என் மலர்
திண்டுக்கல்
- அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது.
- திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு முருகப்பெருமானை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல் முகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும்.
அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே கோவிலின் தரிசன வழிகள், மலைக்கோவிலுக்கு செல்லும் பாதைகள் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தி வரும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கூட்டம் அலைமோதியதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே நேற்று கேரள மாநில பக்தர்கள் 10 பேர், 12 அடி நீள அலகு குத்தி வந்து கிரிவீதிகளில் வலம் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். பழனிக்கு கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதி பகுதிகளில் கடும் நெரிசல் காணப்பட்டது. இதேபோல் சாமி தரிசனம் செய்த பிறகு பக்தர்கள், தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்ததால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- காரில் பயணம் செய்த செந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
- அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் கேரள பதிவெண் கொண்ட கார் வந்துகொண்டிருந்தது. அம்பிளிக்கை போலீஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
பின்னர் சாலையில் இருந்து கீழே இறங்கி விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த செந்துறை பகுதியை சேர்ந்த மணிகண்டன், வினோத், ஷோபனா, சுஷீலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கம்பத்தில் மோதியபோது மின்வினியோகம் துண்டிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர்.
- திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- பிரிட்டிஸ் காலத்தில் இரவு நேரங்களில் வீடுகளில் தங்காமல் சிறைச்சாலை மற்றும் பள்ளியாக செயல்பட்ட இடத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தங்கினர். அதே நிலையை தற்போது நாங்கள் தொடர்கிறோம்.
நிலக்கோட்டை:
அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வி த்துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நிலக்கோட்டை, எம்.குரும்பபட்டி, ராமராஜபுரம், விராலிமாயன்பட்டி, தர்மத்துப்பட்டி, விருவீடு, அணைப்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, எஸ்.மேட்டு ப்பட்டி, சிலுக்குவார்பட்டி உள்பட பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரு கின்றனர்.
கருப்பு கொடி போரா ட்டம் அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அணைப்பட்டியில் கள்ளர் பாதுகாப்பு இயக்கமும், பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் பேசியதாவது:-
திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து வருகிற ஜூன் 15ந் தேதி முதல் அரசு கள்ளர் பள்ளிகளில் பொது மக்கள் தங்கும் போராட்டம் நடத்த உள்ளோம். எங்கள் முன்னோர்கள் கட்டிக்காத்த பள்ளியை காப்பாற்ற வேண்டும். பிரிட்டிஸ் காலத்தில் இரவு நேரங்களில் வீடுகளில் தங்காமல் சிறைச்சாலை மற்றும் பள்ளியாக செயல்பட்ட இடத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தங்கினர். அதே நிலையை தற்போது நாங்கள் தொடர்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
- போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 40) கூலித்தொழிலாளி. கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு கொடைரோடு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் மறுநாள் ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் உள்ள புளியமரத்தோப்பில் சுந்தரேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரேசன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், இன்ஸ்பெக்டர் குருவத்தாய் தலைமையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் சுந்தரேசன் தலையில் வெட்டுக்காயம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுந்தரேசனின் தாய் ராஜாமணி, சகோதரர் முருகன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி தாய் மற்றும் வீட்டில் உள்ளவர்களை அடித்து தாக்கியுள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரேசன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
- விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
கரூர் மாவட்டம் சீத்தம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது59), சேகர் (35). இவர்கள் 2 பேரும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (24). மில் தொழிலாளி. அவரது நண்பர் துரையன் (21). பெயிண்டர். 2 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு புதிதாக 268 மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன.
- வைகை அணையில் இருந்து நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திண்டுக்கல்லில் விடுபட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் நகருக்கு கூடுதலாக 18 எம்.எல்.டி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு புதிதாக 268 மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.131 கோடி மதிப்பில் பழைய பைப் லைன்கள் அகற்றப்பட்டு புதிய பைப்லைன்கள் அமைக்கப்பட உள்ளது.
இதன்மூலம் 20 எம்.எல்.டி தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். வைகை அணையில் இருந்து நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், தேனி மாவட்ட குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- இயற்கை அழகை ரசித்தபடி பூங்காவை சுற்றி நடைபயிற்சி செல்ல வசதியாக 25 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
- நிலத்தை தயார் செய்தல் மற்றும் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது சிறுமலை. இங்கு பழையூர், புதூர், தென்மலை, பசலிக்காடு, தாளக்கடை, குரங்கு பள்ளம் உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. மா, பலா, வாழை , நெல்லி, எலுமிச்சை, சவ்சவ், மிளகு, காப்பி போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
காட்டு மாடு, மர அணில், காட்டு பன்றிகள், சென்நாய் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. இங்கு வெள்ளிமலை சிவ ன்கோவில், தோட்டக்கலை த்துறையின் பண்ணை ஆகியவை உள்ளது.
