என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடியை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பார்- உதயநிதி
- தமிழகம் வரும் பிரதமர் மோடியை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டு இருந்தார்.
- மத்திய அரசு விடுவிக்காத நிதியை உடனடியாக விடுவிக்க நிதி அமைச்சர் வலியுறுத்துவார்.
சென்னை:
நம்ம ஊரு பள்ளி திட்டம் மூலம் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு தட்டச்சர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
மதுரை வரும் பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து வலியுறுத்துவார்.
வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக தொடர்ந்து எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்போம், சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். அதற்கு நியாயம் கேட்டு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






