என் மலர்
ஈரோடு
- எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
- இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகின்றது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து பதிவு அட்டை வழங்கப்படும்.
ஈரோடு:
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்ப பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகின்றது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து பதிவு அட்டை வழங்கப்படும்.
மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaaippu.gov.in என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சம்பவத்தன்று அதிகாலை சரோஜா கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு அவர் எதிர்பாராத விதமாக வழுக்கி தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.
- இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் அடுத்த பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் மாரநாயக்கர். இவரது மனைவி சரோஜா (56). இவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.
இதனால் டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் பகுதியில் உள்ள அவரது அக்கா பாப்பாத்தி வீட்டில் சரோஜா தங்கி இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சரோஜா கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு அவர் எதிர்பாராத விதமாக வழுக்கி தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்து முடிந்துள்ளன. இதைப்போல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு–4, நம்பியூர் யூனியன் கெட்டிசெவியூர் பஞ்சாயத்து வார்டு எண்–10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–5.
பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்–4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்–11,
கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1, புளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்–3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண்–2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இது தவிர அம்மாபேட்டை யூனியன் சிங்கம்பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்.2-ல் 2 பேர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்–.3-ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்.–3-ல் 2 பேர், கோபி யூனியன் கோட்டுபுள்ளா ம்பாளையம் பஞ்சாயத்து, வார்டு எண்–1ல் இருவர்,
மொடக்குறிச்சி யூனியன் 46 புதூர் பஞ்சாயத்து வார்டு எண்.–1-ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–.3-ல் 3 பேர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்.–2-ல் 3 பேர் என, 7 பதவிக்கு 20 பேர் போட்டியில் உள்ளனர்.
நாளை(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதை ஒட்டி அதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்து முடிந்துள்ளன. இதைப்போல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12-ந் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதன்படி, ஈரோடு அருகே 46 புதூர் 1-வது வார்டு பகுதி, ஆணைக்கல்பாளையம், லக்காபுரம், சோலார், மூலப்பாளையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதியில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்மாபேட்டை, அத்தாணி, கோபி, பவானிசாகர், அந்தியூர் பகுதியில் உள்ள, 24 டாஸ்மாக் கடைகளுக்கும் இவ்விரு தினங்கள் விடுமுறை விடுக்கப்படுகிறது.
- சம்பவத்தன்று இரவு பட்டியல் ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு சந்திரசேகர் அங்கு வந்து பார்த்தார். அப்பொழுது 2 வாலிபர்கள் ஆட்டுப்பட்டியில் ஆடுகளை திருட முயன்றனர்.
- இதனையடுத்து 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சை க்கிளையும் சிவகிரி போவீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே மின்ன பாளையத்தை அடுத்த மொசுக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (42). விவசாயி. அதே பகுதியில் அவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் 15 ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு யாரோ மர்ம நபர்கள் சந்திரசேகர் பட்டியில் இருந்த 2 ஆடுகளை திருடி சென்று விட்டனர். மேலும் ஆடுகள் திருட்டு போகாமல் இருக்க இரவு, பகலாக ஆடுகள் கட்டி வைத்திருக்கும் பட்டியை கண்காணித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பட்டியல் ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு சந்திரசேகர் அங்கு வந்து பார்த்தார். அப்பொழுது 2 வாலிபர்கள் ஆட்டுப்பட்டியில் ஆடுகளை திருட முயன்றனர்.
அப்போது சந்திரசேகர் வருவதை கண்டு 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.
அப்பொழுது அந்த 2 வாலிபர்களை சந்திரசேகர் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விசாரித்ததில், பாசூர் சோளங்காபாளையம் மணப்பாளிபள்ளம் 2-வது வீதியை சேர்ந்த சிவானந்தன் (20), அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (19) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சை க்கிளையும் சிவகிரி போவீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் சிவானந்தம், மனோஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (32). இவர் அரசு வேலை தேடி வந்தார்.
- அந்தியூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குருதேவ் மற்றும் ராஜேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சிந்தகவுண்டன்பாளையம், அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (32). இவர் அரசு வேலை தேடி வந்தார்.
இவரின் நண்பர் பூபதி மூலம் ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் தனது கல்லூரி நண்பரான ராஜேஷ் குமார் என்பவரை அங்க முத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதில் ராஜேஷ்குமார் தான் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் பெரிய பதவியில் இருப்பதாகவும், என்னால் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தர முடியும் என்று அங்கமுத்துவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அங்கமுத்து கடந்த ஆண்டு 28.8.2021 முதல் 2.9.21 வரை உள்ள காலகட்டத்தில் அந்தியூரில் உள்ள தனியார் வங்கிகள் மூலம் ராஜேஷ்குமார் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணையாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி உள்ளார்.
