என் மலர்
கடலூர்
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், நடப்பு ஆண்டில், தமிழ்நாட்டில் கார், குறுவை, சொர்ணவாரி நெற்பயிர் மற்றும் இதர காரீப் பருவ பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது. இதன்படி நடப்பாண்டில் கடலூர் மாவட்டத்தில் 517 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து சேர்ந்து கொள்ளலாம்.
இதன்படி கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி ஆகும். இதர காரீப் பருவ பயிர்களான உளுந்து, மணிலா கிராம அளவிலும், கம்பு, எள் பயிர்கள் பிர்கா அளவிலும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்டு 16-ந்தேதி ஆகும்.
ஆகவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் காப்பீட்டுத்தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிர் காப்பீட்டுத்தொகையில் விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.626, உளுந்துக்கு ரூ.331, மணிலாவுக்கு ரூ.525, கம்புக்கு ரூ.122, எள் ரூ.156-ம் காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், சிட்டா மற்றும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பிறகு, அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கடலூர் நகரில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கும் வகையிலும் போலீசார் கடலூர் நகரில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்தனர். இதற்காக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வின் அறிவுரையின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஆகாசமூர்த்தி, தினசரி பத்திரிகை நிறுவனம் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து நிதி திரட்டி சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் கடலூர் பஸ் நிலையம், முதுநகர் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என நகரில் 72 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதில் ‘தினத்தந்தி’ சார்பில் 3 கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலந்து கொண்டு, கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணிகர் சங்க தலைவர் துரைராஜ், சிப்காட் திட்ட அலுவலர் தமிழ்செல்வி, எழில்அரசன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. 12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 498 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 455 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை 5-ம் கட்டமாக வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி நோய் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் 60 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பஸ்களை இயக்கலாம் என அரசு அறிவித்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 போக்குவரத்து மண்டலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டது. பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. அரசு பஸ்களில் சமூக இடைவெளியுடன் குறைவான பயணிகளை பயணம் செய்து வந்தனர்.
தனியார் பஸ்களும் கடந்த 1-ந்தேதி முதல் இயக்கப்படலாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை அரசு பஸ்சில் குறைந்து காணப்பட்டதாலும், பொருளாதார சிக்கல்களின் காரணமாகவும் தனியார் பஸ்களை உரிமையாளர்கள் இயக்கவில்லை.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் தனியார் பஸ்களை இயக்குவது என்று பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து இன்று இயக்குவதற்கான நடவடிக்கையில் உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 240 தனியார் பஸ்களில் 50 சதவீத பஸ்கள் மட்டும் இன்று காலை இயக்கப்பட்டது. கடலூர், சிதம்பரம் பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தனியார் பஸ்கள் இன்று காலை இயங்கின.
தனியார் பஸ்களில் பணியாற்றிய டிரைவர்-கண்டக்டர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர். பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பயணம் செய்தனர். பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. அதனை கொண்டு பயணிகள் கைகளை சுத்தம் செய்தனர். தனியார் பஸ்களிலும் பயணிகளின் கூட்டம் இன்று காலை குறைவாகவே காணப்பட்டது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (11 -ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை முதனை, ஊ. மங்கலம் கொல்லிருப்பு, இருப்புக் குறிச்சி மேலக்குப்பம், சமட்டிக்குப்பம், அரசகுழி, கொளப்பாக்கம், காட்டுக் கூனங்குறிச்சி, பொன்னாலகரம், அம்பேத்கர் நகர், இருப்பு, கோட்டேரி, நறுமணம், கங்கைகொண்டான், கோபாலபுரம், குமாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை விருத்தாச்சலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்து உள்ளார்.
புவனகிரி:
புவனகிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளாற்று பாலத்தில் சந்தேகபடும்படி 3 பேர் பேசி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டம் தீட்டியது தெரிய வந்தது. அவர்கள் சந்திக்கும் நல்லான்பட்டினம் பகுதியை சேர்ந்த மணிமாறன், காசிராஜன், கீரப்பாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்துக்கு இளம்திரைமேடு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஊரடங்கு உத்தரவை மீறி தீ மிதி திருவிழா நடைபெறுவதாக தகவல் வந்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு அனுமதியின்றி திருவிழா நடத்தியவர்களிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.
