search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை வெயில்
    X
    கோடை வெயில்

    வெயிலில் பொதுமக்கள் மதியம் வெளியே வருவதை தவிர்க்கவும்- கலெக்டர் அறிவுரை

    கடலூர் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் மதியம் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வெயிலில் செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    அடிக்கடி தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். எடை குறைவான, இறுக்கம் இல்லாத, கதர் அல்லது பருத்தி ஆடைகளை அணிவது, கண்களுக்கு பாதுகாப்பு கண்ணாடி மற்றும் வெயிலில் செல்லும்போது குடை, மற்றும் கால்களுக்கு காலணிகள் அணிந்து செல்ல வேண்டும்.

    வெளியில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும்போது, வெளிப்புறங்களில் கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்கவும்.

    மது அருந்துவது, டீ, காபி, கார்போ ஹைட்ரேட் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர்ச்சத்தை குறைக்கும். உப்பு கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜுஸ், லஸ்ஸி, மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர் சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக பருக வேண்டும். புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் மற்றும் பழைய உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    வெயிலில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை கழுத்து மற்றும் முகம், மூட்டு பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும்.

    நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ தனியே விட்டு விட்டு செல்லக்கூடாது. வெயிலினால் தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். மின் விசிறி மற்றும் ஈரத்துணிகளை பயன்படுத்துதல் வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். வீட்டை குளிர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். வீட்டில் உள்ள கால்நடைகளை நிழலான இடத்தில் பராமரித்து அவைகளுக்கு தேவையான தண்ணீர் அடிக்கடி கொடுக்கப்பட வேண்டும். பணியாளர்கள் நேரடியாக சூரிய ஒளி படும்படியான இடத்தில் பணிபுரிவதை தடுக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண் பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியில் செல்லும்போது தேவையான மருந்துகளுடன் கூடுதல் கவனத்துடன் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவிர்க்க இயலாத சூழலில் வெளியில் செல்லும் பொழுது அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×