search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: தொழில் அதிபரை காரில் கடத்தி தாக்கி ரூ.7.80 லட்சம் பணம் பறிப்பு
    X

    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: தொழில் அதிபரை காரில் கடத்தி தாக்கி ரூ.7.80 லட்சம் பணம் பறிப்பு

    • காரில் செல்லும் போது, விமல் யார் நீங்கள்? எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என கேட்டார்.
    • கும்பலிடம் இருந்து தப்பி வந்த விமல் நேராக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் ஸ்ரீ குமரன் நகரை சேர்ந்தவர் விமல்(வயது36). தொழில் அதிபர்.

    இவரது வீட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த சரவணன் (45) என்பவர் குடியிருந்தார். அப்போது இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி விமல் தனது காரில் உஞ்சப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து 2 கார்கள் வேகமாக வந்தன. தொடர்ந்து விமலின் காரை முந்தி வந்த 2 கார்களும், விமலின் காரை வழிமறித்து நின்றது.

    இதனால் விமலும் தனது காரை நிறுத்தி விட்டார். அப்போது எதிரே நின்ற 2 கார்களில் இருந்து 5 பேர் கும்பல் திபுதிபுவென இறங்கினர். இறங்கிய வேகத்தில், விமலின் காரை நோக்கி அந்த கும்பல் சென்றது.

    பின்னர், அவர்கள், விமலை தங்களுடன் வா, உன்னிடம் பேச வேண்டும் என அழைத்தனர். அவர் வரமறுக்கவே, வலுக்கட்டாயமாக விமலை மிரட்டி, அவரது காரிலேயே ஏற்றி கடத்தி சென்றனர்.

    காரில் செல்லும் போது, விமல் யார் நீங்கள்? எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் சரவணன் தான் உன்னை கடத்த சொன்னார். நீ அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடு என கூறி மிரட்டினர்.

    பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டியதுடன், சரமாரியாக தாக்கினர். இதனால் பயந்து போன விமல் தனது நண்பர்கள் மற்றும் மனைவியிடம் பேசி, ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை வாங்கி சரவணனின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், விமலிடம் ஒரு வெற்று பத்திரத்தை காண்பித்து, கையெழுத்து வாங்கி கொண்டனர். பின்னர் காரை அவினாசி அடுத்த விஜயமங்கலம் பகுதியில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.

    கும்பலிடம் இருந்து தப்பி வந்த விமல் நேராக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், சரவணன் தான் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழில் அதிபர் விமலை ஆட்கள் வைத்து கடத்தி தாக்கியதுடன், பணத்தை பறித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×