என் மலர்
கோயம்புத்தூர்
- சிறப்பு முகாம்கள் வருகிற 4 மற்றும் 5-ந் தேதியும், 18 மற்றும் 19-ந் தேதியும் நடைபெறும்.
- வாக்குச்சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடி நிலைமுகவர்களும் தனிகவனம் செலுத்த வேண்டும்.
கோவை,
வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியானவர்களை சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் வருகிற 4 மற்றும் 5-ந் தேதியும், 18 மற்றும் 19-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த முகாம்களில் கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடி நிலைமுகவர்களும் தனிகவனம் செலுத்த வேண்டும்.
18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போது உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வதற்கும், தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில், வழங்கி இந்த பணியை சிறப்பாக செய்து முடித்து தகவல்களை கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரவிச்சந்திரன் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி. கொட்டம்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 53). பைனான்சியர். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக ரவிச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினர் ஒருவர் ஒரே நாளில் திருப்பி தருவதாக கூறி ரூ. 4 லட்சம் கடன் கேட்டார். இதனை உண்மை என நம்பிய ரவிச்சந்திரன் தெரிந்த நபரிடம் இருந்து ரூ.4 லட்சம் பணத்தை வாங்கி உறவினருக்கு கொடுத்தார். ஆனால் அவர் கூறிய படி கடனை திருப்பி கொடுக்கவில்லை.
இதனையடுத்து ரவிச்சந்திரன் வேறு ஒருவரிடம் இருந்த பணத்தை வாங்கி கடனை அடைத்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை வாங்கிய உறவினர் தலைமறைவானார். அவரை ரவிச்சந்திரன் தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக ரவிச்சந்திரன் வாங்கிய கடன் ரூ.7 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரவிச்சந்திரன் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த போக்குவரத்து மாற்றம் இன்று காலை அமலுக்கு வந்தது.
- வாகனங்கள் போலீசார் அறிவித்துள்ள மாற்றுப்பாதையில் சென்றன.
கோவை,
சிங்காநல்லூர்- வெள்ளலூர் ரோடு நொய்யல் ஆற்று மேம்பாலத்தின் அணுகுசாலை பணிகள் நடக்கிறது. இதை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் மோட்டார்சைக்கிள் மற்றும் இலகுரக வாகனங்கள், சிங்காநல்லூரில் இருந்து திருச்சி ரோட்டில், சாந்தி கியர்ஸ் சந்திப்பு, ஒண்டிப்புதூர் சந்திப்பு வழியாக, நெசவாளர் காலனி, பட்டணம், நொய்யல் பாலம், எல் அண்ட் டி பைபாஸ் சென்று, வெள்ளலூர் செல்லலாம்.
ஒண்டிப்புதூர் மேம்பாலம், மிராஜ் தியேட்டர் அருகில் 'யூ' டர்ன் செய்து பாலத்தின் சர்வீஸ் ரோடு, பட்டணம் நொய்யல் பாலத்தின் வழியாக, எல் அண்ட் டி பைபாஸ், பாலக்காடு ரோட்டில் வலப்புறம் திரும்பி வெள்ளலூர் செல்லலாம்.
சாந்தி கியர்ஸ், ஒண்டிப்புதூர் சந்திப்பு, ஒண்டிப்புதூர் மேம்பாலம், காமாட்சிபுரம் சோதனை சாவடி, தனியார் பள்ளி அருகே 'யூ' டர்ன் செய்து கோவை ரோட்டை அடைந்து, எல் அண்ட் டி பைபாஸ், பாலக்காடு ரோடு, கஞ்சிக்கோணம்பாளையம் வழியாகவும் வெள்ளலூர் செல்லலாம்.
