என் மலர்
உள்ளூர் செய்திகள்

நலவாரிய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் - எச்.எம்.எஸ். மாநில செயல் தலைவர் கணபதி சிவக்குமார் கோரிக்கை
- தமிழக அரசு பாரபட்சமின்றி பதிவு செய்துள்ள பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து உள்ளது. இதனால் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்படுகிறது.
கோவை,
தமிழ்நாடு எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் சார்பில் பாப்பம்பட்டி பிரிவு அருகே பாரதிபுரத்தில் புதிய கிளை அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவுக்கு கட்டுமான பிரிவு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். உழைப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.
கட்டுமானப்பிரிவு மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். புதிய அலுவலகத்தை எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் மாநில செயல் தலைவர் கணபதி சிவக்குமார் திறந்து வைத்தார். எச்.எம்.எஸ். கொடியை உழைப்பாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தேவராஜ் ஏற்றி வைத்தார்.
விழாவில் எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்க மாநில செயல் தலைவர் கணபதி சிவக்குமார் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா மற்றும் கட்டுமான துறைகளில் உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
ஏற்கனவே அமைப்புசாரா மற்றும் கட்டுமானத்துறைகளில் பதிவு பெற்றுள்ள பெண்களுக்கு தற்போது மகளிர் உரிமை தொகை தமிழக அரசால் வழங்கப்படும் போது இரு பயனாளிகள் என்று கிராம நிர்வாக அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
தமிழக அரசு பாரபட்சமின்றி பதிவு செய்துள்ள பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.பி.எப்95 ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு 1995-ம் ஆண்டு முதல் இதுவரை ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. எனவே மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
தமிழகத்தில் செயல்படும் அமைப்புசாரா, கட்டுமானம் உள்ளிட்ட தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், அனைவருக்கும் தமிழக அரசு தீபாவளி போனஸ், வேட்டி, சேலை மற்றும் பண்டிகை கால நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும்.
ரெயில் நிலையங்களில் கேட்டரிங், கோச் கிளினிங், பைப் லைன், சுமைதூக்கும் பிரிவுகளில் பணிபுரியும் அனைத்து காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கும், ரெயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போன்று ஊதிய உச்சவரம்பின்றி 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் எதிராக சட்டங்களை நிறை வேற்றி முதலாளிகளுக்கு சாதகமான செயல்பாட்டை கைவிட வேண்டும்.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உறுதி கோரிய பா.ஜனதா அரசு இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. உடனடியாக அதனை நிைறவேற்ற வேண்டும்.
கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து உள்ளது. இதனால் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து சாலைகளை செப்பனிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துசாமி, பள்ளிப்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் ஏசையன், மாவட்ட பொரு ளாளர் பாலசுப்பிரமணியன், அமைப்பு செயலாளர்கள் கோபிநாத், மோகன், துணைத்தலைவர்கள் இன்னாசி முத்து, கருப்புசாமி, வேளாங்கண்ணி, காந்தி, அகஸ்டியன், புவனே ஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






