search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு காந்திஜி ரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    ஈரோடு காந்திஜி ரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 160 பேர் கைது

    விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 160 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் ஈரோடு அரசு தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தலைமையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு முன்னிலையில் கட்சியினர் பலர் ஈரோடு காந்திஜிரோட்டில் நேற்று காலை திரண்டனர்.

    அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொழில்சங்க நிர்வாகிகள் சின்னசாமி, சுப்பிரமணி, துளசிமணி, பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம், மின்துறையை தனியாரிடம் கொடுக்க வழிவகுக்கும் மின்சார சட்டம் -2020 ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    இதில் 30 பெண்கள் உள்பட மொத்தம் 160 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக ஈரோடு காந்திஜிரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×