என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கண்காணிப்பு காமிராக்கள் மூலம் சுற்றித்திரியும் நபர்கள் கண்காணிப்பு
    • ஒலிபெருக்கி மூலம் திருடர்கள் குறித்து விழிப்புணர்வு

    கோவை,

    நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு புதிய ஆடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    தீபாவளியையொட்டி ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட அனைத்து கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோது கிறது. இன்று வார விடுமுறை என்பதாலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

    கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வந்து தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள்.

    ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் ரோடு, டவுன்ஹால், 100 அடி ரோடு பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே உள்ளது. மக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக சாலையையொட்டி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கடைவீதி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ெபாதுமக்களிடம் ஜேப்படி செய்யும் நபர்களை கண்டறிந்து பிடிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்காக ஒப்பணக்கார வீதி, ராஜவீதி சந்திப்பு, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கோபுரத்தின் மீது நின்று கொண்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர கடைவீதிகளில் அடிக்கடி நடந்து சென்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர கடைவீதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதனை பயன்படுத்தி, பொதுமக்களிடம் பணம், நகை திருட வாய்ப்புள்ளது. எனவே திருட்டு சம்பவங்களை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் சீருடையின்றி கடைவீதிகளில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான நபர்களையும் பிடித்து விசாரித்து வருகிறோம்.

    திருட்டு வழக்கில் வெளியில் வந்த நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுதரவி முக்கிய வீதிகளில் ஜேப்படி திருடர்கள் குறித்து ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள், சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மத்திய ஜெயில் நிர்வாகம் சார்பில் மற்றொரு பெட்ரோல் பங்க் அண்மையில் புதிதாக திறக்கப்பட்டது.
    • நேற்றிரவு பணிக்கு வந்த விஜய் ரத்தினம் அதிகாலை பணி முடிய சில மணி நேரங்கள் இருக்கும் முன்பு, அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலியை சேர்ந்தவர் விஜய்ரத்தினம் (வயது42). இவர் மீது பாலியல் புகார் தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு போக்சோ வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விஜய் ரத்தினத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை மத்திய ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு, சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டீக்கடை, சலூன் கடை, பெட்ரோல் பங்க் போன்றவற்றில் பணி வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், போக்சோ வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்த விஜய் ரத்தினத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு கோவை மத்திய ஜெயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்க்கில் பணி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், மத்திய ஜெயில் நிர்வாகம் சார்பில் மற்றொரு பெட்ரோல் பங்க் அண்மையில் புதிதாக திறக்கப்பட்டது. இதையடுத்து விஜய் ரத்தினம் புதிதாக தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க்கில் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்தார்.

    நேற்று விஜய் ரத்தினத்திற்கு பெட்ரோல் பங்க்கில் இரவு நேர பணி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து இரவு 7 மணிக்கு சக கைதிகளுடன் அவர் வேலைக்கு புறப்பட்டார். அங்கு கைதிகளுடன் பணியாற்றினார்.

    இன்று காலை விஜய் ரத்தினம் உள்பட அவருடன் பணியாற்றிய அனைத்து கைதிகளும் வேலை முடிந்ததும், ஜெயிலுக்குள் அழைத்து செல்வதற்காக போலீசார் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர். அங்கு அனைவரும் வந்து விட்டனரா என சரிபார்த்தனர்.

    அப்போது விஜய் ரத்தினத்தை மட்டும் காணவில்லை. பெட்ரோல் பங்க் மற்றும் அருகே உள்ள பகுதிகளில் தேடியும் அவரை காணவில்லை.

    இதையடுத்து போலீசார் அவருடன் பணியாற்றிய சக கைதிகளிடம் விசாரித்தனர். அப்போது, அவர்கள், விஜய் ரத்தினத்தை காலை 5.30 மணியில் இருந்தே நாங்கள் பார்க்கவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என தெரிவித்தனர்.

    தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நேற்றிரவு பணிக்கு வந்த விஜய் ரத்தினம் அதிகாலை பணி முடிய சில மணி நேரங்கள் இருக்கும் முன்பு, அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தப்பியோடிய விஜய் ரத்தினத்தை போலீசார் தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் ஓவேலி என்பதால் அங்கு சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து அங்குள்ள போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • ஈஷா கிராமோத்சவ போட்டிகளால் அனைவரும் ஒன்றாக கூடி மாலை நேரத்தில் விளையாட்டு பயிற்சி செய்கிறோம்.
    • இளைஞர்களை மது, புகை உள்ளிட்டபோதை பழக்கத்திலிருந்து மீட்டுள்ளது ஈஷா கிராமோத்சவம்.

    கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதன் மூலம் மது, புகை உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து அவர்கள் மீள்வதாக தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர் கிராம மக்கள்.

    ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு திருவிழா என்பது மற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலிருந்தும் மாறுபட்ட ஒன்று. இதில் தேசிய, மாநில அளவில் உள்ள விளையாட்டு வீரர்களோ, கல்வி நிறுவனம் அல்லது தொழில் முறை விளையாட்டு வீரர்களோ அல்லது ஏற்கனவே சிறந்து விளங்கும் வீரர்களுக்கோ அனுமதி இல்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் அந்தந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு அணியை உருவாக்கி இப்போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்.

    இதன் மூலமாக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு புது அணி உருவாகவும்,பழைய அணி புத்துணர்வு பெறவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. போட்டி மனப்பான்மை, ஜாதி, மதம், வயது உள்ளிட்ட எந்த பேதமும் இன்றி குழுவாக சேர்ந்து பயிற்சி செய்வதால், இளைஞர்களின் தலைமை பண்பு மற்றும் ஒற்றுமை அதிகரிக்கிறது. இந்த போட்டியில் பரிசுகளை வெல்வது என்கிற ஒற்றை பலனை தாண்டி கிராமத்தின் சமூக ஒற்றுமை, கிராம மக்களின் ஆரோக்கிய மேம்பாடு, பெண்களின் சுய சார்புதன்மை என பல அம்சங்களை பயனாக பெற முடிகிறது. மிக முக்கியமாக இளைஞர்களை மது, புகை உள்ளிட்டபோதை பழக்கத்திலிருந்து மீட்டுள்ளது ஈஷா கிராமோத்சவம்.

    இந்த மாற்றத்தை கண்கூடாக பார்த்த கிராம மக்கள் தங்கள் அனுபவத்தை பகிரும் போது, "மாலை நேரங்களில் செய்வதற்கு ஏதுமின்றி பலர் தீய பழக்கத்திற்கு அடிமையாகி வந்தனர். ஆனால் ஈஷா கிராமோத்சவ போட்டிகளால் அனைவரும் ஒன்றாக கூடி மாலை நேரத்தில் விளையாட்டு பயிற்சி செய்கிறோம். நேரத்தை ஆக்கபூர்வமாக செலவிடுவதால் தீய பழக்கத்திலிருந்து பலர் விடுபட்டுள்ளனர்" என்று கருத்து தெரிவித்தனர்.

    விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் உருவாக்குவது தான் ஈஷா கிராமோத்சவத்தின் அடிப்படை நோக்கம். இதே கருத்தை வலியுறுத்தும் விதமாக, 15 ஆவது முறையாக நடைபெற்ற இந்த ஆண்டின் ஈஷா கிராமோத்சவம்  இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக கலந்து கொண்டார் நடிகர் சந்தானம்.  அவர் பேசுகையில் "புகை மது உள்ளிட்ட போதைப் பழக்கத்திலிருந்து வெளியே வருவதற்கான ஆற்றலை விளையாட்டு கொடுக்கும். அதை சரியாக கையில் எடுத்திருக்கிறார் சத்குரு" என பாராட்டு தெரிவித்தார்.

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கில் தொங்கினார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள பிச்சனூர் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(27). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த கவுசல்யா பிரசவத்தின் போது பரிதாபமாக இறந்தார்.

    காதல் மனைவி இறந்ததால் மன வேதனை அடைந்த மகேந்திரன் மது பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கே.ஜி.சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25-ந் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது.
    • சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி

    கோவை,

    தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25-ந் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது. அப்போது அந்த பெட்ரோல் குண்டு போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பியில் பட்டு கீழே விழுந்தது.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத் என்ற ரவுடியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பெட்ரோல் குண்டு பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஆனால் கவர்னர் மாளிகை அதிகாரிகள் கவர்னர் மாளிகை வளா கத்துக்குள் 4 பேர் நுழைந்து பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்யான புகாரை போலீசில் அளித்துள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை போல் தோற்றத்தை ஏற்படுத்த தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

    இதற்கு பா.ஜ.க.வும், கவர்னரும் துணை போகின்றனர். சென்னையில் பா.ஜ.க கொடிக்கம்பம் வைக்க அனுமதி அளிக்காத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்பது போல பா.ஜ.க 5 பேர் கொண்ட விசாரணை குழுவை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளனர். இந்த வேகத்தை பா.ஜ.க அரசு மணிப்பூரில் கடந்த 6 மாதமாக நடந்து வரும் கலவரத்தில் ஏன் காட்டவில்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று சமீப கால ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பா.ஜ.க.வும்., கவர்னரும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

    எனவே போலீசார் பொய்யான புகார் அளித்த கவர்னர் மாளிகை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • விண்வெளியில் இதுவரை 94 விண்கலங்கள், 125 செயற்கைகோள் ஏவப்பட்டதாக தகவல்
    • இஸ்ரோவால் பல திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது என்று பெருமிதம்

    கோவை.

