search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை வரி"

    • மக்கள் மீதான வரிச்சுமை அதிகரிக்கும் சாலை வரி உயர்வை அரசு கைவிட வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    2021-ம் ஆண்டில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது மக்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்தனர். அதனை தகர்த்து எறியும் வகையில் தொடர்ந்து தி.மு.க. அரசு சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு இப்படி விலைவாசியை உயர்த்தி கொண்டிருக்கிறது.

    தற்போது சாலை வரி உயர்வு குறித்து தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தி இருப்பது உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

    5 சதவீதம் வரி உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ஆகும்.

    அதேபோல் மோட்டார் வாகன வரியை உயர்த்தப் போவதாகவும் செய்தி வருகிறது. இந்த வரி உயர்வால் வாகனங்கள் விலை உயரும். தற்போைதய நிலவரப்படி 15 ஆண்டுக்கான சாலை வரியை வாகனங்களில் இருந்து 8 சவீதமாக வசூலிக்கப்படுகிறது.

    இனி இரு சக்கர வாகனங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் 10 சதவீத வரியும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வாகனங்களின் விலைக்கு ஏற்றபடி வரிகள் உயர்த்த படலாம்.

    2022-23-ம் ஆண்டில் 14.77 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது இந்த வரி உயர்வால் லாரி வாடகை கட்டணம் உயரும். அதன் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்தியா வசிய பொருள்கள் கடுமை யாக உயர்ந்து மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும்.

    சாலை வரிக்கு அக்கறை காட்டும் முதலமைச்சர், நல்ல முறையில் சாலை அமைக்க முன்னுரிமை அளிப்பாரா? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆகவே சாலை வரியை உயர்த்தும் முடிவை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இரு சக்கர வாகனத்தில் மொத்த விலையில் 8 சதவீதம் சாலை வரி விதிக்கப்பட்டு வருகிறது.
    • தி.மு.க. அரசின் செயல் வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது, வாகனங்களுக்கான சாலை வரி உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு, அம்மா ஆட்சிக் காலத்தில் வாகனங்களுக்கான சாலை வரி உயர்த்தப்படாத நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான வரி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்போது, இரு சக்கர வாகனத்தில் மொத்த விலையில் 8 சதவீதம் சாலை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை இரண்டாக பிரித்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள வாகனத்திற்கு 10 சதவீதம் சாலை வரி விதிக்கவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக உள்ள வாகனத்திற்கு 12 சதவீதம் சாலை வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று, தற்போது இரண்டு வகையாக உள்ள கார்களுக்கான வரியை நான்காக பிரித்து உயர்த்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க. அரசின் செயல் வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம். சாதாரண ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாகனங்களுக்கான சாலை வரி உயர்வினை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. அரசு மீண்டும் வாகனங்களுக்கான சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்த முடிவெடுத்திருப்பது தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
    • தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'விடியல் தருவோம்' என்று கூறி ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு, சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவெடுத்து உள்ளதாக அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ள செய்தி, ஏற்கெனவே தமிழக மக்களின் வயிற்றில் எரிந்து கொண்டிருக்கும் தீயில், எண்ணெய் வார்த்ததைப் போல் உள்ளது.

    ஏற்கனவே வாகனங்கள் வாங்கும்போது ஆயுட்கால வரி செலுத்தியுள்ள சூழ்நிலையில், ஏன் நாங்கள் டோல்கேட் வரி செலுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த டோல்கேட் வரியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தப்படும் நிலையில், இந்த தி.மு.க. அரசு மீண்டும் வாகனங்களுக்கான சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்த முடிவெடுத்திருப்பது தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஏற்கனவே இரண்டு முறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, பஸ்களில் மறைமுகக் கட்டண உயர்வு என்று அரசுக்கு வரும் வரி வருவாய்களை உயர்த்தி, வாக்களித்த தமிழக மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சியில் உயர்த்தப்படாத சாலை வரியை, தற்போது 5 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்திருப்பதைப் பார்க்கும்போது, தமிழக மக்களிடம் இருக்கும் கடைசி ரூபாயையும் பிடுங்கும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    எளிய மற்றும் நடுத்தர மக்கள் தினமும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் செல்வதற்கு வசதியாக, சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்; குடும்பத்துடன் செல்வதற்கு வசதியாக சிறிய ரக நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுக்கு தடை போடும் விதமாக, சாலை வரியை உயர்த்தி வாகனங்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகை செய்துள்ளது.