வார விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மத்திய அரசு சார்பில் சிறுமலை அடிவாரத்தில் வனப்பகுதியை யொட்டி 25 ஏக்கரில் ரூ.40 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இயற்கை அழகை ரசித்தபடி பூங்காவை சுற்றி நடைபயிற்சி செல்ல வசதியாக 25 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலத்தை தயார் செய்தல் மற்றும் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வனத்துறை சார்பில் தென்மலையில் ரூ.5 கோடியில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பரளிநோக்கி சென்று கொண்டிருந்தார்.
- சிகிச்சைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டியை சேர்ந்தவர் முகமதுயாசின் (27). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பரளிநோக்கி சென்று கொண்டிருந்தார்.
வலையபட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து வந்த மினிவேன் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் முகமதுயாசின் இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்களை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடையும் வகையில் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.
- கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோடைவிழாவும் நீட்டிக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கிய 60-வது மலர் கண்காட்சியின் 2-ம் நாள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பழங்கால மன்னர்களின் போர் சாகசங்களை விளக்கும் வண்ணம் மல்லர் கம்பம் என்ற சாகச போட்டியில் சிறுவர்கள் கலந்து கொண்டு சுற்றுலாப் பயணிகள் கண்டு வியக்கும் வகையில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு ஆடிய கரகாட்டம், பாரம்பரிய கலை நிகழ்ச்சியான பொய்க்கால் குதிரை ஆட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் திண்டுக்கல் குழுவினரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தில் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு சுத்தல், சுருள் வாள்வீச்சு நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்களை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடையும் வகையில் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அவ்வப்போது சாரல் மழை தலை காட்டினாலும் அதை பொருட்படுத்தாது மலர் கண்காட்சி நிகழ்வுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
26-ந்தேதி தொடங்கிய மலர்கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோடைவிழாவும் நீட்டிக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி ஆகியோரின் அனுமதிபெற்று மேலும் 2 நாட்கள் 30-ந்தேதி வரை மலர்கண்காட்சி நீட்டிக்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.
- வடமதுரை போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அரசு பஸ் டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- திருச்சி- திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து கம்பம் நோக்கி அரசு சொகுசு விரைவுபஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாறைப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென நிலைதடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த கனரக லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் (46) என்பவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த சாகுல் ஹமீது (35), மரிய ஜோசப் லியோனி (51), செந்தில்குமார் (46), ராஜா (60), முகமது ஆயில் (14), ஆயிஷா பேகம் (34), முகமது அஜிபுல் (16), சுதாகர் (32), ராஜேஷ் (33), சரவணன் (51), செல்வராஜ் (73) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வாகனங்களை அப்பு றப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் திருச்சி- திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஒரு மர்மநபர் காலை 4.45 மணியளவில் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வரும் காட்சி கேமிராவில் பதிவாகி இருந்தது.
- அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த அந்த ஆசாமி கோவில் கதவை திறந்து உள்ளே புகுந்தார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி வழக்கம்போல் காலையில் நடைதிறந்து பூஜைகள் செய்ய வந்தார். அப்போது கருவறையில் அம்மனின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவை திருடு போயிருந்தது. இதைப்பார்த்த பூசாரி அதிர்ச்சியடைந்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில் ஒரு மர்மநபர் காலை 4.45 மணியளவில் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வரும் காட்சி பதிவாகி இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த அந்த ஆசாமி கோவில் கதவை திறந்து உள்ளே புகுந்தார். பயபக்தியுடன் சாமி கும்பிட்டு விட்டு அம்மனின் கழுத்தில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
- கோவிலுக்கு வந்த பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு முன்பாக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து மீண்டும் நடை திறக்கப்பட்டது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப்கார், வின்ச் போன்றவற்றில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் நடந்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த சேகர்(52) என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி கோவில் படிப்பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.
ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டது தெரியவரவே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை கீழே கொண்டுவந்து அடிவாரம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது உறுதியானது. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகம் அடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
தற்போது கடும் கோடைவெயில் அடித்துவரும் நிலையில் பகல் பொழுதில் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்பவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்படுகிறது. இதனை போக்க பல்வேறு இடங்களில் தண்ணீர்பந்தல் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு முன்பாக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து மீண்டும் நடை திறக்கப்பட்டது.