கனரக வாகனங்கள் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி ரோடு வழியாக சாந்திகியர்ஸ், ஒண்டிப்புதூர் சந்திப்பு, ஒண்டிப்புதூர் மேம்பாலம், காமாட்சிப்புரம் சோதனை சாவடி, இருகூர் பிரிவு, திருச்சி ரோடு, எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணிபுதூர் ரோட்டிலிருந்து வலப்புறம் திரும்பி சுங்கச்சாவடி வந்து, கஞ்சிக்கோணம்பாளையம் வழியாக வெள்ளலூர் செல்லலாம்.
வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் இலகுரக வாகனங்கள், வெள்ளலூர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கி லிருந்து வலப்புறம் திரும்பி பட்டணம் ரோடு வழியாக எல் அண்ட் டி புறவழிச் சாலையை அடைந்து நெசவாளர் காலனி நொய்யல் பாலத்தில் இடப்பக்கமாக ஒண்டிப்புதூர் சந்திப்பு வழியாக செல்லலாம்.
வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் கனரக வாகனங்கள், வெள்ளலூர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிலிருந்து வலப்புறம் திரும்பி எல் அண்ட் டி புறவழிச்சாலையை அடைந்து நெசவாளர் காலனி நொய்யல் பாலத்தில், இடப்பக்கமாக, ஒண்டிப்புதூர் சந்திப்பு வழியாக செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று காலை அமலுக்கு வந்தது. வாகனங்கள் போலீசார் அறிவித்துள்ள மாற்றுப்பாதையில் சென்றன. போலீசார் ஏராளமானோர் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.
- மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும்.
- 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வால்பாறை,
கோவை மண்டல தி.மு.க விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுதாகரன் வரவேற்றார்.
மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். கொப்பரை கொள்முதல் நிதியை 3 மடங்காக உயர்த்தி தர வேண்டும்.
பசுமை வாரியத்தின் 10.11.2021 தேதியிட்ட நடவடிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வை திரும்ப பெற நடந்து வரும் கையெழுத்து இயக்கத்திற்கு விவசாய அணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தர்மலிங்கம், குறிஞ்சி சிவகுமார், அல்லி பட்டி மணி, மதுரை கணேஷ், அப்துல் ஹமீது, டேம் வெங்கடேஷ், கோழிக்கடை கணேஷ், ஜே.பாஸ்கர், சுரேஷ்குமார் மற்றும் விவசாய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- மேஜை, நாற்காலி போன்றவை செய்வதற்கு மர சாமான்கள் வாங்க வேண்டும் என மோசடி.
- இதுகுறித்து ராஜமாணிக்கம் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது42). ரியல் எஸ்டேட் அதிபர்.
இவரது வீட்டின் அருகே சசிகுமார் என்பவர் தனது மனைவி நிர்மலாவுடன் வசித்து வருகிறார். அருகருகே வசிப்பதால், 2 குடும்பத்தினரும் நெருங்கி பழகி வந்தனர்.
இந்த நிலையில் சசிகுமாரும், அவரது மனைவியும் கடந்த ஆண்டு இறுதியில், ராஜமாணிக்கத்தை சந்தித்து பேசினர்.அப்போது தங்களுக்கு மேஜை, நாற்காலி போன்றவை செய்வதற்கு மர சாமான்கள் வாங்க வேண்டும். அதற்கு நீங்கள் பணம் தந்து உதவுமாறு கேட்டுள்ளனர்.
இவரும் அவர்களை நம்பி ரூ.8 லட்சம் பணத்தை கொடுத்தார். இதேபோன்று மற்றொருமுறை சசிகுமாரின் மனைவியும் ரூ.3 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். தொடர்ந்து இதேபோன்று பல தவணைகளாக மொத்தம் ரூ.16 லட்சம் பணத்தை கணவன், மனைவி 2 பேரும் சேர்ந்து பெற்றுள்னர். பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறிய அவர்கள், வெகுநாட்களை கடந்தும் பணத்தை கொடுக்க வில்லை. மேலும் நீண்ட நாட்களாக அவர்களை அந்த பகுதியிலும் பார்க்க முடியவில்லை.
