என் மலர்
கோயம்புத்தூர்
- மர்மநபர்கள் திருடி வந்து வைத்து சென்றனரா? போலீஸ் விசாரணை
- கண்காணிப்பு காமிராக்களையும் ைகப்பற்றி ஆய்வு
வடவள்ளி,
கோவை மருதமலை சாலையில் முல்லை நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அவசர மருத்துவ தேவைக்காக அங்கு ஒரு ஆம்புலன்சு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஆம்புலன்சின் டிரைவர் முருகன் என்பவர் நேற்று மதியம் ஆம்புலன்சை சுத்தம் செய்தார். பின்பக்கம் சுத்தம் செய்வதற்காக ஆம்புலன்சு கதவை திறந்தார்.
அப்போது உள்ளே ஒரு கைப்பை இருந்தது. அதை எடுத்து அவர் பார்த்தார். அதில் செயின், மோதிரம், வளையல், ஆரம் என தங்க நகைகள் இருந்தன.
இதனால் அதிர்ச்சியான அவர் உடனே பையை எடுத்து கொண்டு, வட வள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு போலீசாரிடம் ஆம்புலன் சில் இந்த பை கிடந்ததாகவும், இதில் நகைகள் உள்ளது. ஆனால் யாருடையது? ஆம்புலன்சில் எப்படி வந்தது என தெரியவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அது ஒரிஜினல் நகையைா? அல்லது போலி நகையா? என ஆய்வு செய்தனர். அப்போது அது ஒரிஜினல் நகை தான் என்பது உறுதியானது. மொத்தம் 19 பவுன் நகை இருந்தது.
போலீசார் தொடர்ந்து அந்த நகை யாருடையது? என்பதை கண்டறிய அந்த பையில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா என தேடி பார்த்தனர்.
அப்போது அதில் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதை எடுத்து பார்த்த போது, அதில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு கேக் ஷாப்பில் கேக் வாங்கியதற்கான சீட்டு என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டு, அது யாருடையது? எப்படி ஆம்புலன்சில் வந்தது. யாராவது திருடி வந்து விட்டு, பயத்தில் ஆம்புலன்சில் விட்டு சென்றனரா? அல்லது ஆம்புலன்சில் வந்த யாராவது மறந்து விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்கின்றனர். யாராவது ஆம்புலன்சில் வந்து நகைைய வைத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறதா? என்பதை பார்த்து ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். மேலும் துண்டு சீட்டில் இருந்த கேக் கடைக்கும் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
- வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராக வந்து விடுமோ என சில நாட்களாகவே ராஜூ பயத்தில் இருந்து வந்தார்.
- ராஜூ இறந்த தகவலை அடுத்து நேற்று வழங்கப்பட இருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை போத்தனூர் செட்டி பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ(43). பிளம்பர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். தொடர்ந்து அவர் தான் முன்பு குடியிருந்த பகுதிக்கு செல்லாமல், போத்தனூரிலேயே வீடு எடுத்து தங்கி தனியாக வசித்து வந்தார்.
இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்த போதெல்லாம் ராஜூ கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்து வருகிற 27-ந் தேதி (நேற்று) தீர்ப்பு அளிக்கப்படுவதாக கோர்ட்டு அறிவித்து இருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராக வந்து விடுமோ என சில நாட்களாகவே ராஜூ பயத்தில் இருந்து வந்தார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கு தனக்கு எதிராக வந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்த ராஜூ, வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து கரைத்து குடித்தார்.
இதற்கிடையே அவரது சகோதரர் ரஞ்சித் என்பவர், ராஜூவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது ராஜூ வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியான அவர், ராஜூவை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜூ வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போத்தனூர் போலீசார் விரைந்து வந்து ராஜூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜூ இறந்த தகவலை அடுத்து நேற்று வழங்கப்பட இருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வித்யா கவுரிக்கு, தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
- பைக்குள் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் வித்யாகவுரி (வயது26). இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து வித்யாகவுரியை அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் வித்யா கவுரி தனது தந்தை வீட்டுக்கு வந்து, அவர்களுடன் ஒன்றாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், வித்யா கவுரிக்கு, தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். மேலும் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசம் அனுபவித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
இதன் காரணமாக வித்யா கவுரி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதாலும், இது வெளியில் தெரிந்தால் அவமானம் ஆகி விடும் என்பதால் குழந்தையை வளர்க்காமல், குழந்தையை கொன்று விட வித்யா கவுரி முடிவு செய்தார்.
