என் மலர்
சென்னை
- சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.
மேலும், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்தமிழகத்தின் அநேக இடங்களில், வடதமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
நாளை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
5-ந்தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
- புவிசார் குறியீடு அங்கீகாரத்தில் இந்திய அளவில் 69 பொருட்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
சமீபத்தில் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம் மற்றும் ராமநாதபுரம் சித்துறைகார் அரிசி ஆகிய பொருட்களுக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
புவிசார் குறியீடு அங்கீகாரத்தில் இந்திய அளவில் உத்தரப்பிரதேசம் 79 பொருட்களுடன் முதல் இடத்திலும், 69 பொருட்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளது.
- வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
- விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ''அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், ஆளும் கட்சியின் நிர்வாகி ஆவார். அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரனுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விரிவான விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
- இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன.
- 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
மலைகளின் அரசியான ஊட்டிக்கு சாதாரண நாட்களை விட விடுமுறை தினங்களில் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் கோடை விடுமுறை சீசனில் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
கோடை சீசன் தொடங்க உள்ளதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.
இந்த கட்டுப்பாடு ஏப்.1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கல்லாறு, குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்தனர்.
இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட இ-பாஸ் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மறு ஆய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகம் வரும் பிரதமர் மோடியை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டு இருந்தார்.
- மத்திய அரசு விடுவிக்காத நிதியை உடனடியாக விடுவிக்க நிதி அமைச்சர் வலியுறுத்துவார்.
சென்னை:
நம்ம ஊரு பள்ளி திட்டம் மூலம் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு தட்டச்சர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
மதுரை வரும் பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து வலியுறுத்துவார்.
வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக தொடர்ந்து எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்போம், சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். அதற்கு நியாயம் கேட்டு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படும்.
- ரூ. 60 லட்சம் மதிப்பீட்டின் கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 12,000 பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில், 2025 - 2026ம் ஆண்டுக்கான பால்வளத்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:-
* ரூ. 9.34 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்தினை மதிப்பீடு செய்து உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்கி கண்காணிக்க ஏதுவாக 1,437 பால் பகுபாய்வு கருவிகள் நிறுவப்படும்.
* ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் பாலில் கலப்படத்தை கண்டறியவும் 129 நவீன அகச்சிவப்பு பகுப்பாய்வு கருவுகள் வழங்கப்படும்.
* ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதிதாக தொடங்கப்படும்.
* ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
* ரூ. 2.40 கோடி மதிப்பீட்டில் 14 மாவட்ட ஒன்றியங்களில் 30 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் புதுப்பிக்கப்படும்.
* ரூ. 1.50 கோடி மதிப்பீட்டின் தரமான பால் கொள்முதல் செய்ய தேவையான பால் பரிசோதனை உபகரணங்கள் 165 பால் தொகுப்பு குளிர்விப்பு மையங்களுக்கு வழங்கப்படும்.
* ரூ. 2.23 கோடி மதிப்பீட்டில் மாதாவரத்தில் உள்ள மாநில மைய ஆய்வகம் கூடுதல் உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும்.
* ரூ. 2.63 கோடி மதிப்பீட்டில் 525 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும்.
* ரூ. 72 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான பசுந்தீவன தேவையை பூர்த்தி செய்ய பால் உற்பத்தியாளர்களுக்கு தீவன விதைகள் வழங்கப்படும்.
* ரூ. 2.38 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம், வேலூர், மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
* ரூ. 1.94 கோடி செலவில் உம்பளச்சேரி இன பசுமாடுகளின் மரபணு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய பால் பதிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படும்.

* ரூ. 60 லட்சம் மதிப்பீட்டின் கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 12,000 பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.
* ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் சிறந்த மூன்று கறவை மாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும்.
* ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கங்கள் நடத்தப்படும்.
* ரூ. 2.10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க 600 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்படும்.
* ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை முறை கருவூட்டல் பணியை சிறப்பாக செயல்படுத்தும் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
* ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகள் மடி நோய் கண்டறியும் பொருட்கள் 100 சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.
* ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் கன்று ஈனும் இடைவெளியை குறைப்பதற்காக 2000 மலடு நீக்க சிகிச்சை மற்றும் சினை பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.
* தொடக்கப்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நுண்கடன் வழங்கும் நோக்கில் வெண் நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* ஆவின் விற்பனை முகவர்களின் நலன் கருதி அவர்களின் பங்களிப்புடன் ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி உருவாக்கப்படும்.
* தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புதிய வகை மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும்.
* தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பல்வகை சேவை மையங்களாக உருவாக்கப்படும்.
- இந்த நாடகம் எல்லாம் அவர்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே.
- ஏமாற்றவும் பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.வுக்குத் தெரியும்.
சென்னை:
வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்ற அறிவிப்புக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதும், வக்ஃப் மசோதாவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதும் உட்பட இன்று சட்டமன்றத்தில் தி.மு.க.வின் துரதிர்ஷ்டம் மிகவும் கணிக்கத்தக்கதாகிவிட்டது! இந்த நாடகம் எல்லாம் அவர்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே.
