிதைக்க வாய்ப்பில்லை. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்று சொல்வது தேர்தலில் தெரிந்துவிடும் என தெரிவித்தார்.
    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தினந்தோறும் 50-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது.

    அதேநேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் நேற்று சிகிச்சை முடித்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 954 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 139 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று பாதித்த 413 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    ஈரோட்டில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரிநகர் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). தொழிலாளி. இவரும், உறவுக்கார பெண்ணான சவுந்தர்யா (23) என்பவரும் காதலித்து வந்தனர். அவர்கள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

    தீபாவளி பண்டிகையின்போது மணிகண்டன் தனது மனைவி, அம்மா, தம்பி ஆகியோருக்கு புதிய துணிகளை வாங்கி கொடுத்து உள்ளார். ஆனால் அவருக்கு எந்தவொரு துணியும் வாங்கி கொள்ளவில்லை. இதனால் சவுந்தர்யா புதிய துணிகளை வாங்கி கொள்ளுமாறு பலமுறை கூறிஉள்ளார். ஆனால் அவர் புதிய துணி வாங்காததால், கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.

    மேலும், காதல் திருமணம் செய்து கொண்டதால் தீபாவளி பண்டிகைக்கு சவுந்தர்யாவை அவரது தாய் வீட்டில் இருந்து அழைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட சவுந்தர்யா கடந்த 13-ந் தேதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தநிலையில் காதல் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் மணிகண்டன் வாடினார். அவரால் மனைவியை மறக்க முடியாமல் தாய், தம்பி, நண்பர்களிடம் புலம்பி உள்ளார். மனைவியின் நினைவிலேயே இருந்து வந்த மணிகண்டனும் தனது வாழ்வை முடித்து கொள்ளும் முடிவுக்கு வந்தார்.

    நேற்று முன்தினம் பகலில் குளியலறைக்குள் சென்ற மணிகண்டன் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த குடும்பத்தினர் மணிகண்டன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் கணவனும் தற்கொலை செய்த சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
    கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள கைபாலி தோட்டம் மைக்கேல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 66). இவருடைய மனைவி குஞ்சம்மாள். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். விவசாய தொழிலாளியான குருசாமி தனியாக வசித்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற குருசாமி மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் இவருடைய உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடிப்பார்த்தார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் நேற்று காலை மைக்கேல் பாளையம் அருகே உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு நிலை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் மிதந்த பிணத்தை மீட்டு மேலே கொண்டுவந்தார்கள்.

    இதைத்தொடர்ந்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கிணற்றில் இறந்து மிதந்தது மாயமான குருசாமி என்பதும், அவர் மதுபோதையில் நடந்து சென்றபோது தடுமாறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடத்தூர்:

    கோபி பா.வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 70). கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் லட்சுமி தனியாக வசித்து வந்தார். லட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், தனக்கு யாருமே உதவிக்கு இல்லையே என்று மனவேதனையிலும் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் லட்சுமி விஷம் குடித்துவிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் லட்சுமி இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழ்நாடு பெரியார் மண் என்றும், திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் கனிமொழி எம்.பி. கூறினார்.
    ஈரோடு:

    தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பரப்புரை பயணத்தை தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. மேற்கொண்டு வருகிறார். நேற்று ஈரோட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர் பெரியார் வீதியில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகத்தை பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    இந்த இனத்தை சுயமரியாதையோடு மீட்க பிறந்த தலைவர் பிறந்த, அவர் வாழ்ந்த வீட்டை பார்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மிகப்பெரும் பேறாக கருதுகிறேன். தமிழகத்தில் இப்போது இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி பெரியாருடைய கொள்கைகளுக்கு எல்லாம் எதிராக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க.வின் வெற்றி, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகும் வெற்றியாக மக்கள் பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதுபற்றி கருத்து இருந்தால் கூறுகிறேன்.

    இடஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் குறித்து ஒருவர் கூறி இருக்கும் கருத்து எனது நினைவுக்கு வருகிறது. அதாவது, பா.ம.க. போராட்டம் என்பது தேர்தலுக்கான ஒரு அரசியல் நாடகமாக பார்க்கிறேன் என்று அவர் அந்த கருத்தை கூறி உள்ளார். இது எனது கருத்தல்ல, இந்த கருத்து எனது நினைவுக்கு வருகிறது.