இதுகுறித்து தனது தந்தை முத்துசாமி(வயது62), தாய் புவனேஸ்வரி (49) ஆகியோரிடமும் தெரிவித்தார். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவத்தன்று பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், குழந்தையை ஒரு பிளாஸ்டிக் சாக்கு பையில் உயிருடன் வைத்து கட்டினர்.
பின்னர் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பின்னர் 3 பேரும் சாக்குபையை தூக்கி கொண்டு வெளியில் வந்தனர். ஆட்கள் இருக்கிறார்களா என்பதை பார்த்து விட்டு, நேராக அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றின் அருகே சென்று, குழந்தையை தூக்கி கிணற்றுக்குள் வீசி விட்டு சென்றனர்.
இதில் குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது. பின்னர் எதுவும் நடக்காதது போல 3 பேரும் அமைதியாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வரவே அப்பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து, நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றை பார்வையிட்டனர். அப்போது கிணற்றுக்குள் ஒரு சாக்குப்பை இருந்தது.
உடனடியாக போலீசார் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, அங்கிருந்த சாக்குப்பையை திறந்து பார்த்தனர்.
அப்போது பைக்குள் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தது யார் என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வித்யா கவுரி என்பவர் தான் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வித்யாகவுரியை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை முத்துசாமி, தாய் புவனேஸ்வரியையும் கைது செய்தனர்.
பிறந்த 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- காரில் செல்லும் போது, விமல் யார் நீங்கள்? எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என கேட்டார்.
- கும்பலிடம் இருந்து தப்பி வந்த விமல் நேராக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.
கோவை:
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் ஸ்ரீ குமரன் நகரை சேர்ந்தவர் விமல்(வயது36). தொழில் அதிபர்.
இவரது வீட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த சரவணன் (45) என்பவர் குடியிருந்தார். அப்போது இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி விமல் தனது காரில் உஞ்சப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து 2 கார்கள் வேகமாக வந்தன. தொடர்ந்து விமலின் காரை முந்தி வந்த 2 கார்களும், விமலின் காரை வழிமறித்து நின்றது.
இதனால் விமலும் தனது காரை நிறுத்தி விட்டார். அப்போது எதிரே நின்ற 2 கார்களில் இருந்து 5 பேர் கும்பல் திபுதிபுவென இறங்கினர். இறங்கிய வேகத்தில், விமலின் காரை நோக்கி அந்த கும்பல் சென்றது.
பின்னர், அவர்கள், விமலை தங்களுடன் வா, உன்னிடம் பேச வேண்டும் என அழைத்தனர். அவர் வரமறுக்கவே, வலுக்கட்டாயமாக விமலை மிரட்டி, அவரது காரிலேயே ஏற்றி கடத்தி சென்றனர்.
காரில் செல்லும் போது, விமல் யார் நீங்கள்? எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் சரவணன் தான் உன்னை கடத்த சொன்னார். நீ அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடு என கூறி மிரட்டினர்.
பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டியதுடன், சரமாரியாக தாக்கினர். இதனால் பயந்து போன விமல் தனது நண்பர்கள் மற்றும் மனைவியிடம் பேசி, ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை வாங்கி சரவணனின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
அதனை தொடர்ந்து, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், விமலிடம் ஒரு வெற்று பத்திரத்தை காண்பித்து, கையெழுத்து வாங்கி கொண்டனர். பின்னர் காரை அவினாசி அடுத்த விஜயமங்கலம் பகுதியில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.