ஆனால் ராஜேஷ்குமார் கூறியபடி அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அங்கமுத்து சென்னை உள்ள தலைமை செயலத்திற்கு சென்று விசாரித்த போது ராஜேஷ்குமார் அங்கு வேலை செய்யவில்லை என்பதை கண்டுபிடித்தார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அங்கமுத்து ராஜேஷ்குமார் மற்றும் குருதேவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் 2 பேரும் போனை எடுக்கவில்லை. மீண்டும் அங்கமுத்து அவர்களுக்கு போன் செய்த போது அவர்கள் தங்களை நேரிலோ அல்லது போன் மூலமோ தொடர்பு கொண்டால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து அங்கமுத்து இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த மனுவை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்தியூர் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் அந்தியூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குருதேவ் மற்றும் ராஜேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
- விவசாயிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் மாயாற்றை பரிசலில் கடந்து தான் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும்.
- மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் மாயாற்றை பரிசலில் கடந்து தான் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும்.
தினமும் பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பரிசலில் கடந்து சென்று வருகின்றனர். மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த மாதிரி சமயங்களில் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் பரிசலில் கடந்து சென்று வருகின்றனர். பரிசல் தட்டு தடுமாறி வெள்ளத்தில் செல்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் மாயாற்றை கடப்பது சவாலாகவே இருந்து வருகிறது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது.
இருந்தாலும் நாங்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றாக வேண்டும். இதனால் சில சமயங்களில் உயிரைப் பொருட்படுத்தாமல் மாயாற்றை கடந்து செல்கிறோம். நாங்கள் பல வருடங்களாக மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தரவேண்டும் கோரிக்கை வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகை நிறைவேறினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
- இங்கு கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே கோவை மெயின் ரோட்டில் கால்நடை மற்றும் வார சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை கால்நடை சந்தையும் வியாழக்கிழமை வார சந்தையும் நடந்து வருகிறது.
இந்த சந்தை பெள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தமிழகத்திலேயே 2-வது பெரிய சந்தையாக திகழ்ந்து வருகிறது. இந்த சந்தைக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், கோபி செட்டிபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
மேலும் கரூர், நாமக்கல், கோவை, திருப்பூர் என பல பகுதிகளில் இருந்தும் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள். இங்கு கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
இதனால் வாரம் தோறும் இங்கு சுமார் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆடு மற்றும் மாடுகள் விற்பனை நடந்து வருகிறது. மேலும் பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். இதனால் ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனை நடக்கும்.
இந்த நிலையில் வரும் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு குர்பானி கொடுப்பார்கள். இதற்காக அவர்கள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
இதையொட்டி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் நடந்த சந்தைக்கு ஏராளமான கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும் விவசாயிகள் பலர் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.
மேலும் புளியம்பட்டி சந்தைக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
இந்த சந்தையில் ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இங்கு சுமார் ரூ.50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கீழ் பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு ஜூன் 10-ந் தேதி சிவகிரியில் நடைபெறுகிறது.
- விவசாயிகளிடம் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார வேன் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.
சிவகிரி:
கீழ் பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு ஜூன் 10-ந் தேதி சிவகிரியில் நடைபெறுகிறது.
மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளிடம் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார வேன் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனக்கா–ரர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி செயலாளர் பொன்னையன் வழக்க–றிஞர் பிரிவு தலைவர் சுப்பு, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு துணைத்த–லைவர் ஆறுமுகம் எல்.5, பாசன சபை தலைவர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெருந்துறை:
பெருந்துறை தோப்புப்பாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தனது மனைவி மற்றும் 2 மகன் ஒரு மகளுடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார். அவரது 17 வயது இளைய மகள் சம்பவத்தன்று காலை பெருந்துறையில் உள்ள ஒரு நகை கடையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
மாலை அவர் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் மற்றும் கடைவீதி பகுதியில் தேடிப் பார்த்தும் அந்த இளம்பெண்ணை காணவில்லை.
இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- நந்தகோபால் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறை ஈரோடு ரோடு வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் நந்தகோபால் (வயது 21). ஆட்டோ டிரைவர். கடந்த 6 மாதமாக நந்தகோபால் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தான் செத்து போவேன் என்று கூறி தூக்குமாட்டிக்கொள்வதாக மிரட்டியுள்ளார்.
இதனை கண்ட அவரது தந்தை ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் நந்தகோபால் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். பின்னர் வீரன் அவரை சமாதானப்படுத்தி விட்டு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது நந்தகோபால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை பார்த்த அவர் உடனடியாக நந்தகோபாலை கீழே இறக்கி ஆட்டோவில் ஏற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் நந்தகோபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
- 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.
இதில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி பணிகளில் மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 71 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- சம்பவத்தன்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பெரியசேமூர் சோழா நகர் தட்டான் காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). லேத் பட்டறை உரிமையாளர்.
இவர் வாகன விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் முதுகு தண்டுவடத்தில் தொடர்ந்து வலி இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ஆறுமுகத்தை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






