search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலைவனம் போல் வறண்டு கிடக்கும் வீராணம் ஏரி.
    X
    பாலைவனம் போல் வறண்டு கிடக்கும் வீராணம் ஏரி.

    வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வருவதில் தாமதம்

    கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் வருகிற 1-ந் தேதிக்கு பின்னர் வீராணம் ஏரிக்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது. #veeranamlake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல காட்சியளித்தது. பின்னர் தொடர்ந்து மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து ஏரி வறண்டு காணப்பட்டது. சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக வீராணம் ஏரி காட்சியளித்தது. விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அணைக்கரை பகுதிக்கு நேற்று காவிரி நீர் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்ணீரின் வேகம் குறைந்ததால் அந்த பகுதிக்கு காவிரி நீர் வரவில்லை. நாளை காவிரிநீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அங்கிருந்து கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கீழணைக்கு காவிரிநீர் வந்து சேரும்.

    அதன்பிறகு கீழணையில் இருந்து செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வரும். இந்த பகுதிகளில் முட்புதர்கள் சூழ்ந்திருப்பதாலும், சரியாக தூர்வாரப்படாததாலும் வீராணம் ஏரிக்கு அங்கிருந்து காவிரி நீர் வேகமாக வருவது தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

    வருகிற 1-ந் தேதிக்கு பின்னர் காவிரி நீர் வீராணம் ஏரிக்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

    ஏரியில் 37 அடி தண்ணீர் நிரம்பிய பிறகு தான் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்படும் என தெரிகிறது. எனவே வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப 1 வாரத்துக்கு மேல் காலம் ஆகலாம்.
    Next Story
    ×