என் மலர்
கடலூர்
- விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தப்பியோடிய தங்கதுரை என்பவரை விருத்தாசலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
மயிலாடுதுறையிலிருந்து சேலம் நோக்கி நேற்றிரவு 2 மணி அளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ஆலயமணி இயக்கி சென்றுள்ளார். விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் அருகே பேருந்து வந்த போது, அங்கு நடந்துச்சென்று கொண்டிருந்த 3 போதை ஆசாமிகள் பஸ்சினை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்தனர். இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் போதை ஆசாமிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் கண்ணாடி மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிச்சென்றனர். இதனால் பஸ்சின் முன்புற கண்ணாடி சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை மடக்கி பிடித்தனர். அதன்படி மணவாள நல்லூரை சேர்ந்த அன்புச்செல்வன் என்ற மூசா (வயது 20), சரவணன் என்ற அப்பு (20) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய தங்கதுரை என்பவரை விருத்தாசலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மூன்று மர்ம நபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர்.
- செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே வடலூர் பார்வதிபுரம் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வழுதலம்பட்டு செந்தாமரை வாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த மூன்று மர்ம நபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர். பின்னர் ஜோதி மணியை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர். இது குறித்து ஜோதிமணி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
- பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு சி. என். பாளையம் சேர்ந்த 20 வயது இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
- சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
கடலூர்:
திட்டக்குடி அருகே தச்சூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல்.அவரது மனைவி பெரியம்மாள் (வயது 75). இவர் நேற்று இரவு தனது காட்டுக் கொட்டையின் முன்பு படுத்திருந்தபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் மீது மோதி சென்ற இருசக்கரவாகனம் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பிரசன்னா சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
- 4 கிராம் தங்க காசு ரூ.7000 பணம் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு ேபானது.
கடலூர்:
சிதம்பரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 42) இவர் புவனகிரியில் கடை வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து 29-ந் தேதி மாமியார் வீட்டிலிருந்து சிதம்பரத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4 கிராம் தங்க காசு ரூ.7000 பணம் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு ேபானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசன்னா சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- விருத்தாசலத்தில் 400 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து, விருத்தாசலத்திற்கு 30 மூட்டைகளில், 400 கிலோ எடை கொண்ட, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, காரில் கடத்தி வந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குல்தீப் சிங்(24), நிர்மல் சிங்(22) ஆகிய இருவரையும் விருத்தாச்சலம் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
- வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
- அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே ரெட்டி ச்சாவடி போலீஸ் சரகம் சின்ன காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித்குமார் (வயது 30), டிரைவர். இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டி லிருந்து வெளியே சென்ற ரஞ்சித் குமார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெட்டிச்சாவடி எஸ்.ஆர்.வி. நகரில் உள்ள மரத்தில் ரஞ்சித் குமார் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்குமார் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஞ்சித் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள்.
- மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர்:
2023 புத்தாண்டு பாதுகாப்பு முன்னிட்டு கடலுார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில், கூடுதல் காவல் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், 2 உதவி போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டு, 33 இன்ஸ்பெக்டர்கள், 231 சப் இன்ஸ்பெக்டர் கள், சிறப்பு உதவியாளர்கள், மற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் மேற்கொண்டு பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மேலும் கூடுதலாக கடலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும்.
காவல்துறை வாகனங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணி மேற்கொள்வார்கள். முக்கியமான இடங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். தங்கும் இடங்களில் காவல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். கோவில்கள், தேவால யங்கள் போன்ற வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களான தேவனாம்ப ட்டினம் வெள்ளி கடற்கரை, பிச்சாவரம் சுற்றுலா மையம், சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டு அன்று இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மதுஅருந்திவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில் , மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர்.
- ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை.
கடலூர்:
கடலூர் அரசு மருத்துவமனை அருகே கடந்த பல ஆண்டுகளாக பயணியர் நிழற்குடை இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சென்றனர். இதன் காரணமாக இங்கு அமைக்கப்பட்டு இருந்த பயணியர் நிழற்குடையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில் , மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர். மேலும் சாலையில் பொதுமக்கள் நிற்காமல் இருந்ததால், இந்த பகுதியில் பாதிப்பும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சாலை ஓரத்தில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் நின்று தினந்தோறும் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.
மேலும் மழை மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்கடக்க நீண்ட நேரம் நின்று பஸ்ஸில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வெயில் மற்றும் மழையில் நிற்பதால் மீண்டும் மீண்டும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஏற்கனவே அமைத்திருந்த நிழற்குடையை எந்தவித காரணமும் இன்றி அகற்றியதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு அதிகாரிகளின் அலட்சியத்தின் உச்சமாக இதனை பார்க்க நேரிடுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டாண்டு காலமாக அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நாங்கள் மலை குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வந்தோம்.
- ஆனால் அங்குள்ள மக்கள் வீடு கட்ட அனுமதிக்கவில்லை.
கடலூர்:
நெய்வேலி மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரை சேர்ந்த மலை குறவன் பழங்குடி மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களது இலவச வீட்டு மனை பட்டா, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு ஆவணங்களை ஒப்படைப்பதாக அறிவித்தனர் பின்னர் அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மலை குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வந்தோம். மேலும் எங்கள் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளி வசதி இல்லாமல் 40 குடும்பம் தவித்து வந்தோம்.
இந்த நிலையில் சிதம்பரம் தாலுகா கூடு வெளிசாவடியில் வீட்டுமனை பட்டா அளித்தார்கள். இதைத் தொடர்ந்து அங்கு வாழ்வதற்கு சென்றோம். ஆனால் அங்குள்ள மக்கள் வீடு கட்ட அனுமதிக்கவில்லை. மேலும் ஊருக்குள் விடாமல் தாக்கினார்கள். ஆகையால் நாங்கள் வசித்து வந்த தாலுகாவில் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது
- இந்நிலையில் வீடு கட்டுமான பணிக்காக குமாரின் வீட்டருகே மண் கொட்டி வைக்கப்பட்டிருந்தது.
- சாலையில் மண்ணை ஏன் கொட்டி வைத்திருந்திருக்கிறீர்கள் என்று குமாரின் மனைவி தில்லையம்மாளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
பண்ருட்டியை அடுத்த சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவருக்கும் விளைநிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வீடு கட்டுமான பணிக்காக குமாரின் வீட்டருகே மண் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த வடிவேல், சாலையில் மண்ணை ஏன் கொட்டி வைத்திருந்திருக்கிறீர்கள் என்று குமாரின் மனைவி தில்லையம்மாளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த வடிவேல் மனைவி மீனா மற்றும் உறவினர்கள் வடிவேலுவுடன் சேர்ந்து தில்லையம்மாளை தாக்கினர். இதில் படுகாயமடைந்த தில்லையம்மாள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரில் வடிவேல், அவரது மனைவி மீனா மற்றும் 2 பேர் மீது முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- இதனால் அதிர்ச்சி அடைந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சா சிறுமி மற்றும் சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
- இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்கு பதிவு செய்து சிறுமி மற்றும் சிறுவனை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் வன்னியர் பாளையத்தில் தனியார் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தைகள் நலக்குழு மூலமாக கடலூர் குப்பன்குளம் சேர்ந்த 12 வயது சிறுமி, 7 வயது சிறுவன் ஆகியோரை தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். நேற்று இரவு புதிதாக விடப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமி ஆகியோரை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சா சிறுமி மற்றும் சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் ேபாலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்கு பதிவு செய்து சிறுமி மற்றும் சிறுவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.






