search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் உள்பட 6 பேருக்கு கொரோனா

    கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.
    கடலூர்:

    உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. தற்போது ஜூன் 30-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்கில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 463 ஆக இருந்தது. நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

    கடந்த ஜூன் 1-ந்தேதி சென்னையில் ஆலந்தூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்காரராக வேலை பார்த்த ஒருவர் தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊரான கடலூர் வண்டிபாளையத்துக்கு வந்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்று காலை வந்தது.

    அதில் லஞ்சஒழிப்பு போலீஸ்காரர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதில் 1½ வயது குழந்தைக்கும் கொரோனா தொற்று பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

    கடந்த 1-ந் தேதி சென்னையில் இருந்து 25 வயது பெண் ஒருவர் பச்சையாங்குப்பம் பகுதிக்கு வந்திருந்தார். அவருக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்று காலை வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தாண்டி குப்பம் பகுதிக்கு ஒருசிலர் வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    கொரோனா பாதித்த 6 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதையடுத்து போலீஸ்காரர் வசித்து வந்த வண்டிபாளையம் பகுதி பேரிகார்டு வைத்து அடைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் வெளியே வரவோ மற்றவர்கள் அந்த வண்டிபாளையத்துக்குள் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். ஆலந்தூர் பகுதியில் பணியாற்றி லஞ்சஒழிப்பு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் சென்னை ஆலந்தூரில் பணியாற்றிய போலீசாரை தனிமைப்படுத்தி உள்ளனர்.

    இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று மட்டும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் 11,844 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 154 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
    Next Story
    ×