    தி.மு.க. அரசு ஏற்கனவே தனது தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்து 26 மாதங்கள் ஆனபின்னும் இதுவரை பெட்ரோல் விலையை தேர்தல் நேரத்தில் அறிவித்த படி குறைக்காத நிலையில், சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவினை கலைக்கும் விதமாக, சாலை வரியை உயர்த்த முடிவெடுத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் 5 சதவீதம் சாலை வரியை உயர்த்துவதற்கு முடிவெடுத்திருக்கும் தி.மு.க. அரசு, மக்கள் நலன் கருதி இதனை உடனடியாகக் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.
    • சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மிக அதிக தொகை வசூலிக்கப்படும் நிலையில், சாலை வரி ரத்து செய்யப்பட வேண்டுமே தவிர, உயர்த்தப்படக்கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்களுக்கான சாலை வரியை இப்போதுள்ள 8 சதவீதத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விலையுள்ள வாகனங்களுக்கு 10 சதவீதமாகவும், அதற்கு கூடுதலான விலை கொண்ட வாகனங்களுக்கு 12 சதவீதமாகவும் உயர்த்த தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது.

    இந்த வரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். இருசக்கர வாகனங்கள் தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மிக அதிக தொகை வசூலிக்கப்படும் நிலையில், சாலை வரி ரத்து செய்யப்பட வேண்டுமே தவிர, உயர்த்தப்படக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 2022-2023-ம் ஆண்டில் போக்குவரத்து துறையின் ஆண்டு வருவாய் ரூ.6,674.29 கோடியாக இருந்தது.
    • புதிய வரி உயர்வின் மூலம் மேலும் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சாலை வரியை உயர்த்த மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந்தேதி மாநிலத்தின் நிதிநிலை குறித்து அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    அப்போதே சாலை வரி விகிதங்களை உயர்த்த அதில் முன்மொழிந்திருந்தார். தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய வரி விகிதங்கள் தென் மாநிலங்களிலேயே மிகக்குறைவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு வரியை சீரமைக்க வேண்டும் என போக்குவரத்து துறை அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் தான் சாலை வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதன் மூலம் புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை 5 சதவீதம் உயர உள்ளது.

    மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய சாலை வரி கட்டணம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதத்திலும், கார்களுக்கான சாலை வரி கட்டணம் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதத்திலும் திருத்தம் செய்யப்பட்டது.

    இதன்படி கடந்த 15 ஆண்டுகளில் மொத்த வாகன செலவில் 8 சதவீதம் இருசக்கர வாகனங்களுக்கு சாலை வரியாக விதிக்கப்படுகிறது. புதிய அறிவிப்பு மூலம் ரூ.1 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 10 சதவீதம் வரியும், ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதே போல தற்போது ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாகன விலையில் 10 சதவீதம் சாலை வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

    புதிய திட்டத்தின் படி ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

    இதே போல ரூ.20 லட்சத்திற்கு மேல் விலை உள்ள கார்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.

    2022-2023-ம் ஆண்டில் போக்குவரத்து துறையின் ஆண்டு வருவாய் ரூ.6,674.29 கோடியாக இருந்தது. புதிய வரி உயர்வின் மூலம் மேலும் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஒரு கூட்டம் நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் சாலை வரியை உயர்த்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே புதிய வரி உயர்வு தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வர்த்தக வாகனங்கள் மற்றும் பிற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான வரிகளும், அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விலை உயர்ந்த வாகனங்களை வாங்கக்கூடியவர்களுக்கு அதிக வரி விதிக்கும் கொள்கையின் அடிப்படையில் சாலை வரி திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    புதிய வரி விதிப்பின் மூலம் 100 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலும், 125 சி.சி. திறன் கொண்ட பைக்குகள் ரூ.85 ஆயிரம் முதல் ரூ.95 ஆயிரம் வரையிலும் இருக்கும் எனவும், 150 சி.சி. மற்றும் அதற்கும் மேற்பட்ட என்ஜீன் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் விலை இப்போதைய விலையை விட ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலை உள்ள கார்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனை ஆகி வருகிறது. எனவே 2 முதல் 3 சதவீதம் வரை வரி அதிகரிக்கும் போது அதன்விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயரக்கூடும் என கார் ஷோரூம் டீலர்கள் தெரிவித்தனர்.

    2022-2023-ம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.12.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் ஆகும்.

    ×