இதையடுத்து ராஜமாணிக்கம் அருகே உள்ளவர்களிடம் விசாரித்தார். அப்போது தான் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கணவன், மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
- போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேககளை பதிவு செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாப்பாகவுண்டர் காலனியை சேர்ந்தவர் மொய்தீன்(வயது 44). ரியல் எஸ்டேட் அதிபர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பூலுவபாளையத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த மோதிரம், செயின், கம்மல், வளையல், கை செயின் உள்பட 14 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
வீட்டிற்கு திரும்பிய மொய்தீன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேககளை பதிவு செய்தனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது மொய்தீன் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வருகின்றனர்.போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள வீட்டிலேயே பணம் மற்றும் நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புலிக்குட்டியை வனத்தில் விடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வால்பாறையில் நடந்தது.
- புலியின் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்றவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை முடிஸ் எஸ்டேட் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.
வனத்துறையினர் விரைந்து சென்று அந்த புலிக்குட்டியை மீட்டு, சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து அதை, வனத்துறையினர், மானாம்பள்ளி வனசரகத்திற்குட்பட்ட மந்திரி மட்டம் என்ற பகுதிக்கு கொண்டு சென்று அதனை பராமரித்து வந்தனர்.
மேலும் புலிக்குட்டிக்கு வேட்டையாடும் திறனை கொடுப்பதற்காக, அதற்கு பயிற்சி கொடுக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதற்காக மந்திரிமட்டம் என்ற இடத்தில் 10 ஆயிரம் சதுரடியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புலிக்குட்டியை வனத்தில் விடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வால்பாறையில் நடந்தது. கூட்டத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
ஆனைமலை புலிகள் காப்பக கள துணை இயக்குனர் துணை இயக்குனர் பார்கவதேசா, ஏ.சி.எப் செல்வம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதி கணேஷ் ரகுநாதன், வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புலியின் உடல் நலம் மற்றும் அவற்றின் தற்போதைய மனம் சார்ந்த நிலை குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் புலியின் நடவடிக்கைகள், அதன் வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல், புலியை வனப்பகுதியில் விடப்பட்ட பின்னர் தொடர்ந்து தனி குழு அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்றவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
- இளம்பெண் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
- கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். அழகு கலை நிபுணர். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இளம்பெண் குன்னூர் கம்பி சோலையில் வசித்த போது அவருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த பெயிண்டர் கருணாகரன் (வயது 40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் கருணாகரனுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.
இளம்பெண் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதனால் இங்கேயே தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு கருணாகரன் குடிபோதையில் வந்தார். அவர் இளம்பெண்ணிடம் ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய் என கூறி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் முகத்தில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கருணாகரன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலியை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கருணாகரனை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்கள் ஆணைய தலைவரிடம் தெரிவித்தனர். மேலும் இத்துறை சார்ந்து பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திருமண மண்டபத்தின் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் நின்றிருந்தது.
- 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை
கோவை செல்வபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தின் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் நின்றிருந்தது.
போலீசார் அவர்களின் அருகே சென்ற போது, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டினர். போலீசார் துரிதமாக செயல்பட்டு 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் செல்வபுரம், கல்லாமேட்டை சேர்ந்த அலாவுதீன் (25), கரும்புகடையை சேர்ந்த முகமது யாசின் (22), செல்வபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் கான்(25), அப்துல் சபீர் (23), அப்பாஸ்(24) என்பதும், செல்வபுரம் சாவித்திரி நகரில் பூட்டியிருக்கும் வீட்டை நோட்டம் விட்டு திருட ரகசிய திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சந்திரன் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
- திருமணத்தின் போது வழங்கிய 40 பவுன் தங்க நகையை திரும்ப தர வேண்டும் என சரஸ்வதி கேட்டார்.
