என் மலர்
கடலூர்
பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் நீடிக்கிறது.
கடலூர் மாவட்டத்திலும் சுமார் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் வர்த்தகம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்ட செல்ல முடியவில்லை. இதனால் பல தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
கடலூர் மாவட்டத்துக்கு கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அரிசி, பருப்பு, வெங்காயம், காய்கறிகள், பழங்கள் லாரிகளில் கொண்டுவரப்படும். லாரிகள் ஓடாததால் வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறிகள் வரத்து அடியோடு நின்றது.
இதைத்தொடர்ந்து கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்களில் நேற்று முதல் காய்கறிகள் வந்திறங்கின. எம்.புதூர், எஸ்.புதூர், வடலூர் போன்ற பகுதிகளில் இருந்து அரசு பஸ்களில் காய்கறிகள், வாழைத்தார்கள், பழங்கள் கொண்டுவரப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 500 லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கள் போன்ற பகுதிகளில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள் எதுவும் வரவில்லை. இதனால் காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக மரக்காணம் பகுதியில் உப்புகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டன் உப்புகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
லாரிகள் ஓடாததால் உப்பளத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமக விழுப்புரம் மாவட்டத்தில் லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களும் என 20 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.
வீராணம் ஏரி நிரம்பி கடல்போல காட்சியளித்தது. பின்னர் தொடர்ந்து மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து ஏரி வறண்டு காணப்பட்டது. சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக வீராணம் ஏரி காட்சியளித்தது. விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.
இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அணைக்கரை பகுதிக்கு நேற்று காவிரி நீர் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்ணீரின் வேகம் குறைந்ததால் அந்த பகுதிக்கு காவிரி நீர் வரவில்லை. நாளை காவிரிநீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கீழணைக்கு காவிரிநீர் வந்து சேரும்.
அதன்பிறகு கீழணையில் இருந்து செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வரும். இந்த பகுதிகளில் முட்புதர்கள் சூழ்ந்திருப்பதாலும், சரியாக தூர்வாரப்படாததாலும் வீராணம் ஏரிக்கு அங்கிருந்து காவிரி நீர் வேகமாக வருவது தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
வருகிற 1-ந் தேதிக்கு பின்னர் காவிரி நீர் வீராணம் ஏரிக்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
ஏரியில் 37 அடி தண்ணீர் நிரம்பிய பிறகு தான் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்படும் என தெரிகிறது. எனவே வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப 1 வாரத்துக்கு மேல் காலம் ஆகலாம்.
கூடலூர் தாலுகா மண்வயல் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றார். இது குறித்து பெற்றோர் கூடலுார் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ். சதீஷ், சியாபுதீன், சிஜூ உள்ளிட்ட போலீசார் மாணவி மற்றும் அவரை கடத்திய வாலிபரை தேடி வந்தனர்.
அப்போது கூடலூர் சளிவயலை சேர்ந்த மணி (வயது 20) என்பவர் மாணவியை கடத்தியது தெரிய வந்தது. இந்த நிலையில் கூடலூர் நகர பகுதியில் மணி நடந்து சென்றதை போலீசார் கண்டனர். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் மாணவியை போலீசார் மீட்டனர். இது குறித்து மணி மீது போலீசாார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.
கும்பகோணத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று இரவு பால் வேன் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த வேனை அன்பழகன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். முருகன் கிளீனராக இருந்தார்.
அந்த வேன் நள்ளிரவு 12 மணிக்கு விருத்தாசலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே வந்தபோது சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் எதிர்பாரதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் அன்பழகன், கிளீனர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விருத்தாசலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பெ.பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து சாமி (வயது 65). விவசாயி. இவரது மகன்கள் சுப்பிரமணியன் (49), சிவக்குமார் (45), வெங்கடேசன் (38).
இவர்கள் விவசாய வேலை பார்த்து வருகின்றனர். 4 பேரும் கூரை வீடுகளில் அடுத்தடுத்து வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் சுப்பிரமணியன் வீட்டில் திடீரென்று தீப்பிடித்தது.
அப்போது வீட்டின் மேற்கூரையில் இருந்து தீ பிழம்புகள் கீழே விழுந்தன. வீட்டுக்குள் படுத்து தூங்கிய சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் முன்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
உள்ளே தூங்கி கொண்டிருந்த 2 குழந்தைகள் வெளியேற முடியாமல் தவித்தனர். இதையறிந்த சுப்பிரமணியனும், அவரது மனைவியும் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த மகாலிங்கம் (52), வானம்மாள் (32) ஆகியோர் அங்கு ஓடிவந்தனர்.