    கோவையில் நடந்த விழாவில் சந்திராயன்-3 திட்ட இயக்குனர் டாக்டர்.வீரமுத்துவேல் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    விண்வெளியின் தந்தை என்றழைக்கப்படும், இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய். சைக்கிளில் துவங்கப்பட்ட இஸ்ரோ பயணம் தற்போது எந்தளவிற்கு வந்துள்ளது என்பதற்கு சந்திராயன் 3 சாட்சி.

    விண்வெளியில் 94 விண்கலங்கள் இதுவரை ஏவப்பட்டுள்ளது. 125 செயற்கைகோள் ஏவப்பட்டு உள்ளது.

    மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். மதிப்பெண்களும் முக்கியம் தான். இருப்பினும் நாம் தேர்வில் திறமையாகவும், தனித்துவமாகவும் இருக்க வேண்டும்.

    இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதற்கு மெக்கானிக் பொறியியல் என ஒரு துறை மட்டுமே படிப்பது என்று போதாது.

    பல்வேறு துறைகளின் அறிவும், தேர்வு செய்யும் துறையின் தனித்துவமாக மிளிர வேண்டும். அதனால், தேர்வு செய்யும் படிப்பில் திறம்பட படியுங்கள்.

    மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு மட்டுமின்றி இஸ்ரோவால் பல திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இன்று காலை திரும்பி வந்தனர்
    • கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை

    கோவை,

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    இந்த காட்டு யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியே, வனத்ைதயொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது.

    அவ்வாறு வரும் யானைகள், குடியிருப்பு க்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதோடு, அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    இதுபோன்று அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கோரக்(வயது 41), மித்(32). இவர்கள் 2 பேரும் கோவை அடுத்த தீத்திபாளையம் பகுதியில் தங்கி உள்ளனர்.

    இவர்கள் அந்த பகுதியில் நாகராஜன் என்பவர் புதியதாக கட்டி வரும் கட்டிடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று மாலை வேலை முடிந்ததும் இவர்கள் 2பேரும் அந்த பகுதியில் உள்ள காட்டிற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றனர்.

    அப்போது, திடீரென அந்த பகுதிக்கு காட்டு யானைகள் கூட்டம் வந்தது. இதனைப் பார்த்ததும் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து காட்டுக்குள் ஓட்டம் பிடித்தனர்.

    இந்த நிலையில் இரவு வெகுநேரமாகியும் 2 பேரும் திரும்பி வராததால் சக தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

    காட்டுக்கு செல்வதாக கூறி சென்றதால் அருகே உள்ள காட்டில் சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை.

    உடனே அவர்கள் இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது யானை துரத்தியதால் வாலிபர்கள் காட்டுக்குள் ஓடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வனத்திற்குள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இன்று காலை போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் வனத்திற்குள் சென்ற வடமாநில வாலிபர்கள் 2 பேரும் காலையில் வனத்தில் இருந்து திரும்பி தாங்கள் தங்கியிருந்த கட்டிடத்திற்கு வந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வடமாநில வாலிபர்களை சந்தித்து, கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி சென்றனர்.

    • ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு வாகனம் மீட்பு
    • யானை கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமத்துக்குள் நேற்று இரவு 6 காட்டு யானைகள் நுழைந்தது.

    இதனை பார்த்த கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனச்சரகர் சவுந்தர்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் பச்சாப்பாளையம்- கரடிமடை இடையே ஊருக்குள் புகுந்திருந்த யானைகளை காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வனத்துறையி னரின் வாகனம் சிறிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடி யாக ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் விழுந்த வனத்துறை வாகனம் மீட்கப்பட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு, யானை கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டி விட்டனர்.

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை
    • பெங்களூக்கு சென்று மாணவியை மீட்டு போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை அருகே உள்ள கணுவாயை சேர்ந்த 16 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம் கள்ளக்கு றிச்சியை சேர்ந்தவரும், பெங்களூரில் வசித்து வரும் 19 வயது வாலிபர் ஒரு வருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரி வித்தனர்.

