என் மலர்
உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும்- அமைச்சரிடம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் கோரிக்கை
- வால்பாறை பகுதியில் அதிகளவிலான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
- வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவரை, வால்பாறை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் பரமசிவம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வால்பாறை பகுதியில் அதிகளவிலான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அன்றாடம் உழைத்தே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஏதாவது உடல் நலம் பாதிப்பு மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் வால்பாறை அரசு ஆஸ்பத்திரி மற்றும், இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே சென்று வருகிறார்கள்.
ஆனால் அங்கு போதிய மருத்துவர்களும், ஊழியர்களும் பணியில் இருப்பது இல்லை. குறைந்த அளவு டாக்டர்களும், ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். இதுதவிர ஆஸ்பத்திரிகளில் போதிய மருத்துவ உபகரணங்களும் கிடையாது.
இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஏதாவது மருத்துவ தேவை என்றாலும் 40 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து பொள்ளாச்சி, கோவை போன்ற பகுதிகளுக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அப்படி செல்லும் சில சமயங்களில் அவர்களுக்கு நோயின் பாதிப்பு தன்மை கூடுவதோடு, சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் இங்கு வசித்து வரக்கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மருத்துவ துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் வால்பாறை அதற்கு எதிர்மறாகவே உள்ளது. சில நேரங்களில் மரணமடைந்தாலும் உடல் கூராய்வு செய்வதற்கு கூட 2 நாட்களுக்கும் மேல் ஆகிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
எனவே பொதுமக்கள் நலன் கருதி, வால்பாறையில் உள்ள அனைத்து மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்களை நியமிப்பதுடன், மருத்துவ உபகரணங்களும் வாங்கி தர வேண்டும்.
மேலும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கூறுவதற்காகவும், சிகிச்சை அளிப்பதற்காக பெண் மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