கும்பலிடம் இருந்து தப்பி வந்த விமல் நேராக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சரவணன் தான் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழில் அதிபர் விமலை ஆட்கள் வைத்து கடத்தி தாக்கியதுடன், பணத்தை பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பலா விவசாயத்துல வெளியில இருந்து வேலை ஆட்கள் தேவையில்லை.
- எல்லா விவசாயிகளும் பலா மரம் வளர்க்கலாம்.
பெரும்பாலான விவசாயிகள் கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளில் சிக்கி அதில் இருந்து மீள முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர். இந்த சூழலில் வெறும் 7 ஏக்கர் பலா தோட்டத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை கொண்டு வீடு, கார், நிலம் என செழிப்பான வாழ்வை வாழும் ஒரு விவசாயி குறித்து கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த கருணாகரன் தான் அந்த வெற்றி விவசாயி. பலா பழங்கள் கொத்து கொத்தாக காயத்து இருந்த அவருடைய தோட்டத்திற்கே நேரில் சென்று அவரை சந்தித்தோம். "1988-ல இந்த தோட்டத்துல பலா கன்னு வச்சேன். மொத்தம் 7 ஏக்கர்ல 700 மரம் வச்சுருக்கேன். 4 வருசத்துல இருந்தே வருமானம் வர ஆரம்பிச்சுருச்சு. 1998-க்கு அப்பறம் ஒரு ஏக்கர்ல ஒரு லட்சம்னு 7 ஏக்கருக்கு 7 லட்சம் வருமானம் பார்க்க ஆரம்பிச்சேன்.
பலாவுக்கு பதிலா கம்பு, கேள்வரகு, வேர்கடலை மாதிரி மற்ற பயிர்கள வச்சா இவ்வளவு வருமானம் வராது. 10 ரூபாய் செலவு பண்ணா 5 ரூபாய் தான் வரும். சுத்தி கம்பேனிங்க வந்துட்டனால எல்லாம் அங்க வேலைக்கு போயிட்றாங்க. விவசாய வேலைக்கு ஆளுங்க கிடைக்குறது ரொம்ப சிரமம்.
ஆனா, பலா விவசாயத்துல வெளியில இருந்து வேலை ஆட்கள் தேவையில்லை. நான் ஒரே ஆளே 7 ஏக்கரையும் பாத்துக்கிறேன். காய் வெட்றதுக்கு மட்டும் ஒரு ஆள் இருந்தா போதும்." என்றார்.
தண்ணீர் பயன்பாடு குறித்து கேட்ட போது, "இங்க தென் மேற்கு பருவ மழை ஒரு மூணு மாசமும், வட கிழக்கு பருவ மழை ஒரு மூணு மாசமும் பெய்யும். அதுனால அந்த மாசத்துல தண்ணீ பாய்ச்ச வேண்டிய தேவை இல்ல. மாசி, பங்குனி, சித்திரையில மட்டும் இரண்டு இல்ல மூண்ணு முறை தண்ணீ பாய்ச்சுவேன். பொதுவா பலா மரத்துக்கு அதிகமா தண்ணீயும் தேவை இல்ல.
விற்பனை செய்யுறதுலயும் பெரிய சவாலாம் இல்ல. வியாபாரியே நேரடியா வந்து வாங்கிட்டு போயிருவாங்க. அப்படி இல்லனா கூட கமிஷன் மண்டிக்கு அனுப்பி வித்துறலாம். அதுனால, காய் விக்கிறதுல எந்த பிரச்சினையும் இல்ல." என கூறியவர் தனது தோட்டத்திலேயே அதிக காய் விளையும் ஒரு தாய் மரத்தை பற்றி பேச ஆரம்பித்தார்.
"2008-ல ஒரு கின்னஸ் ரெக்கார்ட் பண்ணலாம்னு முயற்சி பண்ணேன். தோட்டக் கலை துறை அதிகாரிங்க முன்னாடியே ஒரு காய எடை போட்டு பார்த்தோம். அந்த காய் 110 கிலோ வந்துச்சு. ஆனா, கொஞ்சம் தாமதமா அப்ளை பண்ணனால ரெக்கார்ட்ல பதிய முடியல.
