என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சிறுபாக்கம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சிறுபாக்கம் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி அருள் (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அருள் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள் தனது குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் தூங்கச்சென்றார். பின்னர் நேற்று காலை அருள், எழுந்து வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, துணிமணிகள் அனைத்து சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சிறுபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள் தனது குழந்தைகளுடன் வீட்டின் மாடிக்கு தூங்க சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதற்கிடையே தடயவியல் நிபுணர்களும் வந்து, வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    கடலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி, இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் நெத்தனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகள் அன்னலட்சுமி (வயது 20). இவர் வடலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அன்ன லட்சுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    உடனே அவரது பெற்றோர் கடையில் விசாரித்தனர். அதற்கு அவர்கள், உங்கள் மகள் வேலை முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பி விட்டார் என்று கூறினர்.

    இதைத்தொடர்ந்து அன்னலட்சுமியின் பெற்றோர் தங்களது உறவினர்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து அன்ன லட்சுமியின் தாயார் ராஜேஸ்வரி வடலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து அன்னலட்சுமியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் புவனகிரி வடக்குத்திட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சரண்யா (20). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் உறவினர் வீட்டுக்கு சரண்யா சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

    இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் சரண்யாவை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சரண்யாவை தேடிவருகின்றனர்.

    நெல்லிக்குப்பம் அருகே வாலிபால் விளையாடுவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே குணமங்கலம் சேர்ந்தவர் தேவதாஸ். அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.

    இந்த நிலையில் தேவதாஸ் அணியினரும், தினேஷ்குமார் அணியினரும் அதே ஊரில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தில் இரு தரப்பினரும் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி கத்தி, இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கிக் கொண்டனர்.

    இதில் மதியழகன், சிவசக்தி, அசோக்குமார், கந்தசாமி, லட்சுமி, ரவி, ஜனார்த்தனன், ராயர் ஆகிய 8 பேருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் குணமங்கலத்தை சேர்ந்த தேவதாஸ், ஜனார்த்தனன், பிரேம்குமார், மணிபாலன், அருண், ராயர், தினேஷ் குமார், மதியழகன், சிவசக்தி, ஹரிபாபு, அசோக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே தேர்தல் முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் அருகே உள்ள அவியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 52). விவசாயி.

    இவர் கடந்த பஞ்சாயத்து தேர்தலின்போது தற்போதைய தலைவருக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கும், அய்யனாருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது.

    நேற்று அய்யனார் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் ஆதரவாளர்கள் சுப்பிரமணி, முருகன், முத்துவேல், மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்தனர். சிறிது நேரத்தில் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.

    ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அய்யனாரை தாக்கினர். படுகாயம் அடைந்த அவர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குபதிவு செய்து முருகன் உள்பட 4 பேரை கைது செய்தார்.

    கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 200 அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட போக்குவரத்து மண்டலத்துக்கு 11 டெப்போக்கள் உள்ளது. இந்த டெப்போக்களில் இருந்து 608 பஸ்கள் மாவட்டம் முழுவதும் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டு வந்தது.

    கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மார்ச் 24-ந் தேதி முதல் நாளை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து தடைபட்டது. இதனால் கடலூர் மாவட்டத்திலும் பஸ்கள் இயங்கவில்லை. நாளை ஊரடங்கு உத்தரவு முடிகிறது.

    கடந்த 15-ந் தேதி 3-ம் கட்ட ஊரடங்கு முடியும் தருவாயில் இருந்தபோது கடலூர் மாவட்டத்தில் அனைத்து பஸ்களும் இயங்க தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எந்த தளர்வுகளும் இல்லை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்ததால் பஸ்கள் இயங்கவில்லை.

    ஜூன் 1-ந் தேதி தமிழக அரசு பஸ்களை இயக்க உத்தரவிட்டால் கடலூர் மாவட்டத்தில் பஸ்களை இயக்க முன்னேற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 1-ந் தேதி பஸ்கள் இயங்கினால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

    இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 200 அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கடலூரில் இருந்து செல்லும் பஸ்கள் அனைத்திலும் 40-க்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். இதன் காரணமாக கூடுதல் பஸ் இயக்கினால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாதுகாப்பாக பயணம் செய்வார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் அதிக பயணிகள் ஏறும் 25 பஸ் நிறுத்தங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பஸ் நிறுத்தங்களில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டு கூட்டும் அதிகமாக இருந்தால் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இதையடுத்து பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போதிய அளவில் ஓய்வு அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணி அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அரசு உத்தரவிட்டால் கடலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான நெய்வேலி, விருத்தாசலம், வடலூர், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பஸ்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் அரசு அறிவிப்பு வந்த உடன் டிரைவர் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வர தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கண்டதகவலை போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    பெண்ணாடம் அருகே மது விற்ற பெண் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண்ணாடம்:

    பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துறையூரில் வீட்டில் பதுக்கி மது விற்பனை செய்த பிரபு, வெண்ணங்கரும்பூர் பழைய காலனி பகுதியை சேர்ந்த கலையரசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பெலாந்துறையில் ஒரு வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து மது விற்ற சின்னதுரை, அன்புராஜ், சேதுராமன், உஷா, டி.பவழங்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் மதியம் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வெயிலில் செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    அடிக்கடி தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். எடை குறைவான, இறுக்கம் இல்லாத, கதர் அல்லது பருத்தி ஆடைகளை அணிவது, கண்களுக்கு பாதுகாப்பு கண்ணாடி மற்றும் வெயிலில் செல்லும்போது குடை, மற்றும் கால்களுக்கு காலணிகள் அணிந்து செல்ல வேண்டும்.

    வெளியில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும்போது, வெளிப்புறங்களில் கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்கவும்.

