என் மலர்
சென்னை
- மேயர் பிரியாவிடம் இருந்து தகவல் மட்டும் தான் வருது தீர்வு வரவில்லை.
- பணி நிரந்தரம் செய்வீர்கள் என்று நீங்க கொடுத்த வாக்குறுதியைதான் அவர்கள் கேட்கிறார்கள்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 11 -வது நாளை எட்டி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாநகராட்சிப் பணியாளர்களை நடிகை சனம் ஷெட்டி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:-
கொரோனா நாட்களில் நாம் உயிர் பயத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு நமக்காக வந்தவங்க. ஊர் ஊரா.. தெரு தெருவா.. சுத்தம் செய்தவங்க. என்னுடனைய நண்பர்கள்.
மேயர் பிரியா வாராங்க செய்தி சொல்லிவிட்டு போராங்க. அவரிடம் இருந்து தகவல் மட்டும்தான் வருது தீர்வு வரவில்லை. எத்தனை நாள் தான் இவர்கள் இப்படி இருக்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை பறித்து விட்டீர்கள்.
பணி நிரந்தரம் செய்வீர்கள் என்று நீங்க கொடுத்த வாக்குறுதியைதான் அவங்க கேட்கிறார்கள். உங்க வாக்குறுதியை நீங்க காப்பற்றவில்லை என்றால், இனிமேல் முதலமைச்சரிடம் எதை எதிர்பார்க்க முடியும்.
மக்களுக்காக தான் அரசாங்கம். மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால் அரசாங்கம் இருந்து என்ன இல்லாமல் இருந்தும் என்ன. உங்க வாக்குறுதியை தான் கேக்குறாங்க. இனிமேல் ஓட்டு கேட்டு எப்படி வருவீங்க.
என ஆவேசத்துடன் கூறினார்.
- தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது.
- தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.
தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.
தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நான் நேரில் சென்று சந்திக்கலாம் என்றிருந்த நேரத்தில் தான் அவர்களாகவே என்னைச் சந்திக்க விரும்புவதை அறிந்தேன். மேலும் நான் நேரில் சென்று அவர்களைச் சந்தித்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கருதிய தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்தனர்.
அப்போது தங்கள் நிலை குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற ஒரு அரசாக இந்த வெற்று விளம்பர மாடல் அரசு இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது. நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.
எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று விளம்பர மாடல் திமுக, தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பல்லாண்டுக் காலமாகச் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 19.01.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின்படியும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 153இன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும்.
- வழித்தடம் 4-ன் நீட்டிப்பு- கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை.
- தாம்பரம் முதல் வேளச்சேரி வரை.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1. வழித்தடம் 4-ன் நீட்டிப்பு- கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை.
இந்த நீட்டிப்பு, மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான மெட்ரோ இணைப்பை மேம்படுத்துவதற்கு தோராயமாக சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம், தினசரி பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளும் எளிதில் அணுகுவதற்கும், நகரப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.
2. தாம்பரம் முதல் வேளச்சேரி வரை
சுமார் 21 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம் தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புறநகர்ப் பகுதிகளை சென்னை மெட்ரோ ரெயில் வழித்தடம்-1-இல் உள்ள கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வழித்தடம் தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி மற்றும் கிண்டி பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வசதியுடன் உருவாக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை M/s Systra MVA Consulting India Pvt நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை வழித்தடம் 4-ன் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிபதற்கு ரூ. 38,20,000 மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரை ரூ.96,19,000/- மதிப்பாகும். இந்த விரிவான திட்ட அறிக்கைகள் சமர்பிப்பதற்கான காலம் 120 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் Systra MVA Consulting India Pvt நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் பர்வீன் குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த திட்ட அறிக்கைகள் வழித்தட பாதை அமையும் இடங்கள், பயணிகளின் எண்ணிக்கை, பல்வேறு போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்படும். இந்த அறிக்கை தகவலறிந்த முடிவெடுப்பதற்கு மற்றும் எதிர்கால திட்ட செயலாக்கத்திற்கும் அடித்தளமாக அமையும்.
சென்னையின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகள் மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு உகந்த, விரிவான மற்றும் எதிர்கால நோக்குடன் பொது போக்குவரத்து பயன்பாட்டை உருவாக்குவதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முனைப்புடன் செயல்படுகிறது.
- நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
- இந்த தேர்வு எழுத இன்று முதல் செப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த தேர்வு எழுத இன்று முதல் செப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
- பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது.
- 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் கொடுத்துள்ளார்.
யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.
இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவதெல்லாம் சமூக தீண்டாமையை காட்டுகிறது என்று சீமான் காட்டமாக தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவதெல்லாம் சமூக தீண்டாமையை காட்டுகிறது. சமூகத்தின் சாதிய கொடுமையை காட்டுகிறது. பெருமை எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாதி, மதத்தில் இருக்கக்கூடாது. தமிழர்களுக்கு மொழி, இனம், தன்னுடைய வரலாறு, பண்பாட்டில் தான் பெருமை இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 11-வது நாளை எட்டி உள்ளது.
