என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.
    • கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.

    கோவை:

    தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போது தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டல அளவில், மாநாடு நடத்தி வருகிறது.

    முதல்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருவண்ணாமலையில் தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இதில் 1.3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அடுத்த கட்டமாக இளைஞரணியின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24-ம் தேதி நடந்தது. இதிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    அதன் தொடர்ச்சியாக தி.மு.க. இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடானது இன்று மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் டோல்கேட் பகுதியில் நடக்க உள்ளது.

    இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இதற்காக அவர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

    பின்னர் அவர் கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்று நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் சி.டி.சி மேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு சென்றார். அங்கு கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, மாலை 5 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் பகுதிக்கு வருகிறார்.

    அங்கு நடக்கும் தி.மு.க இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் பங்கேற்கும் அவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.

    துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்றுகிறார்.

    அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட மாநகர செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் முடிவில் இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக மாநாட்டிற்கு வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    கோவையில் நடக்கும் மேற்கு மண்டல தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்கள், 39 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளை, வாக்குச்சாவடி அளவிலான இளைரணி நிர்வாகிகள் அனைவரும் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.

    மாநாட்டையொட்டி கணியூர் டோல்கேட் பகுதியில் பிரமாண்டமான மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு, குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.

    மாநாட்டு பந்தலில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    • ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உயர்த்தப்பட்டது.
    • புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் சேவை 3 வகையாக நடைமுறையில் உள்ளது.

    அதன்படி தினமும் 8 பயணங்கள் கொண்ட சாதாரண கட்டண சேவை, கோடை விடுமுறை, பிற விடுமுறைகள், வார இறுதிநாட்கள் மற்றம் பண்டிகைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் சேவை, திருமணம், குடும்ப விழா, நிறுவன விழா மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிக்காக முழு ரெயிலையும் தனியாக வாடகைக்கு எடுப்பது (சார்ட்டர்டு சிறப்பு ரெயில்) என்று மூன்று வகைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டண ரெயில்களில் பயணிக்க முதல் வகுப்பில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூருக்கு ரூ.500, 2-வது வகுப்பில் பயணிக்க ரூ.250 கட்டணம் வீதம் வசூலிக்கப்படுகிறது.

    குன்னூர்-ஊட்டி இடையே முதல் வகுப்பில் பயணிக்க ரூ.290, 2-வது வகுப்பில் பயணிக்க ரூ.150 மற்றும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே முதல் வகுப்பு கட்டணம் ரூ.1000, 2-வது வகுப்பு கட்டணம் ரூ.550 வீதம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த ரெயில்களின் கட்டணம் தற்போது 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அதிகரிக்கப்படவில்லை.

    ஆனால் மேட்டுப்பாளையம்-குன்னூர், குன்னூர்-ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரெயிலின் இயக்க செலவுகள், பராமரிப்பு செலவு மற்றும் பணியாளர்களின் ஊதியம் ஆகியவை கணிசமாக உயர்ந்து உள்ளன.

    இதனை ஈடுகட்டும் வகையிலும், வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையிலும் நீலகிரி மலை ரெயில் பிரிவில் சாதாரண ரெயில்களின் அடிப்படை கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மேலும் இந்த புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    அதன்படி சாதாரண ரெயில்களுக்கான அடிப்படை கட்டணம் மட்டுமே 5 சதவீதம் உயர்த்தப்படும். மற்றபடி முன்பதிவு கட்டணம், கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

    மேலும் ஏற்கனவே பழைய கட்டணத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் செல்லுபடியாகும். அதற்கு கூடுதல் கட்டண வித்தியாசம் வசூலிக்கப்படாது. இன்று முதல் புதிய கட்டணத்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும்.

    ஊட்டி மலை ரெயில் பிரிவில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மற்றும் சார்ட்டர் சிறப்பு ரெயில்கள் ஆகியவற்றின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவச தகன சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
    • ஈஷா வணிக நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

    கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் நவீன எரிவாயு மயானத்தில் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் 'இலவச தகன சேவை' தொடங்கப்பட்டு உள்ளது.

    ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை பஞ்சாயத்து அனுமதியுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இதர அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவீன எரிவாயு மயானத்தை அமைத்தது.