    மது அருந்துவது, டீ, காபி, கார்போ ஹைட்ரேட் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர்ச்சத்தை குறைக்கும். உப்பு கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜுஸ், லஸ்ஸி, மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர் சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக பருக வேண்டும். புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் மற்றும் பழைய உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    வெயிலில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை கழுத்து மற்றும் முகம், மூட்டு பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும்.

    நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ தனியே விட்டு விட்டு செல்லக்கூடாது. வெயிலினால் தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். மின் விசிறி மற்றும் ஈரத்துணிகளை பயன்படுத்துதல் வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். வீட்டை குளிர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். வீட்டில் உள்ள கால்நடைகளை நிழலான இடத்தில் பராமரித்து அவைகளுக்கு தேவையான தண்ணீர் அடிக்கடி கொடுக்கப்பட வேண்டும். பணியாளர்கள் நேரடியாக சூரிய ஒளி படும்படியான இடத்தில் பணிபுரிவதை தடுக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண் பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியில் செல்லும்போது தேவையான மருந்துகளுடன் கூடுதல் கவனத்துடன் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவிர்க்க இயலாத சூழலில் வெளியில் செல்லும் பொழுது அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    கடலூர் மாவட்ட ரேசன் கடையில் ஜூன் 1 -ந் தேதி முதல் கடை பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் மே 31-ந் தேதி வரை தமிழக அரசு சார்பில் கொரானோ தொற்றுநோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

    இதன்பேரில் கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 1,416 ரேசன் கடைகள் இருந்து வருகின்றன. இதில் 7 லட்சத்து 18 ஆயிரத்து 428 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதனைத்தொடர்ந்து ஜூன் 1 -ந் தேதி முதல் ரே‌ஷன் கடை பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது. இதில் ஒருநாளைக்கு 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

    இதன் மூலம் தினந்தோறும் 100 பேர் என்ற சுழற்சி முறையில் அனைவருக்கும் ரே‌ஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரே‌ஷன் கடைகளில் கூட்டம் அதிகரிக்காமல் சமூக இடைவெளியில் நின்று பொதுமக்கள் எளிதாக பொருட்கள் வாங்க வேண்டி இந்த டோக்கன் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரானோ தொற்றுநோய் பரவாமல் தடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

    கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 பேரையும் பாதுகாப்பாக ஆம்புலன்சு மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தண்டபாணி நகரை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் பணி புரிந்த லேப் டெக்னீசியன் 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த கணவர், 2 பிள்ளைகள், மாமனார் மற்றும் மாமியாருக்கு என 5 பேருக்கும் தொற்று நோய் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் நகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அந்தப்பகுதி முழுவதும் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் 5 பேருக்கும் தொற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 பேரையும் பாதுகாப்பாக ஆம்புலன்சு மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    அந்த பகுதி முழுவதும் மீண்டும் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி நடைபெற்றது. இது மட்டுமன்றி அந்தப் பகுதி முழுவதும் கடும் கட்டுப்பாடு விதித்ததுடன் பாதிக்கப்பட்ட 5 பேரின் வீட்டுக்கு சென்றவர்கள் யார் ? வீட்டுக்கு வந்துள்ளனர் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது

    கடலூர் அருகே இரண்டு குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2 குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஜெயம்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி நித்யா (வயது 32). இவர்களுக்கு இன்பநாதன் (13) என்ற மகனும், இந்துமதி (10) என்ற மகளும் உள்ளனர்.

    ரங்கநாதன் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் கடந்த சில வருடங்களாக நித்யா தனது 2 குழந்தைகளுடன் வட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ரங்கநாதன், மனைவி நித்யாவின் தம்பி பாலமணிகண்டனுக்கு போன் செய்து மனைவி பற்றி தவறாக பேசினார். இதனால் விரக்தி அடைந்த நித்யா தனது குழந்தைகளுக்கு குளிர் பானத்தில் வி‌ஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்தார். சிறிதுநேரத்தில் 3 பேரும் மயங்கி கிடந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நித்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தைகள் இன்பநாதன், இந்துமதி ஆகிய 2 பேரையும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூர் அருகே இருதரப்பினர் மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள தொண்டமாநத்தத்தை சேர்ந்தவர் வாசுதேவன். வீட்டின் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக வாசுதேவனுக்கும், வேல்முருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

    இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் விஜய்(வயது 20), பிரகாஷ்(28) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
    கடலூர் அருகே சாலை வரி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கார்-ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் கால் டாக்ஸி, மேக்சி கேப், ஆட்டோ ஓட்டுனர்கள் என பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் இன்று காலை கடலூர் மாவட்ட பொறுப்பாளர் ஷேக் தாவூது தலைமையில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    பின்னர் ஊரடங்கு உத்தரவு காலத்தில் கட்ட வேண்டிய 2 காலாண்டு வாகன வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வாகனத்தின் தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், பர்மிட் ஆகியவற்றுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் பதிவு செய்த கால் டாக்ஸி, மேக்சி கேப் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகையாக 20 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கால்டாக்சி, மேக்சி கேப், ஆட்டோக்கள் 50 சதவீதம் பயணிகளுடன் தமிழகம் முழுவதும் இயக்க அனுமதி அளிக்க வேண்டும். வாகன தவணையை கட்டுவதற்கு 6 மாத காலம் அவகாசம் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள நிலையில் கடன்களுக்கு எந்தவித வட்டியும் அபராதமும் நிதி நிறுவனங்கள் விதிக்கக் கூடாது.

    மேற்கண்ட கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களுடைய வாகனத்தை மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைப்பது தவிர வேறு வழி இல்லை என கூறி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்து அங்கிருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக கலெக்டரிடம் கோரிக்கை மனு அறியுங்கள் என கூறினார்கள்.
    ×