பின்னர் ஊரடங்கு உத்தரவு இருக்கும் போது திருவிழா நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதையடுத்து கோவில் திருவிழா நடத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த 57 வயதுடைய முதியவர் 3 மாதகாலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். கடந்த 2 நாட்களாக உடல் நிலை மேலும் மோசமானது. இதையடுத்து அந்த முதியவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டது. நேற்று இரவு அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 57 வயதுடைய முதியவர் இறந்தார்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த 35 வயது உள்ள வாலிபருக்கும் நேற்று இரவு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2 பேருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 445 பேர் நேற்று வரை குணம் அடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
கடலூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று வரை 481-ஆக இருந்தது. இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் 492-ஆக அதிகரித்துள்ளது.
கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரும் மீன்களை வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி, ஐஸ் பெட்டிகளில் வைத்து லாரிகள் மூலம் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதுதவிர ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலமும் அமலில் இருந்தது. வழக்கமாக ஜூன் 15-ந்தேதி வரை 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும். ஆனால் மீனவர்களின் நலன்கருதி தமிழக அரசு மீன்பிடி தடைக்கால நாட்களை குறைத்துள்ளது. அதாவது ஜூன் 1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படகுகள் மற்றும் வலைகளை சீரமைக்கும் பணி முடிவடையாததாலும், மீன்களை விற்பனை செய்ய இடம் ஒதுக்கி கொடுக்காததாலும், ஊரடங்கால் வெளியூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்ததாலும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் தற்போது 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைத்துள்ளனர். இதனால் மீனவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்கள் தங்களது படகுகளில் டீசல் நிரப்பி, வலைகளை ஏற்றும் பணியிலும், நவீன எந்திரம் மூலம் ஐஸ் கட்டிகளை நிரப்பும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறுகையில், தற்போது மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி தலைமையில் அதிகாரிகள் துறைமுக பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீனவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்படி மீனவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், மீன்பிடித்து வந்த பிறகு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், பிடித்து வரும் மீன்களை எந்த நேரத்தில் விற்பனை செய்யலாம் என்பது போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 49 வயதுடையவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் சென்னையில் இருந்து வந்தவர். மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 29 வயது நபருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடலூர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதுடைய நபருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த 40 வயதுடையவர் சொந்த ஊரான புவனகிரிக்கு வந்தார்.
அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களை ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 471 இருந்தது. இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 475 ஆக உயர்ந்துள்ளது.
சிதம்பரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அன்பழகன்(வயது 21). இவரும், சிதம்பரம் அரங்கநாதர் நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவியும் ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்பழகனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த மாணவி, அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் அன்பழகன் நேற்று இரவு காதலி வீட்டில் உள்ள ஒரு அறையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது 2 கைகளும் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அவரது தலையின் பின்புறம் வெட்டு காயங்கள் இருந்தன. ஆனால் அந்த வீட்டில் மாணவியோ, அவரது குடும்பத்தினரோ யாரும் இல்லை.
ஆனால் வீட்டின் கதவு திறந்து இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு அன்பழகன், கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அன்பழகனின் உடலை கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காதல் தகராறில் அன்பழகனை சிலர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததும், பின்னர் அவரது உடலை வீட்டின் ஒரு அறையில் போட்டுவிட்டு தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறுகையில், காதலி வீட்டில் அன்பழகன் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். ஆனால் காதலியின் குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர். ஆகவே தலைமறைவாக உள்ள காதலியின் குடும்பத்தினரை பிடித்து விசாரணை நடத்தினால் தான் அன்பழகன் கொலைக்கான காரணம் தெரியவரும். மேலும் தலைமறைவாக உள்ள காதலியின் குடும்பத்தை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






