என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாயாற்றில் ஆபத்தை உணராமல் பரிசலில் சென்ற மக்கள்
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு- ஆபத்தை உணராமல் பரிசலில் செல்லும் மக்கள்
- விவசாயிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் மாயாற்றை பரிசலில் கடந்து தான் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும்.
- மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் மாயாற்றை பரிசலில் கடந்து தான் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும்.
தினமும் பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பரிசலில் கடந்து சென்று வருகின்றனர். மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த மாதிரி சமயங்களில் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் பரிசலில் கடந்து சென்று வருகின்றனர். பரிசல் தட்டு தடுமாறி வெள்ளத்தில் செல்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் மாயாற்றை கடப்பது சவாலாகவே இருந்து வருகிறது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது.
இருந்தாலும் நாங்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றாக வேண்டும். இதனால் சில சமயங்களில் உயிரைப் பொருட்படுத்தாமல் மாயாற்றை கடந்து செல்கிறோம். நாங்கள் பல வருடங்களாக மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தரவேண்டும் கோரிக்கை வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகை நிறைவேறினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