அப்போது சுப்பிரமணியன் வீட்டின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. உடனே அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 2 குழந்தைகளையும் உயிருடன் மீட்டனர்.
இதில் மகாலிங்கத்துக்கும், வானம்மாளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதற்கிடையே காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த முத்துசாமி, சிவக்குமார், வெங்கடேசன் ஆகிய 3 பேரின் வீடுகளுக்கும் தீ பரவியது.
இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 4 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. தீ விபத்தில் வெங்கடேசன் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 15 மூட்டை விதை நெல், ரேஷன் கார்டு, வீட்டின் பத்திரம் மற்றும் பல்வேறு பொருட்கள் எரிந்தன.
இதேபோல் சிவக்குமார் வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் 25 மூட்டை விதை நெல் எரிந்து நாசமானது.
சுப்பிரமணியன் வீட்டில் இருந்த 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம், 50 மூட்டை விதை நெல் உள்பட பல பொருட்கள் எரிந்தன.
இந்த தீ விபத்தில் 4 வீடுகளிலும் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த மகாலிங்கம், வானம்மாள் ஆகியோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
பெண்ணாடம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் திட்டக்குடியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்துதான் தீயணைப்பு வீரர்கள் வரவேண்டி உள்ளது. அவர்கள் 18 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருவதற்குள் தீ எரிந்து முடிந்து விடுகிறது.
கடந்த 20 ஆண்டு காலமாக இந்த நிலைதான் ஏற்படுகிறது. எனவே, பெண்ணாடம் பகுதியில் தீயணைப்பு நிலையம அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி பகுதியில் பள்ளி வாசல் உள்ளது. பள்ளி வாசலை பராமரித்து வருபவர் நேற்று இரவு வழக்கம்போல் பள்ளிவாசலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் பள்ளிவாசலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த ஒரு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர். மற்றொரு உண்டியலை தூக்கிக்கொண்டு வெளியே சென்றனர். பின்னர் அந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு உண்டியலை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இன்று அதிகாலை வழக்கம்போல் தொழுகைக்கு வந்த முஸ்லிம்கள் பள்ளி வாசலின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பள்ளிவாசலில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும் அங்கிருந்த உண்டியலில் பணம் திருடுபோய் இருந்தது. மற்றொரு உண்டியலை காணவில்லை. அதை தேடி பார்த்தபோது பள்ளிவாசல் அருகே உள்ள புதரில் கிடந்தது.
இதுகுறித்து பள்ளி வாசல் தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு பள்ளிவாசல் அருகே உள்ள துரைசாமி என்பவருக்கு சொந்தமான கடையில் பூட்டை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரம் பொருட்கள் மட்டும் ரூ.3 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த பகுதியில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.
இவருக்கும், பாண்டியனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் பாண்டியனும், தெய்வசிகாமணியும் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தெய்வசிகாமணியின் தாய் தனலட்சுமி, பாட்டி அசோகை ஆகியோர் பாண்டியனிடம், ஏன் தெய்வசிகாமணியுடன் பேசி கொண்டிருக்கிறாய்? உங்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருக்கிறதே பிறகு ஏன் பேசி கொண்டிருக்கிறாய்? என்று கூறி விட்டு சென்றனர்.
இதனால் பாண்டியன் ஆத்திரம் அடைந்தார். இரவு 9 மணி அளவில் பாண்டியன், அவரது தம்பி சுரேஷ் (32), அதே பகுதியை சேர்ந்த பிரபுராஜ் (33) ஆகியோர் தெய்வசிகாமணி வீட்டுக்கு சென்றனர்.
அங்கிருந்த தெய்வசிகா மணி, அவரது தாய் தனலட்சுமி மற்றும் பாட்டி அசோகை ஆகியோரை தாக்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சபரிநாதன் (29) என்பவர் அங்கு வந்தார். அவர் பாண்டியனிடம், ஏன் சண்டை போட்டு கொண்டிருக்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டார்.
ஏற்கனவே பாண்டியனுக்கும், சபரிநாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் கத்தியால் சபரிநாதன் கழுத்தில் குத்தினார். இதில் அதே இடத்தில் சபரிநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று சபரிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே சபரிநாதன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி மஞ்சுளா (25) மற்றும் உறவினர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் கதறி அழுது புரண்டனர். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர்.