    தற்போது இந்த நவீன எரிவாயு மயானம் முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவச தகன சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த எரிவாயு மயானத்தை இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியுடன் ஈஷா அறக்கட்டளை இணைந்து செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்குருவின் வழிகாட்டுதலில் அனைத்து மக்களுக்கும் கண்ணியமான இறுதிச் சடங்குகள் மற்றும் எரியூட்டும் சேவைகளை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஈஷா அறக்கட்டளை 2010-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை இயக்கி பராமரித்து வருகிறது. 

    தற்போது சென்னை பெசன்ட் நகர், கோவை, நெய்வேலி, வேலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.

    இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குவதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. இதை ஈஷா வணிக நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

    மேலும், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஈஷா சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் 'வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை' வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

    இத்திட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • வனப்பகுதிகள் மற்றும் கிராமப்புற எல்லைகள் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்க வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    கோவை:

    தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நிர்வாக மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தேர்தல் காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாமல் தடுக்கவும், சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழகமும் கேரளாவும் இணைந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல கேரளாவில் இருந்து பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாதவி குட்டி, போலீஸ் அதிகாரி அஜித்குமார், திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரியங்கா, இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசன், போலீஸ் சூப்பிரண்டு சாபு மேத்யூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தேர்தல் காலங்களில் அதிகரிக்கும் பணப் பரிமாற்றங்கள், சட்டவிரோதமாக பணம் மற்றும் பொருட்கள் கடத்தல், போதைப்பொருள் நகர்வு போன்றவற்றை தடுக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு அவசியம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

    சோதனைச் சாவடிகள் அதிகரித்தல், வாகன சோதனைகளை தீவிரப்படுத்தல், இரவு நேர கண்காணிப்பை பலப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மேலும், வனப்பகுதிகள் மற்றும் கிராமப்புற எல்லைகள் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்க வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    எல்லைப்பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு கூடுதல் பணியாளர்கள் நியமித்தல், பறக்கும் படைகளை அமைத்தல், முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    சட்டமன்றத் தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறுவதற்கு இரு மாநிலங்களின் இணைந்த நடவடிக்கை முக்கியம் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    • இந்த 10 தொகுதிகளும் தற்போது தி.மு.க.வுக்கும் சரி, அ.தி.மு.க.வுக்கும் சரி கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
    • கோவையில் அடுத்தடுத்து சில மாநாடுகளை நடத்தி தி.மு.க.வை பலப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது.

    கோவை:

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    சட்டசபை தேர்தலை பொறுத்தவரை எப்போதுமே கொங்குமண்டல தொகுதிகளின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த பல தேர்தல்களில் அ.தி.மு.க., கொங்கு மண்டலங்களில் பெற்ற வெற்றியை கொண்டே அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தது. கடந்த தேர்தலில் மட்டும் இந்த சென்டிமெண்ட் பழிக்காமல் போனது.

    தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் கொங்கு மண்டல தலைநகராக விளங்கக் கூடிய கோவை மாவட்டத்தில் தி.மு.க.வால் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. இதன்காரணமாக இந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் கட்சி மேலிடம் காய்நகர்த்தி வருகிறது.

    இந்த 10 தொகுதிகளும் தற்போது தி.மு.க.வுக்கும் சரி, அ.தி.மு.க.வுக்கும் சரி கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதனால் அ.தி.மு.க.வும் தொகுதிகளை பறிகொடுத்து விடக்கூடாது என்பதற்காக பல மாதங்களுக்கு முன்பே களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஊர், ஊராக நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தெருமுனை கூட்டங்கள் நடத்துதல் என பிரசாரங்களை தொடங்கி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொங்குமண்டல தி.மு.க. பொறுப்பாளராக செந்தில்பாலாஜி களமிறங்கி உள்ளார். ஏற்கனவே கோவை மாவட்டத்தை ஒட்டிய பல்லடத்தில் தி.மு.க. மகளிர் அணி மாநாட்டை பிரமாண்ட நடத்தி முடித்துள்ளார்.

    அதற்கடுத்து கோவையில் அடுத்தடுத்து சில மாநாடுகளை நடத்தி தி.மு.க.வை பலப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் மாநாட்டை கோவையில் நடத்த உள்ளது. ஒட்டுமொத்த கொங்கு மண்டல தொகுதிகளின் வெற்றியையும் குறிவைத்து இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

    கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.

    இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தலைமை கழக அனுமதியுடன் தி.மு.க. இளைஞர் அணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளை-வார்டு-பாகங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 28 மாவட்டங்கள் 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் நிர்வாகிகளை திருவண்ணாமலையிலும், தென் மண்டலத்துக்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள், 58 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சம் நிர்வாகிகளை விருதுநகரிலும் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி அளவில் கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.

    இதில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கழக மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைத்திட அந்தந்த மாவட்ட கழக செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இளைஞர் அணி நிர்வாகிகளை மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கு அழைத்து வரும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    22-ந்தேதி கோவையில் நடைபெற உள்ள மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த மாநாட்டை தொடர்ந்து தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டையும் கோவையில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அநேகமாக அந்த மாநாடு இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலே இருக்கலாம் என கூறப்படுகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிகிறது.

    • வால்பாறையில் கடந்த மாதங்களில் இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது.

    வால்பாறை:

    கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று வால்பாறை.

    இங்குள்ள தேயிலை தோட்டங்கள், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

    அரசு விடுமுறை தினங்கள், வாரவிடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். அவ்வாறு வருபவர்கள் தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்தும், வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு உள்ளிட்டவற்றையும் பார்த்து செல்கின்றனர்.

    வால்பாறையில் கடந்த மாதங்களில் இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியிருக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு, சின்னக்கல்லாறு, இறைச்சிப்பாறை அருவி, அணைகளிலும் நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்த அளவே இருந்ததை பார்க்க முடிந்தது.

    • ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

    நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொள்வர். அவ்வகையில் இந்தாண்டு நடிகைகள் தமன்னா,ஸ்ரீநிதி, சாரா அர்ஜுன் ஆகியோர் கலந்து சிவனை மனமுருகி வேண்டினர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • வாகனங்களை வாடகைக்கு பிடித்து மைக் மூலம் பிரசாரம் நடக்கிறது.
    • தி.மு.க., அ.தி.மு.க கட்சியினர் தேர்தல் களத்தில் தினமும் வாகனங்களை வாடகைக்கு எடுத்து மக்களை சந்தித்து வருகிறார்கள்.

    கோவை:

    தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் தீவிரம் காட்டி வருகின்றன.

    தேர்தல் கூட்டணி இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டாத நிலையில், முக்கிய கட்சிகள் இப்போதே தேர்தல் களத்தில் இறங்கி விட்டன.

    கோவையில் அ.தி.மு.க. சார்பில் மினி லாரி மற்றும், மினி ஆட்டோக்களை வாடகைக்கு பிடித்து ஒவ்வொரு வார்டு, பகுதி வாரியாக சென்று அ.தி.மு.க.வினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுவரை நூற்றுக்கணக்கான தெருமுனை பிரசாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக வாகனங்களை வாடகைக்கு பிடித்து மைக் மூலம் பிரசாரம் நடக்கிறது.

    அதேபோன்று பா.ஜ.க சார்பில் மக்களிடம் கருத்து கேட்கும் இயக்கம் நடத்தப்படுகிறது. இதற்காக வாகனங்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று வாகனங்களை நிறுத்தி வைத்து பொதுமக்களிடம் துண்டு சீட்டு கொடுத்து நிரப்பி, அதனை உள்ளே போடுமாறு தெரிவித்து வருகின்றனர். இந்த வாகனங்களும் கோவை பகுதியை சுற்றி வருகின்றன.

    அதேபோன்று தி.மு.க சார்பில், தேர்தல் அலுவலகம் திறப்பு, ஆட்டோ நிறுத்தம் திறப்பு, பொதுக்கூட்டம் என்று கோவையில் தேர்தல் களத்தில் தி.மு.க தீவிரமாக வலம் வருகிறது.

    தி.மு.க., அ.தி.மு.க கட்சியினர் தேர்தல் களத்தில் தினமும் வாகனங்களை வாடகைக்கு எடுத்து மக்களை சந்தித்து வருகிறார்கள். இதனால் வாடகை வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தொழில் சூடு பிடித்துள்ளது. இதுவரை லோடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்த இந்த வாகனங்கள் தற்போது தேர்தல் களத்தில் வலம்வர தொடங்கியுள்ளன.

    அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வாடகைக்கு அமர்த்தி வருவதால் இனி லாரி வாகனங்கள், மினி ஆட்டோக்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இதனால் வாடகை கட்டணம் உள்ளிட்ட கட்டணமும் அதிகரித்து வருகிறது.

    • விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்துக்களை தடுக்க போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் உடையார். இவரது மகன் ரோஷன் (வயது20).

    ரோஷன் கோவை அருகே கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக் படித்து வந்தார்.

    நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் ரோஷன் மோட்டார் சைக்கிளில் பாலக்காடுக்கு செல்ல புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் சேலம்-கொச்சின் எல்.என்.டி. பைபாஸ் புறவழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது அங்கு உள்ள பெட்ரோல் பங்க் அருகே தேன்பண்ணை பகுதியில் சென்ற போது கொச்சியில் இருந்து சேலம் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளுடன் ரோஷன் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

    சிறிது நேரத்திலேயே ரோஷன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து அறிந்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிரிழந்த ரோஷன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான மாணவர் ரோஷன் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்.ஏ.வின் உறவினர் மகன் ஆவார்.

    ரோஷன் விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவருடன் படித்து வரும் சக கல்லூரி மாணவர்கள், உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விபத்து நடந்த பகுதி அடிக்கடி உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் பகுதி என்று கூறப்படுகிறது.

    அந்த இடத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராஜநாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கெடுக்க உள்ளார்.
    • சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 15ஆம் தேதி மாலை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் மற்றும் தன்னார்வலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசியதாவது, "ஈஷாவில் 32வது மகா சிவராத்திரி விழா 15ஆம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

    15ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதில் சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஸ்வரலிங்க மகா அபிஷேகம் மற்றும் சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    மேலும் இந்தாண்டு முதன் முறையாக சத்குரு ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் எனும் ஆன்மிக செயல்களை அர்ப்பணிக்க உள்ளார்" என தெரிவித்தனர்.

    மேலும், மக்களின் வசதிக்காக தேவையான பார்க்கிங் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள், மருத்துவ வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தர உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

    ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோவில்களிலும் நேரலை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    • கோவையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்வோர் தினமும் இந்த பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.
    • கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    கோவை:

    மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இன்று காலைமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பொதுபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவை காந்திபுரத்தில் இருந்து கொச்சி, எர்ணாகுளம், திருச்சூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 12 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோன்று, உக்கடத்தில் இருந்து குருவாயூர், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கேரளாவில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருவோர், கோவையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்வோர் தினமும் இந்த பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு கேரள போக்குவரத்து ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அங்கு பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் இன்று ஓடவில்லை. உக்கடம் பஸ் நிலையத்தில் கேரள பஸ்கள் நிறுத்தி வைக்க கூடிய இடம் இன்று பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கேரள போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோவையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    சிலர் ரெயில்கள் மூலமாக கேரளாவுக்கு சென்றனர். இதனால் கேரளாவில் இருந்து கோவை வந்த ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை கோவையில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

    • கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வெறும் 17,000 சம்பளத்துடன் தான் செல்ல வேண்டியது உள்ளது.

    கோவை:

    தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உதவியாளர் நிலையில் ரூ.16 ஆயிரத்து 500, சமையலர் மற்றும் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.5 ஆயிரத்து 700 அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி முதல் கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை தெற்கு மாவட்ட தாசில்தார் அலுவலகம் அருகில் சாமியானா பந்தல் அமைத்து இரவும், பகலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், இரவிலும் அங்கேயே தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இன்று 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் அமர்ந்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார்.

    கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அவர், அங்கிருந்து நேராக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போராடி வரும் அங்கன்வாடி ஊழியர்களை போராட்ட களத்தில் சந்தித்தார்.

    அப்போது அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் இருந்தனர்.

    பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போராட்ட பந்தலில் தரையில் அமர்ந்து அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுடன் பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தாங்கள் 35 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் ஓய்வு பெறும்பொழுது வெறும் 17,000 சம்பளத்துடன் தான் செல்ல வேண்டியது உள்ளது. எனவே தங்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை, நிறைவேற்றி தர வேண்டும் என்றும், ஆனால் இதுவரை தங்கள் கோரிக்கைகள் எதுவும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது என்று தெரிவித்தனர்.

    அதற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பி உங்கள் கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவோம் என அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

    தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும், அவர்களிடம் சட்டசபையில் இதுகுறித்து குரல் எழுப்பப்படும் என்றார். அவர்களுக்கு போராட்ட களத்தில் இருந்தவர்கள் நன்றி கூறினர். அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

    ×