என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் முதுநகர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி அஞ்சலைதேவி (வயது 50). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலியில் திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மேல்பாப் பணம் பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முருகானந்தம் கல்லூரி மாணவியிடம் திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். இதைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முருகானந்தத்திடம் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் முருகானந்தம் கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி நடந்த சம்பவங்களை அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் கல்லூரி மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகானந்தத்தை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மருதாடு சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 26). டிரைவர். இவர் மருதாடு பகுதியில் இருந்து கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்றார். இவர் நெல்லிக்குப்பம் அருகே தோட்டப்பட்டு பகுதியில் சென்றார்.

    அந்த வழியாக பண்ருட்டி ஏ.பி. குப்பம் பகுதியை சேர்ந்த அறிவழகன் (22) மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர் மின்சாரத்துறையில் தற்காலிகமாக பயிற்சி பெற்று வந்தார். இவருடன் கணிசப்பாக்கம் சேர்ந்த கயல்விழி (18) என்பவரும் வந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் சின்னத்தம்பி உயிர் இழந்தார். அறிவழகன், கயல்விழி காயத்துடன் உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அறிவழகன் உயிர் இழந்தார். கயல்விழி என்பவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கயல்விழியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 87 வயது முதியவர் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தடுக்கும் வகையில் வருகிற 30-ந்தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்திலும் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களால் இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது. பின்னர் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றியவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்கள் மூலமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தது. அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் செயல்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. இதனால் இந்த மாவட்டத்தை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் தண்டபாணி நகரில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த முதியவர் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    அவர்களில் 87 வயது முதியவர் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    கீழணையில் இருந்து 2 நாட்களாக வடவாற்றில் நாள் ஒன்றுக்கு 110 கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வீராணம் ஏரிக்கு 97 கன அடியாக வரத்து இருந்தது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பபடுகிறது தற்போது கோடைவெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    எனவே சென்னை குடிநீருக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 57 கன அடி மட்டும் தண்ணீர் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது. நீர்மட்டம் சரிந்ததால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பெய்த கோடை மழை, நீர் அணைகள் பராமரிப்பு காரணமாக தேக்க முடியவில்லை. இதனால் மேற்கு மாவட்ட அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரி ஆறு வழியாக கல்லணைக்கு வந்தது.

    தற்போது கல்லணையில் மராமத்துப் பணிகள் நடக்க இருப்பதால் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு, அதனை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. கீழணையில் இருந்து 2 நாட்களாக வடவாற்றில் நாள் ஒன்றுக்கு 110 கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் வீராணம் ஏரிக்கு 97 கன அடியாக வரத்து இருந்தது. தற்போது வீராணம் ஏரியில் 269.5 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடலூர் அருகே கணவன் இறந்த நாளில் மனைவி மற்றும் மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள கோண்டூர் சாய்பாபா நகரை சேர்ந்தவர் முத்து. இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது மனைவி லதா (வயது 60). இவரது மகன் சேதுராமன்(25). இவர்கள் இருவரும் சாய்பாபா நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இன்று காலை லதாவின் வீடு பூட்டிக்கிடந்தது. வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். உள்ளே சென்று பார்த்த போது லதாவும், ஜெயராமனும் இறந்து கிடந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் கடலூர் புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். லதாவின் வீட்டில் வி‌ஷ பாட்டில் ஒன்று கிடந்தது. எனவே 2 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. பின்னர் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரைணையில் இதே நாளில் லதாவின் கணவர் முத்து கடந்த வருடம் இறந்ததாக தெரிவித்தனர். அதன்படி 2 பேரும் இன்று தற்கொலை செய்து உள்ளனர்.

    தாயும், மகனும் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டனரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.
    கடலூர்:

    உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. தற்போது ஜூன் 30-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்கில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 463 ஆக இருந்தது. நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

    கடந்த ஜூன் 1-ந்தேதி சென்னையில் ஆலந்தூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்காரராக வேலை பார்த்த ஒருவர் தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊரான கடலூர் வண்டிபாளையத்துக்கு வந்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்று காலை வந்தது.

    அதில் லஞ்சஒழிப்பு போலீஸ்காரர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதில் 1½ வயது குழந்தைக்கும் கொரோனா தொற்று பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

    கடந்த 1-ந் தேதி சென்னையில் இருந்து 25 வயது பெண் ஒருவர் பச்சையாங்குப்பம் பகுதிக்கு வந்திருந்தார். அவருக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்று காலை வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தாண்டி குப்பம் பகுதிக்கு ஒருசிலர் வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    கொரோனா பாதித்த 6 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதையடுத்து போலீஸ்காரர் வசித்து வந்த வண்டிபாளையம் பகுதி பேரிகார்டு வைத்து அடைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் வெளியே வரவோ மற்றவர்கள் அந்த வண்டிபாளையத்துக்குள் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். ஆலந்தூர் பகுதியில் பணியாற்றி லஞ்சஒழிப்பு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் சென்னை ஆலந்தூரில் பணியாற்றிய போலீசாரை தனிமைப்படுத்தி உள்ளனர்.

    இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று மட்டும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் 11,844 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 154 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
    விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி செய்த புதுச்சேரியை சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காவனூர் பைத்தாம்பாடியை சேர்ந்தவர் பாவாடை (வயது 65), விவசாயி. இவர் 2 பசுமாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி தவளக்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் (37), அவரது மனைவி சுதா (33) மற்றும் பைத்தாம்பாடியை சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகியோர் தாங்கள் பால் குளிரூட்டும் கம்பெனி தொடங்கி உள்ளதாகவும், தங்கள் கம்பெனிக்கு பால் வினியோகம் செய்யும்படியும் பாவாடையிடம் கூறியுள்ளனர். மேலும் பால் கொள்முதல் செய்யப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு பணம் பட்டுவாடா செய்துவிடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதை நம்பிய பாவாடை, அந்த கம்பெனிக்கு பால் வினியோகம் செய்தார். இந்நிலையில் பால் கொள்முதல் செய்த பிறகு, அதற்கான ரூ.24 ஆயிரத்தை பாவாடையிடம் செல்வக்குமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோர் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுபற்றி அவர்களிடம் பலமுறை கேட்டும் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததோடு, பாவாடையை திட்டி கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. அப்போது தான் அவருக்கு, செல்வக்குமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோர் பால் கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாரிடம், பாவாடை புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தன்னிடம் புதுச்சேரி தவளக்குப்பத்தை சேர்ந்த செல்வக்குமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோர் பால் கொள்முதல் செய்து ரூ.24 ஆயிரம் மோசடி செய்து விட்டதாகவும், இது போன்று மேலும் 70 பேரிடம் இருந்து பால் கொள்முதல் செய்து மொத்தம் 32 லட்சத்து 17 ஆயிரத்து 924 ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

    மனுவை பெற்றுக்கொண்ட டி.ஐ.ஜி.சந்தோஷ்குமார், அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி செய்த சுதா, செல்வக்குமார் ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள காரை பறிமுதல் செய்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் 9 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் நேற்று உத்தரவிட்டார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 9 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் நேற்று உத்தரவிட்டார். அதன் படி திட்டக்குடி, பண்ருட்டி, ஆலடிக்குப்பம், விருத்தா சலம், கடலூர் துறைமுகம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, ரெட்டிச்சாவடி, பரங்கி பேட்டை, சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    புவனகிரி அருகே பெண்ணை மிரட்டியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரது தாய் தமிழ்மணி. அன்பரசன் வீட்டின் முன்பு புவனகிரி மஞ்சகுழி கிராமத்தை சேர்ந்தவர் அன்புகாந்தி (வயது 35). இவரது நண்பர் பார்த்தீபன் இருவரும் மதுபோதையில் ஆபாச வார்த்தையால் திட்டி கொண்டிருந்தனர்.

    அப்போது தமிழ்மணி அவர்களிடம் தட்டிகேட்டார். அன்புகாந்தி கீழே கிடந்த செங்கலை எடுத்து தமிழ்மணி தலையில் தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அன்பரசன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அன்புகாந்தியை கைது செய்தனர்.
    பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் அதிமுக சார்பில் 2 ஆயிரம் பேருக்கு அமைச்சர் எம்.சி. சம்பத் நிவாரணஉதவிகள் வழங்கினார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் அ.தி.மு.க. சார்பில் 2 ஆயிரம் பேருக்கு அமைச்சர் எம்.சி. சம்பத் நிவாரணஉதவிகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் தேவனாதன் தலைமை தாங்கினார். ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், மர வேலை செய்பவர்கள், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் இந்திராநகர் மாற்று குடியிருப்பில் வசிக்கும் இருளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை ஆகிய நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் கலைஅரசன், மாவட்ட கவுன்சிலர் பெருமாள், கூட்டுறவு சங்க தலைவர்கள் பத்திரக்கோட்டை கல்யாண சுந்தரம், முத்தாண்டிக்குப்பம் பிரபு, பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் கீழ்மாம்பட்டு வசந்தகுமாரி ஜெயராமன், ஒன்றிய இணை செயலாளர் மாணிக்கம், துணை செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் சந்தானம், கூட்டுறவு சங்க தலைவர் அருள் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இந்திரா வடிவேல், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், மேல்மாம்பட்டு பஞ்சாயத்துதலைவர் முத்துலிங்கம், தோப்பு கொல்லை சட்டநாதன், மருங்கூர் இளங்கோ, சரவணன், சிவக்குமார், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மதுகுடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள விசூர் காலனியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன்(வயது 44). தொழிலாளி. இவருடைய மனைவி சரளா(38). இவர்களுக்கு அலெக்ஸ் பாண்டியன்(21) என்கிற மகனும், சுவேதா (17) என்கிற மகளும் உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். சுவேதா பண்ருட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சவுந்தரபாண்டியன் தினமும் மதுகுடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர்களது குடும்பத்தினரிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினமும் சவுந்தரபாண்டியன் வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மனைவி சரளா, மகள் சுவேதாவிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை வீட்டை விட்டு அடித்து வெளியே துரத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர்கள் இருவரும் நெய்வேலியில் உள்ள சரளாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதற்கிடையே வெளியே சென்றிருந்த அலெக்ஸ் பாண்டியன் வீட்டுக்கு வந்து, தனது தந்தையிடம் இதுகுறித்து தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு தனது மகன் என்றும் பாராமல் அலெக்ஸ்பாண்டியனை சவுந்தரபாண்டியன் தாக்கியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ் பாண்டியன், அருகில் இருந்த கட்டையை எடுத்து சவுந்தரபாண்டியனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுந்தரபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அலெக்ஸ்பாண்டியனை கைது செய்தனர். 
    ×