    மேலும் தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து மாணவி அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக வாலிபர் கோவைக்கு வந்து மாணவியை பெங்களூருக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் தடாகம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி அவரது காதலனுடன் பெங்களூரில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் பெங்களூக்கு சென்று மாணவியை மீட்டனர். அவரை அழைத்து சென்று பலாத்காரம் செய்த வாபரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சடத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூரையை பிரித்து வீட்டிற்குள் நுழைந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது
    • 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் திரிவதால் பொதுமக்கள் அச்சம்

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை புது தோட்ட பகுதியில் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் அரிய வகை 300-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் வாழ்ந்து வருகிறது.

    இந்த சிங்கவால் குரங்குகளை வனத்துறையினர் மற்றும் என்.சி.எப்., தன்னார்வலர் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சிங்கவால் குரங்குகள் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சுற்றி திரிந்து வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிங்கவால் குரங்குகள் வீட்டின் கூரை களை பிரித்து வீட்டிற்குள் நுழைந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது.

    சிங்கவால் குரங்குகள் மெல்ல மெல்ல வால்பாறை டவுன் பகுதிக்கு வர ஆரம்பித்தது. தற்போது 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் துளசிங்க நகர், காமராஜ் நகர்,கூட்டுறவு காலனி, அண்ணா நகர், வால்பாறை டவுன், போன்ற இடங்களில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி திரியும் குரங்குகள் வீடுகளில் நுழைந்து உணவு பொருள்களை சாப்பிட்டு பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குரங்குகளை குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை
    • பெங்களூருவில் இருந்து வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

    கோவை,

    ேகாவையில் மேட்டுப்பாளையம் ரோட்டில் எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட், அண்ணா காய்கறி மார்க்கெட், கோவை தியாகி குமரன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூர் பகுதிகளில் இருந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகளும் வருகின்றன.

    இதுதவிர கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கிணத்துக்கடவு, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். ெமாத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கோவை டி.கே.மார்க்கெட்டுக்கு பெங்களூர் பகுதியில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி, வெண்டைக்காய் உள்பட பல காய்கறிகள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.

    தற்போது மார்க்கெட்டில் சில காய்கறிகளின் விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்து காணப்படுகிறது. நேற்று வரை கிலோ ரூ.20க்கு விற்பனையாகி வந்த தக்காளி இன்று ரூ.5 உயர்ந்து கிலோ ரூ.25க்கு விற்பனையாகி வருகிறது.

    இதேபோல் பெரிய வெங்காயம் நேற்று கிலோ ரூ.40க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.20 உயர்ந்து, ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    பெரிய வெங்காயம்-ரூ.60, சின்னவெங்காயம்-ரூ.100, வெண்டைக்காய்-ரூ.40, தக்காளி-ரூ.25, கத்தரிக்காய்-ரூ.30, கேரட்-ரூ.50, மாங்காய்-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.120, பீன்ஸ்-ரூ.90, பீர்க்கங்காய்-ரூ.50, காலிபிளவர்-ரூ.30, எலுமிச்சை-ரூ.90க்கு விற்பனையாகிறது.

    இதேபோல் வெள்ளரி-ரூ.30, அரசாணிகாய்-ரூ.15, பாகற்காய்-ரூ.30, மிளகாய்-ரூ.40, உருளை-ரூ.40, சிறுகிழங்கு-ரூ.80, சேனைகிழங்கு-ரூ.60, கருணை கிழங்கு-ரூ.70, சேம்பு-ரூ.80, இஞ்சி-ரூ.120க்கு விற்பனையாகி வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோவை மார்க்கெட்டுக்கு பெங்களூருவில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு வரும்.

    தற்போது அங்கு விளைச்சல் பாதித்துள்ள தால் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் கோவை மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து விற்பனையாகி வருகிறது என்றார்.

    • பீரோவில் வைத்திருந்த ரூ.32,000 ரொக்கம், நகைகள் மாயம்
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை.

    கோவை நீலிகோணம் பாளையம், தாமோதரசாமி லே அவுட்டை சேர்ந்தவர் ராமநாதன்(வயது58). இவர் சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் 2 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.32,000 ரொக்க பணமும், தங்க செயின், மோதிரம், கம்மல், மற்றும் 40 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது.இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    இதே போல் அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (31). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்திற்கு சென்றார்.

    பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த போது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ரூ.50000 ரொக்க பணமும், 3 பவுன் தங்க நகை, 400 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே தெருவில் அடுத்தடுத்து வீடுகளை பூட்டை உடைத்து திருட்டு நடந்திருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×