    மு.க.அழகிரி அரசியலில் எப்படி செயல்படுவது என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலில் ஈடுபடலாம். எனவே அதுபற்றி கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை.

    சமூக நீதிக்காக பா.ஜனதா என்ன செய்தது?. தொடர்ந்து சமூக நீதியை இட ஒதுக்கீட்டை நாட்டில் அழித்துக்கொண்டு இருக்கும் நடவடிக்கையைத்தான் பா.ஜனதா எடுக்கிறது. அதனால் சமூக நீதிக்காக பா.ஜனதா எதுவும் செய்யவில்லை. திராவிட இயக்கம், தி.மு.க.தான் தொடர்ந்து சமூக நீதிக்காக குரல் கொடுத்துக்கொண்டும், போராடிக்கொண்டும் இருக்கிறது. நாம் தான் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம். எங்களைப்பற்றி குறைகூறும் அருகதை பா.ஜனதாவினருக்கு கிடையாது.

    தமிழகத்தில் திராவிடத்தை யாரும் வீழ்த்த முடியாது. சுயமரியாதை உணர்வை யாரும் வீழ்த்திவிட முடியாது. தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. பெரியார் இல்லத்தில் உள்ள கலைஞரின் படத்தைக்கூட மறைக்கும் அளவுக்கு சுயமரியாதையை இழந்து உள்ளது. ஆனாலும், தமிழ்நாடு பெரியார் மண். நிச்சயமாக திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ரெயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது. இரவுநேர வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணப்பலன்களை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே டிரைவர்கள் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஈரோடு கிளை தலைவர் செபில் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பிரகாஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர் மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    கோபியில் ரோட்டோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த குழந்தை மாயமானது. குழந்தையை யாராவது கடத்தி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடத்தூர்:

    கோபி பஸ் நிலையம் அருகே ரோட்டோரம் உள்ள பாலத்தில் ஏராளமான ஊசி, பாசி மணி விற்கும் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பகலில் ஊசி, பாசி மணி விற்றுவிட்டு இரவில் பாலத்தில் குடும்பத்துடன் படுத்து தூங்குவார்கள். அவர்களில் ஒருவர் அம்மாசை (வயது 28), இவருடைய மனைவி திலகா (26). இவர்களுக்கு தில்லி (2) உள்பட 3 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் அம்மாசையின் குழந்தைகள் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். தில்லியும் பெற்றோருடன் தூங்கிக்கொண்டு இருந்தான்.

    இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் அம்மாசையும், திலகாவும் கண் விழித்து பார்த்துள்ளனர். அப்போது தில்லியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கோபி போலீசில் திலகா, குழந்தையை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து, குழந்தை தில்லி கடத்தப்பட்டானா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    கோபி பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஈரோடு:

    உழவன் மகன் விவசாயிகள் சங்க செயலாளர் சி.மணிகண்டன் தலைமையில் விவசாயிகள் ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் சி.கதிரவனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    ஈரோடு அணைநாசுவம்பாளையம், எஸ்.பி.அக்ரஹாரம், பி.பி.அக்ரஹாரம், நஞ்சை தளவாய்பாளையம், வைராபாளையம், சூரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 450 ஹெக்டேர் பரப்பளவுக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அங்கு நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்கிறார்கள். எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு நெல் களம், நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முருகேஷ் மற்றும் குடும்பத்தினர் கொடுத்த மனுவில், “எனது மகன் மோகன்பாபு (வயது 20) குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மோகன்பாபு கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    இதனால் சித்தோட்டில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு வேலைக்கு சென்றார். அவர்கள் ரேஷன் அரிசியை கடத்துவதாக தெரியவந்து உள்ளது. எனவே மோகன்பாபுவை எங்களுடன் வருமாறு அழைத்தோம். ஆனால் அவர் வரமறுத்துவிட்டார். தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே, அரிசி கடத்தும் கும்பலிடம் இருந்து எனது மகனை மீட்டு தர வேண்டும். மேலும், அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.
    ×