முந்தைய வக்பு சட்டத்தால் இந்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் கூட பாதிக்கப்பட்டார்கள் என்பதை தமிழக முதல்வர் உணரவில்லையா? தயவுசெய்து உங்கள் நாடகத்திற்காக சட்டமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
அவர்களின் நாடகத்தின் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு "2025 வக்பு மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத தி.மு.க. ஒருவரை நியமிக்கும். தி.மு.க இதை ஒரு தேர்தல் பிரசாரமாக முன்னெடுத்து, 2026 சட்டமன்ற மற்றும் 2029 பாராளுமன்றத் தேர்தல்களில் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும்.
ஏமாற்றவும் பிரிவினைப்படுத்தவும் மட்டுமே தி.மு.க.வுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
- தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
- மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.
பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.
* இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே!
* ஒன்றிய அரசே சிறுபான்மையினரை வஞ்சிக்காதே!
* இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிராகரிக்காதே!
என்று வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
- கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு ஆகும்.
- இந்தக் கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொதுவுடைமை புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஜெர்மனியில் பிறந்து உலகம் முழுவதும் வாழும் பாட்டாளிகளின் தோழராக உருவெடுத்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு ஆகும்.
இந்தக் கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.இராசா அவர்கள் திறந்து வைத்தார்.
இவ்வார் அவர் கூறியுள்ளார்
- எதிர்க்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வருவார்கள்.
- ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது என்பது தேவையற்றது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகின்றனர்.
* இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதா என்பது போன்ற நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
* மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் என்பது போல மாயை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
* பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் எதிர்ப்பு, குறை ஏற்பட்டால் சொல்லலாம். ஆனால் மாநில அரசு மத்திய அரசை இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு அரசாங்கம் என்பது மாயை போல உருவாக்கி வாக்கு வங்கி அரசியலை தேடிக்கொண்டிருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது. வேதனைக்குரியது.
* குறிப்பாக சட்டமன்றத்தில் கோஷம் போட்டது இதுதான் முதல்முறை என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வருவார்கள். ஆனால் ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது என்பது தேவையற்றது.
* முதலமைச்சர் தான் எல்லாருக்கும் நீதி வழங்கணும். முதலமைச்சரே நீதிமன்றத்திற்கு போனால் நாம் என்ன செய்வது? என்றார்.
- இழப்பதற்கென்று எதுவுமில்லை-பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர்!
- இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாய நிலை மாறவில்லை.
சென்னை:
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் 2 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதலாவது அறிவிப்பு: உலக மாமேதை காரல் மார்க்சை பெருமைப்படுத்திட, போற்றிட இந்த திராவிட மாடல் அரசு விரும்புகிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்த புரட்சியாளர் காரல் மார்க்ஸ்.
இழப்பதற்கென்று எதுவுமில்லை-பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர்! அறிவுலகத் தொலைநோக்குச் சிந்தனையாளர். வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள். பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ்.
உலகப் புரட்சிகளுக்கும், இந்த உலகம் இதுவரை அடைந்துள்ள பல்வேறு மாற்றங்களுக்கும் அடித்தளம் அமைத்தது அவரது சிந்தனைகள்தான். அப்படிப்பட்ட 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற சிந்தனையோடுதான், அவரது நினைவு நாளான கடந்த மார்ச் 14-ம் நாள், நம்முடைய நிதிநிலை அறிக்கையை இந்தப் பேரவையில் தாக்கல் செய்தோம்.
இந்தியாவைப் பற்றி யாரும் எழுதாத காலத்தில், மிகச்சரியாக இந்தியாவைப் பற்றி எழுதியவர் அவர்தான். "தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிற புவியியல் ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்.
இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாய நிலை மாறவில்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான, கவர்ச்சிகரமான தேசம் ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடைவார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்" என்று எழுதியவர் காரல் மார்க்ஸ்.
அதனால்தான் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து 1931-ம் ஆண்டே வெளியிட்டார் தந்தை பெரியார். அத்தகைய மாமேதை மார்க்ஸ் உருவச்சிலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமையடைகிறேன்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் கோலோச்சிய இந்த சென்னை மாநகரில் அந்த மாமேதையின் சிலை அமைவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும் உறங்காப்புலி என்று போற்றப்பட்டவருமான பி.கே.மூக்கையாதேவருக்கு நாளை 103-வது பிறந்தநாள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1923-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அவருடைய பிறந்த நாள். இளம் வயதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நம்பிக்கையைப் பெற்று பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் 1952-ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு 1957, 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடியவர் மூக்கையா தேவர். 1971-ம் ஆண்டு ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றவர். ஒரே தொகுதியில் தொடர்ச்சியாக வென்று மக்கள் நாயகனாக வளர்ந்தவர் அவர்.
1967-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றபோது பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கு தோள் கொடுத்தவர் பி.கே.மூக்கையாத் தேவர். அப்போது இந்தப் பேரவையில் தற்காலி பேரவைத் தலைவராக இருந்த அவர்தான் அன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் முழங்கியவரும் அவர்தான். தேவர் சமுதாய மக்களுக்காக கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அண்ணாவிடம் கோரிக்கை வைத்தவரும் அவர். அதனால்தான் கமுதி, உசிலம்பட்டி, மேலநீலித நல்லூர் ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் கழக ஆட்சியில் அப்போது அமைக்கப்பட்டன.
'நியாயத்துக்கு ஒரு மூக்கையா' என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட பி.கே.மூக்கையா தேவரை சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரும் சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.
மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