கோவை
கோவை இருகூர் அருகே உள்ள கே.ஜி.போஸ் நகரை சேர்ந்தவர் சந்திரன்(37). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், சரஸ்வதி(33) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே சந்திரன் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் சரஸ்வதி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சரஸ்வதி தனது உறவினர்களுடன் கணவர் வீட்டிற்கு சென்று, தனது பொருட்கள் மற்றும் திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கப்பட்ட 40 பவுன் தங்க நகை மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவற்றை திரும்ப தர வேண்டும் என கேட்டார்.
அப்போது வீட்டில் இருந்த சந்திரன் மற்றும் அவரது தாயார் அம்சவேணி ஆகியோர் சரஸ்வதியை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சந்திரனை கைது செய்தனர்.
இதேபோல், சந்திரனின் தாய் அம்சவேணி தன்னை சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாக்கியதாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஒவ்வொரு பூத்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டும்.
- சொந்த வேலைகளை முடித்துவிட்டு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கட்சி பணியாற்றினால் போதும்.
கோவை,
கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்துக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி னார். கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் முகிலன் முன்னிலை வகி த்தார். இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு பூத்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டும். பாசறையில் கண்டிப்பாக 25 பேரை 18 வயது நிறைந்த புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் அதிக புதிய இளம் உறுப்பினர்களை கட்சிக்கு கொண்டு வருவார்கள். கட்சியில் உள்ள மூத்த வர்கள், இளம் உறுப்பின ர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பூத் கமிட்டி தொடர்பாக சொந்த வேலைகளை முடித்துவிட்டு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கட்சி பணியாற்றினால் போதும். ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாக பணியாற்ற லாம்.
இப்போது உள்ள சூழ்நிலையில் தி.மு.க.வை மக்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்-அமை ச்சராக வரவேண்டும் என அனைவரும் நினைக்கி றார்கள். இந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். விசுவாசமாக பணியாற்ற வேண்டும். சிறு, சிறு மனஸ்தாபங்கள் இருந்தால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் கண்டிப்பாக 59 பேர் கொண்ட பொறுப்பாளர்க ளை நியமிக்க வேண்டும். அந்த வகையில் கோவை வடக்கு மாவட்டத்தில் 1067 பூத் கமிட்டிகள் உள்ளன. ஒரு பூத் கமிட்டிக்கு 59 பேர் வீதம் 62 ஆயிரத்து 950 வேரை நியமிக்கலாம். அப்படி நியமித்து பணியா ற்றும் போது நாம் எளிதாக வெற்றியடையலாம்.
தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. கவர்னர் மாளிகை யிலேயே பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீது முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு அக்கறை இல்லை. தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு துணி ச்சலான முடிவு எடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என துணிச்சலுடன் அறிவித்தார் அதனை தாங்க முடியாமல் மு.க. ஸ்டாலின் மறைமுக கூட்டணி என புலம்பி வருகிறார்.
காவிரி பிரச்சினையில் பாஜக கூட்டணி இருந்த போது 37 அ.தி.முக. எம்.பி.க்கள் 23 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கி போராட்டம் நடத்தி னார்கள். ஆனால் இப்போது தி.மு.க.வுக்கு 38 எம்.பி.க்கள் இருந்தும் அவர்கள் நாற்காலியை தேய்த்துக் கொண்டிரு க்கிறார்கள். இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ அமை ப்பை சேர்ந்தவர்கள் எட ப்பாடி பழனிசாமி சந்தித்து சரியான முடிவை எடுத்து உள்ளீர்கள் என பாராட்டி வருகிறார்கள்.
தற்போது தமிழகத்தில் துணிச்சலாக முடிவு எடுக்கக் கூடிய தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். எனவே அ.தி.மு.க.வை தேடித்தான் கூட்டணி வைப்பவர்கள் வருவார்கள். எனவே நாம் மக்களை சந்தித்து கட்சி பணியாற்றி அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் தாமோதரன், ஏ.கே. செல்வராஜ், சூலூர் கந்தசாமி, அவைத்தலைவர் வெங்கடாசலம் உள்பட கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து புறநகர் தெற்கு மாவட்ட பொது கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.