இந்த கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் தலைமறைவாகி விட்ட பாண்டியன், சுரேஷ், பிரபுராஜ் ஆகியோரை தேடிவந்தனர்.
இன்று காலை அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.
தொடர்ந்து மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் படிபடியாக குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்து அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அணைக்கரை பகுதிக்கு காவிரிநீர் வந்து சேர்கிறது.
இதையடுத்து கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கீழணைக்கு இன்று மாலை காவிரிநீர் வந்து சேரும். அங்கிருந்து இன்று இரவு அல்லது நாளை வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் எப்போது வரும் என்றும் விவசாயிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.
வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தவுடன் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. கூட்டத்தில் நடிகையும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீபிரியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர்களுக்கு என்ன தெரியும் என்கிறார்கள். கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கலைத்துறையில் இருந்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆகவே நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை.
மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருக்கிறார். மாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க மாட்டோம். உண்மையான அரசியல்வாதியாக கமல்ஹாசன் இருப்பார். தமிழ்நாட்டில் மக்களுக்கு மறதி அதிகம் உள்ளது. கொள்ளையடித்தவரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.
பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் சிந்தித்து செயல்பட முடியும். மாற்றம் தேவை, அது யார்? என்பதை சிந்தித்து, நம்மவருக்கு (கமல்ஹாசன்) வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.
கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்துவது, பெண்களை அதிக அளவில் கட்சியில் சேர்ப்பது, படித்த இளைஞர்கள், மகளிரணியை வைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, வாரத்தில் ஒரு நாள் சுகாதார பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளது. ஆட்சி அதிகாரம் சரியில்லாததால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. பள்ளிக்கூடங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்களுக்கு எப்படி பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து விட்டது. சமீபத்தில் குட்கா ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். தமிழகத்தில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை கமல்ஹாசன் தருவார்.
இவ்வாறு அவர் கூறினார். #kamal #actresssripriya
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவர்கள், பள்ளியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருவது வழக்கம். அதன்படி இயற்கை உபாதைக்காக விவசாய நிலத்திற்கு சென்ற ஒரு மாணவன் எதிர்பாராதவிதமாக தரை கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
வேப்பூர் அருகே பூலாம்பாடியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவருடைய மகன் சசிபாலன் (வயது 14). வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு சென்றான். ஆனால் மாலை பள்ளி முடிந்தவுடன் வீடு திரும்பவில்லை.
இதில் பதறிய அவனது பெற்றோர், அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவன் கிடைக்கவில்லை. இது குறித்து முருகேசன் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சசிபாலனின் நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது பள்ளி இடைவேளை நேரத்தில் சசிபாலன் இயற்கை உபாதைக்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளான். அதன்பிறகு அவன் பள்ளிக்கும் வரவில்லை, வீட்டிற்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பள்ளியின் அருகே உள்ள விவசாய நிலப்பகுதியில் மாணவன் சசிபாலனை தேடி பார்த்தனர். அப்போது அங்குள்ள தரை கிணற்றில் சசிபாலன் பிணமாக மிதந்து கிடந்தான். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளி இடைவேளை நேரத்தில் இயற்கை உபாதைக்காக விவசாய நிலத்திற்கு வந்த சசிபாலன், அங்குள்ள தரை கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் மாணவனின் உடலை மீட்க வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் கிடந்த மாணவன் சசிபாலனின் உடலை மீட்டு வெளியே எடுத்து வந்தனர். அப்போது அவனது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இதையடுத்து சசிபாலனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை வேப்பூர் அரசு பள்ளி முன்பு சசிபாலனின் பெற்றோர், உறவினர்கள் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பள்ளியில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், இறந்த மாணவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த வேப்பூர் தாசில்தார் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சசிபாலனின் குடும்பத்துக்கு உரிய நிவாரண தொகை வழங்கப்படும், அவனது தாய்க்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும், அரசு பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார். இதனை ஏற்று உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அரசு பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைக்காக விவசாய நிலத்திற்கு சென்ற மாணவன், தரை கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சு.கீணனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர். நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங் கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை ஒரு பையில் மூட்டையாக கட்டி கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தாலி செயினையும் திருடி சென்றனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கம்மாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம மனிதர்கள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கோவில் அருகே பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலும் மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






