என் மலர்
நீங்கள் தேடியது "two temple jewellery robbery"
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சு.கீணனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர். நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங் கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை ஒரு பையில் மூட்டையாக கட்டி கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தாலி செயினையும் திருடி சென்றனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கம்மாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம மனிதர்கள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கோவில் அருகே பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலும் மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