- தூய்மைப் பணியாளர்களுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 11 -வது நாளை எட்டி உள்ளது.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் குழுவுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாநகராட்சிப் பணியாளர்கள் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜயை சந்தித்தனர்
- கடந்த 2021ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
- இந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் இந்த தீர்ப்பளித்துள்ளது.
பயிற்சி பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021ஆம் ஆண்டு மாணவி ஒருவர் பயிற்சியாளரான கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாளை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் 3ஆம் கட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
- சோழிங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைப்பு.
அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி
சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மூன்றாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், வருகிற 23ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சோழிங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பிப்ரவரி 4-ஆம் தேதி அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த ககன்தீப் சிங் பேடி குழு.
- வரும் 18-ஆம் தேதி முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி குழு வரும் 18-ஆம் தேதி முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பிப்ரவரி 4-ஆம் தேதி அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த குழு, இப்போதாவது விழித்துக் கொண்டு பணி செய்ய தொடங்கவிருப்பது மனநிறைவளிக்கிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ககன்தீப் சிங் பேடி குழு அமைக்கப்பட்டும் கூட, அக்குழு அதன் பணிகளை தொடங்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
மேலும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதனால் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாகத் தான் அரசு விழித்துக் கொண்டு ககன்தீப் சிங் பேடி குழு கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தும் என்று அறிவித்திருக்கிறது. அந்த வகையில் இது பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி ஆகும்.
கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அடுத்த மாதம் 9-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசுத் தரப்பில் நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வுப் பணிகளையும் முடித்து செப்டம்பர் மாத மத்திக்குள் ககன்தீப் சிங் பேடி குழு அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அதனடிப்படையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு கேப்டன்தான்.
- அவர்களுடைய இடத்தை இன்னொருவர் வந்து நிரப்ப முடியாது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் நிற்பது போன்ற படத்தை எல்.கே. சுதீஷ் (தே.மு.தி.க. பொருளாளர்) பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த படம் வைரலானது.
இது தெடார்பாக பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுச் செயலாளராக அம்மா ஜெயலலிதா இங்கே ஒரு சிங்கப் பெண்ணாக இருந்தார்கள். அதேபோல் என்னுடைய சகோதரியும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக கட்சியில் முழுயைாக ஈடுபட்டு சிங்க பெண்மணியாக இருக்கிறார் என சுதீஷ் பேசினார்.
சமூக வலைத்தள்தில் ஜெயலலிதா மற்றும் என்னுடைய போட்டோவை எடிட் செய்து யாரோ ஒருவர் வெளியிட்ருக்கிறார். அதை சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.
என்னைத் பொறுத்தவரை, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு சூரியன், ஒரு சந்திரன்தான். அதே மாதிரி ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு கேப்டன்தான். அவர்களுடைய இடத்தை இன்னொருவர் வந்து நிரப்ப முடியாது.
அதேபோல் ஒரே பிரேமலதா விஜயகாந்துதான். என்னுடைய இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. கேப்டன் இல்லாத போதிலும், அவர் கொடுத்த பயிற்சி, நம்பிக்கை, தைரியம், அந்த உறுதியின் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இங்கே ஒருவருக்குப் பதில் இன்னொருத்தர் வர முடியாது.
ஜெயலலிதா இரும்பு பெண்மணி. முதல்வராக இருந்தவர். சாதனை செய்தவர். எத்தனையோ சவால்களை சந்தித்தவர்கள்.
என்னிடம் ஒருமுறை அரசியல் ரோல் மாடல் யார் எனக் கேள்வி கேட்டனர். அதற்கு ஜெயலலிதா எனப் பதில் கூறியிருக்கிறேன். சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருப்பதை தவிர வேறு ஒன்றுமே கிடையாது.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
- 1.1 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரு கட்சி 8.22 சதவீதம் வாக்குகள் பெற்ற அரசியல் கட்சியாக மாறியது தமிழக வரலாற்றில் உண்டா?.
- த.வெ.க. வருவதால் நா.த.க. கட்சிக்கு வாக்குகள் குறைந்து விடும் என்கிறார்கள்.
2026 தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைவதும் உறுதியாகியுள்ளது. சீமான், விஜயும் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் நான்கு முனை போட்டி ஏற்படலாம் என்ற சூழ்நிலைதான் தற்போது உள்ளது. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க விஜய் மற்றும் சீமான் ஆகியோரின் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் அங்கம் வகித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செத்து சாம்பலானாலும் 2026 தேர்தலில் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
1.1 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரு கட்சி 8.22 சதவீதம் வாக்குகள் பெற்ற அரசியல் கட்சியாக மாறியது தமிழக வரலாற்றில் உண்டா?. எல்லா கட்சியும் செத்து போய் விடும். கலைந்து ஓடி விடுவார்கள். த.வெ.க. வருவதால் நா.த.க. கட்சிக்கு வாக்குகள் குறைந்து விடும் என்கிறார்கள்.
இப்படி ஏன் பயம் காட்டுகிறார்கள் தெரியுமா?, அப்போதாவது கட்சி கலைந்துவிடும், ