என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும்
    • போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை,

    கோவையில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்டத் தலைவர் வீரபத்திரன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் சிறப்பு பென்சன் ரூ. 6750 வழங்கிட வேண்டும்.

    அரசுத் துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட58 பெண்கள் உட்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனால் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    • இளம்பெண்ணுக்கு சொந்தமாக அர்த்தனாரி பாளையத்தில் 5 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது.
    • தி.மு.க. பிரமுகர் எனது சொத்தை அவர்களுடைய பெயருக்கு எழுதி கொடுக்கும்படி தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுக்கிறார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் 41 வயது இளம்பெண். இவர் இன்று காலை கோவை மாவட்ட சூப்பிரண்டு அலுவல கத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். எனது கணவர் பிரிந்து சென்று விட்டார். எனக்கு சொந்தமாக அர்த்தனாரி பாளையத்தில் 5 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இதில் நான் விவசாயம் செய்தும், ஆடு, மாடுகளை வளர்த்தும் தொழில் செய்து வருகிறேன். மேலும் தையல் தொழிலும் செய்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனக்கும், எனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் எனது தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து மின்சார வயரை அறுத்து தண்ணீர் குழாய்களை உடைத்து நான் விவசாயம் செய்ய முடியாமல் செய்தனர்.

    இதுசம்பந்தமாக அவர்களைக் கேட்டபோது தி.மு.க. பிரமுகர் ஒருவரை சந்தித்து பஞ்சாயத்து பேச வருமாறு அழைத்தனர். நான் அவரிடம் சென்ற போது அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து தப்பி வெளியே வந்தேன்.

    பின்னர் இதுகுறித்து ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

    இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி நான் எனது தோட்டத்தில் தக்காளி ஏற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த எனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனது மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயன்றனர். மேலும் அவர்கள் தி.மு.க. பிரமுகர் அழைக்கும் இடத்திற்கு நீ வரவேண்டும், இல்லையென்றால் உன்னையும், உனது குழந்தைகளையும் கார் ஏற்றி கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர்.

    மேலும் தி.மு.க. பிரமுகர் எனது சொத்தை அவர்களுடைய பெயருக்கு எழுதி கொடுக்கும்படி தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே தி.மு.க. பிரமுகர் உட்பட 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவர் கண்முன்பு காயத்துடன் உயிருக்கு போராடிய மனைவி பலியானார்.
    • விபத்தை ஏற்படுத்தியதாக சின்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பீளமேடு

    கோவை கணபதி பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது72). இவரது மனைவி ராஜாமணி(65).

    கணவன், மனைவி 2 பேரும் இன்று காலை சிங்காநல்லூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி தேவராஜ் கணபதியில் உள்ள வீட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூருக்கு புறப்பட்டார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் அவினாசி ரோட்டில் டைடல் பார்க் அருகே வந்து கொண்டிருந்தது. தேவராஜ் தனது வாகனத்தை வலதுபுறமாக திருப்பி கொண்டிருந்தார்.

    அந்த சமயம் பீளமேட்டில் இருந்து வந்த வாடகை கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

    மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த தேவராஜூம், அவரது மனைவி ராஜாமணியும் தூக்கி சாலையில் வீசப்பட்டனர்.

    2 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் ஓடி வந்து, காயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். படுகாயம் அடைந்த தேவராஜ் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும், கிழக்கு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து இறந்த ராஜாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சின்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

    • மனோன்மணி வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டிற்கு சென்றார்.
    • வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளை போயிருந்தது.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள ரெட்டியார் மடத்தை சேர்ந்தவர் கனகராஜ்.

    இவரது மனைவி மனோன்மணி (வயது 45). பேக்கரி தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டுக்கு சென்றார்.

    அப்போது மனோன்மணி வீட்டில் ஓட்டை பிரிந்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 1 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய மனோன்மணி பணம் மற்றும் நகை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    • வால்பாறை பகுதியில் அதிகளவிலான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
    • வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவரை, வால்பாறை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் பரமசிவம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வால்பாறை பகுதியில் அதிகளவிலான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அன்றாடம் உழைத்தே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இவர்களுக்கு ஏதாவது உடல் நலம் பாதிப்பு மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் வால்பாறை அரசு ஆஸ்பத்திரி மற்றும், இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே சென்று வருகிறார்கள்.

    ஆனால் அங்கு போதிய மருத்துவர்களும், ஊழியர்களும் பணியில் இருப்பது இல்லை. குறைந்த அளவு டாக்டர்களும், ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். இதுதவிர ஆஸ்பத்திரிகளில் போதிய மருத்துவ உபகரணங்களும் கிடையாது.

    இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஏதாவது மருத்துவ தேவை என்றாலும் 40 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து பொள்ளாச்சி, கோவை போன்ற பகுதிகளுக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    அப்படி செல்லும் சில சமயங்களில் அவர்களுக்கு நோயின் பாதிப்பு தன்மை கூடுவதோடு, சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் இங்கு வசித்து வரக்கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் மருத்துவ துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் வால்பாறை அதற்கு எதிர்மறாகவே உள்ளது. சில நேரங்களில் மரணமடைந்தாலும் உடல் கூராய்வு செய்வதற்கு கூட 2 நாட்களுக்கும் மேல் ஆகிறது.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி, வால்பாறையில் உள்ள அனைத்து மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்களை நியமிப்பதுடன், மருத்துவ உபகரணங்களும் வாங்கி தர வேண்டும்.

    மேலும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கூறுவதற்காகவும், சிகிச்சை அளிப்பதற்காக பெண் மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மளிகை கடையில் புகையிலை பொருட்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • உணவு பாதுகாப்பு அதிகாரி காளிமுத்து தலைமையில் சோதனை நடந்தது.

    பொள்ளாச்சி,

    தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூரில் உள்ள சில மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி காளிமுத்து தலைமையில் அதிகாரிகள் மற்றம் போலீசார் அந்த பகுதி களில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மளிகை கடை நடத்தி வரும் வின்சென் என்பவரது கடையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் ரியாஸ் என்பவரது மளிகை கடையில் இருந்தும் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொரு ட்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • ரூ.13 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் 70 பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைைம தாங்கினார். துணைத் தலைவர் தாமா செந்தில்குமார் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். இதில் 21 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வால்பாறை பகுதியில் நீண்ட நாள் கிடப்பில் இருந்த 12 மற்றும் 13-வது வார்டுக்கு உட்பட்ட ஊசிமலை பகுதி மற்றும் வெள்ளமலை பகுதியில் 13 கிலோமீட்டர் தொலைவு வரை ரூ.13 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வால்பாறை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி இருந்ததை அடுத்து அப்பகுதியில் மக்கள் யாரும் செல்லாதவாறு கம்பி வேலி அமைத்து, அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிப்பது, வால்பாறையில் 20 இடங்களில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ளும் விதமாக மொத்தம் 70 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள், வால்பாறை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் துவங்கியுள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்.

    பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 17-வது வார்டு முடிஷ் பகுதியில் புதிய பஸ் நிறுத்தம் கட்டி தர வேண்டும் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு குறைந்த கட்டணத்தில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    • மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் இந்த விபரீத முடிவை எடுத்தார்.
    • பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள மத்திப்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற கந்தசாமி மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். இதனை பார்த்த அவரது மனைவி பூஜை நாள் அதுவுமாக ஏன் குடித்து விட்டு வருகிறீர்கள் என கண்டித்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கந்தசாமி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    மது குடித்ததை மனைவி கண்டித்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.

    பின்னர் வீட்டிற்கு சென்று வாந்தி எடுத்தார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக அவர் தனது கணவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கந்தசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்க உள்ளது.
    • கனரக லாரிகள் மீதான 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்

    கோவை,

    கோவை மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி லாரிகள் இயங்காது என்று கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கனரக லாரிகள் மீதான 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

    அரசுக்கு சொந்தமான மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும், காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித் துள்ளது.

    அதன்படி கோவையில் நவம்பர் 9-ந் தேதி காலை 6 மணி முதல மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்ம் நடத்தப்படும் என்று கோவை லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்கள், சிறிய வாகன உரிமையாளர்கள், இலகுரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    எனவே தொழிற்சாலைகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் முருகேசன், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேண்டாத ஒரு விவாதத்தை எடுத்துக்கொண்டு அதில் அரசியல் லாபம் காண்பது தான் தி.மு.க.வின் அணுகுமுறையாக உள்ளது.
    • தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது.

    கோவை:

    ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தப்படுவதும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரவணைப்பது போல தமிழக அரசு செயல்படுவதும் கண்டனத்துக்குரியது.

    குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை தண்டனையில் இருந்து தப்ப வைப்பதும், மன்னிப்புத்தருவதும் அதற்கு அண்ணாவின் பெயரை உபயோகப்படுத்துவதும் சரியான அணுகுமுறை அல்ல.

    மக்களுக்கு நன்மை செய்வதை காட்டிலும் வேண்டாத ஒரு விவாதத்தை எடுத்துக்கொண்டு அதில் அரசியல் லாபம் காண்பது தான் தி.மு.க.வின் அணுகுமுறையாக உள்ளது. தேவையற்றதை ஒதுக்கிவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் தி.மு.க. அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது. இதில் காவல்துறையினர் கவனத்தை செலுத்தி கஞ்சாவை தமிழகத்தில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும். போதையில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும்போது தான் தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி விரைவாக பயணிக்கும். பிரதமர் நரேந்திரமோடியை தமிழர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சாதிவாரியான கணக்கெடுப்பு தேவையா, இல்லையா? என்பதை காலமும், சமூகமும் தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தி.மு.க. அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது.
    • தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை தர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    பெட்ரோல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் மேலும் 4 பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தி.மு.க. அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    இந்தச் சூழலில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது. அவர்களை விடுவித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் லாபக் கணக்கு பார்க்கக் கூடாது.

    கவர்னர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீச துணிகிறார் என்றால், அது ஒரு தனி நபரின் முயற்சியாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு காவல்துறை தி.மு.க.வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
    • 3 பேர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை:

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

    இந்த போரை நிறுத்த கோரியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த 24-ந் தேதி கோவை உக்கடம் பகுதியில் அனைத்து ஜமாத், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பு மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்தில் அனைத்து ஜமாத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

    போராட்டம் நடைபெற்ற இடத்தையொட்டி புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தின் போது சிலர், மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியை கட்டி இருந்தனர்.

    இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவியது.

    இதையடுத்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்ட செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாகீர், ரபீக் ஆகிய 3 பேர் பாலஸ்தீன கொடியை மேம்பாலத்தின் மீது கட்டியது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் சபீர் அலி, அபுதாகீர், ரபீக் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    ×