இதே போல இந்த மரத்தோட தாய் மரத்துலயும் பழங்கள் பெரிசு பெரிசா வந்துச்சு. அந்த காய வாங்குறது ஆந்திரால இருக்குற நெல்லூர்ல இருந்து ஆள் வருவாங்க. அப்போவே ஒரு காய 300 ரூபாய்க்கு வாங்கிட்டு போனாங்க. அந்த சமயத்துல ஒரு ஏக்கர் நிலத்தோட விலையே 100 ரூபாய் தான்" என கூறி மலைப்பூட்டினார்.
மேலும், தொடர்ந்த அவர் "3 ஏக்கர் தோட்டத்துல பலாவில இருந்து வந்த வருமானத்த சேமிச்சு வச்சு நிலம் வாங்குனேன். அந்த நிலத்தோட மதிப்பு இப்போ ரூ.3 கோடி வரும். அதேபோல 15 வருசத்துக்கு முன்னாடி 30 லட்சத்துல ஒரு வீடும் கட்டுனேன். அதோட மதிப்பு இப்போ ஒரு கோடி வரும். இது மட்டுமில்லாம 2009-ல ஃபோர்ட் காரும் வாங்குனேன். பலா மரத்துனால நல்லா வருமானம், நிம்மதியான வாழ்க்கை. என்னைய பார்த்து சுத்தி இருக்குற விவசாயிங்க நெறைய பேரு பலா வளர்க்குறாங்க. அதுனால, எல்லா விவசாயிகளும் பலா மரம் வளர்க்கலாம். நல்லா பராமரிச்ச ஏக்கருக்கு வருசத்துக்கு கண்டிப்பா ஒரு லட்சம் வருமானம் பார்க்கலாம்" என உறுதியாக கூறினார் சாதனை விவசாயி திரு. கருணாகரன்.
மரம் சார்ந்த விவசாயம் குறித்து இலவச ஆலோசனைகள் பெற காவேரி கூக்குரல் இயக்கத்தை 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- தமிழக அரசு பாரபட்சமின்றி பதிவு செய்துள்ள பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து உள்ளது. இதனால் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்படுகிறது.
கோவை,
தமிழ்நாடு எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் சார்பில் பாப்பம்பட்டி பிரிவு அருகே பாரதிபுரத்தில் புதிய கிளை அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவுக்கு கட்டுமான பிரிவு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். உழைப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.
கட்டுமானப்பிரிவு மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். புதிய அலுவலகத்தை எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் மாநில செயல் தலைவர் கணபதி சிவக்குமார் திறந்து வைத்தார். எச்.எம்.எஸ். கொடியை உழைப்பாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தேவராஜ் ஏற்றி வைத்தார்.
விழாவில் எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்க மாநில செயல் தலைவர் கணபதி சிவக்குமார் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா மற்றும் கட்டுமான துறைகளில் உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
ஏற்கனவே அமைப்புசாரா மற்றும் கட்டுமானத்துறைகளில் பதிவு பெற்றுள்ள பெண்களுக்கு தற்போது மகளிர் உரிமை தொகை தமிழக அரசால் வழங்கப்படும் போது இரு பயனாளிகள் என்று கிராம நிர்வாக அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
தமிழக அரசு பாரபட்சமின்றி பதிவு செய்துள்ள பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.பி.எப்95 ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு 1995-ம் ஆண்டு முதல் இதுவரை ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. எனவே மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
தமிழகத்தில் செயல்படும் அமைப்புசாரா, கட்டுமானம் உள்ளிட்ட தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், அனைவருக்கும் தமிழக அரசு தீபாவளி போனஸ், வேட்டி, சேலை மற்றும் பண்டிகை கால நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும்.
ரெயில் நிலையங்களில் கேட்டரிங், கோச் கிளினிங், பைப் லைன், சுமைதூக்கும் பிரிவுகளில் பணிபுரியும் அனைத்து காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கும், ரெயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போன்று ஊதிய உச்சவரம்பின்றி 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் எதிராக சட்டங்களை நிறை வேற்றி முதலாளிகளுக்கு சாதகமான செயல்பாட்டை கைவிட வேண்டும்.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உறுதி கோரிய பா.ஜனதா அரசு இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. உடனடியாக அதனை நிைறவேற்ற வேண்டும்.
கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து உள்ளது. இதனால் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து சாலைகளை செப்பனிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துசாமி, பள்ளிப்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் ஏசையன், மாவட்ட பொரு ளாளர் பாலசுப்பிரமணியன், அமைப்பு செயலாளர்கள் கோபிநாத், மோகன், துணைத்தலைவர்கள் இன்னாசி முத்து, கருப்புசாமி, வேளாங்கண்ணி, காந்தி, அகஸ்டியன், புவனே ஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய 09.12.2023 வரை மனுக்கள் பெறப்படும்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு சுருக்க திருத்த பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் அடுத்த மாதம் 4, 5 ந் தேதிகள் மற்றும் 18,19-ந்தேதிகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே, 01.01.2024-ந் தேதியில் 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்கள் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய 09.12.2023 வரை மனுக்கள் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று கலெக்டரிடம் நேரில் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.
- கால்நடை துறை சார்பில் மாடு மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்த வேண்டும்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று கலெக்டரிடம் நேரில் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பல ரோடுகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விரிவாக்கம் செய்யும் போது, மழைநீர் வடிகால் அமைத்து மழைநீரை அருகே உள்ள குளம், குட்டைகளில் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து மைசூர் வழியாக பெங்களூருவுக்கு விவசாய உற்பத்தியாளர்கள் பயன்படும் வகையில் தொடர் ெரயில் வண்டி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோவை மாவட்ட கிராம ஊராட்சிகளில் விவசாய மாடு மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. இதனை கண்டறிந்து கால்நடை துறை சார்பில் மாடு மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்த வேண்டும்.
இந்த திட்டத்திற்கு தற்போது கால்நடை துறை சார்பில் அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களை கண்டறிந்து விவசாய கால்நடை தீவன வளர்ச்சி மற்றும் மேய்ச்சலுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சாதி மத கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த முப்பறிபாளையத்தை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரின் 8 ஏக்கர் நிலத்தை, சிலர் அவர் உயிருடன் இருக்கும் போதே இல்லை என தெரிவித்து போலி சான்றிதழ் பெற்று அபகரித்துள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.
- மேட்டுப்பாளையம் தொகுதியில் மொத்தம் 3,00,553 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை,
கடந்த ஜனவரி 1- ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ண்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 14,96,770 ஆண் வாக்காளர்கள், 15,51,665 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 569 என மொத்தம் 30,49,004 வாக்காளர்கள் உள்ளனர்.
சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
மேட்டுப்பாளையம் தொகுதியில் 1,44,937 ஆண் வாக்காளர்கள், 1,55,569 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 47 பேர் என மொத்தம் 3,00,553 வாக்காளர்கள் உள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,54,788 ஆண் வாக்காளர்கள், 1,63,157 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 73 பேர் என மொத்தம் 3,18,018 வாக்காளர்கள் உள்ளனர்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,26,790 ஆண் வாக்காளர்கள், 2,28,583 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 114 பேர் என மொத்தம் 4,55,492 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,65,671 ஆண் வாக்கா ளர்கள், 1,64,827 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேர் என மொத்தம் 3,30,537 வாக்காளர்கள் உள்ளனர்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,61,736 ஆண் வாக்காளர்கள், 1,66,097 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 131 பேர் என மொத்தம் 3,27,964 வாக்காளர்கள் உள்ளனர். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,20,480 ஆண் வாக்காளர்கள், 121641 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 32 பேர் என மொத்தம் 242153 வாக்காளர்கள் உள்ளனர்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1,60,653 ஆண் வாக்காளர்கள், 1,64,126 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் என மொத்தம் 3,24,803 வாக்காளர்கள் உள்ளனர்.
கிணத்துக்கடவு சட்டம ன்ற தொகுதியில்1,61,826 ஆண் வாக்காளர்கள், 1,68,853 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 42 பேர் என மொத்தம் 3,30,720 வாக்காளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 1,07,016 ஆண் வாக்காளர்கள், 1,16,772 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 41 பேர் என மொத்தம் 2,23,829 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 92873 ஆண் வாக்காளர்கள் 102040 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தம் 1,94,935 வாக்காளர்கள் உள்ளனர்.
- தமிழகத்திலிருந்து உரிய அனுமதி இல்லாமல் கற்களை கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
- சுரங்கத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
கோவை,
தமிழகத்திலிருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை லாரிகளில் கடத்தி செல்வதாக சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடியில் சுரங்க துறை உதவி புவியியலார் பாலகிருஷ்ணன் தலைமையில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் கற்களை ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல சுரங்க துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள், அந்த வழியாக உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை கடத்தி சென்ற 3 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
வாளையார் சோதனை சாவடியில் சுரங்க துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் கற்களை ஏற்றி சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை கடத்தி சென்ற 8 லாரிகளை சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- நண்பர்களுடன் வந்த சஞ்சய், முன் விரோதத்தில் விக்னேஷ் மற்றும் மாரிச்செல்வத்தை அரிவாளால் ஓட ஓட வெட்டினார்.
- பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (22). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர் கத்தியை மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு பொது மக்களை பயமுறுத்தும் வகையில் வீதிகளில் சென்று வந்தார். இதனை பார்த்த விக்னேஷ் நண்பர்களுடன் சேர்ந்து சஞ்சயை போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டி அனுப்பினார்.
இதன் காரணமாக அவருக்கு விக்னேஷ் மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று விக்னேஷ் அவரது நண்பர் மாரிச்செல்வம் என்பவருடன் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு தனது நண்பர்களுடன் வந்த சஞ்சய், முன் விரோதத்தில் விக்னேஷ் மற்றும் மாரிச்செல்வத்தை அரிவாளால் ஓட ஓட வெட்டினார். இதில் நிலை குலைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஞ்சய் உள்பட அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அப்பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
- குவிந்து வரும் குப்பை காரணமாக ஈக்கள், கொசுக்கள் ஆகியவை வீட்டில் எந்த நேரமும் மொய்த்து வருகிறது
குனியமுத்தூர்,
கோவை பூ மார்க்கெட் அருகே வி.சி.வி லே-அவுட் அமைந்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி இதுவாகும்.
இப்பகுதியில் அருகருகே 2 குப்பை தொட்டிகள் உள்ளது. 2 குப்பைத்தொட்டிகளும் குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை ரோட்டிலேயே வீசி செல்லும் அவலநிலை தற்போது உள்ளது. இதனால் குப்பைகள் நடுரோட்டில் வந்து காலில் மிதிபடும் அளவுக்கு கிடக்கிறது.
இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் அந்த வழியாக செல்பவர்கள் குப்பைகளை இழுத்துக் கொண்டே செல்லும் நிலையும் காணப்படுகிறது.
இதனால் சாலை முழுவதும் குப்பைமயமாக காட்சி அளிக்கிறது. மேலும் அப்பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இந்த குப்பை தேங்கி இருக்கும் பகுதிக்கு எதிர்புறமும், பக்கவாட்டிலும் எண்ணற்ற உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
இதனால் அங்கு வந்து உணவருந்தும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
அருகிலேயே நடுநிலைப்பள்ளி ஒன்றும், திருமண மண்டபம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும், பொதுமக்களும் அந்த வழியாக நடந்து செல்வது வழக்கம்.
அப்படி செல்லும் பகுதியில் சாலை முழுவதும் குப்பையாக கிடப்பது மக்களுக்கு முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.
மேலும் குவிந்து வரும் குப்பை காரணமாக ஈக்கள், கொசுக்கள் ஆகியவை வீட்டில் எந்த நேரமும் மொய்த்து வருகிறது என கூறும் பொதுமக்கள், இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே கோவை மாநகராட்சியினர் அவ்வப்போது குப்பைகளை அப்புறப்படுத்தி அந்த பகுதியை, சுகாதாரமான பகுதியாக உருவாக்க வேண்டும் என்று பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






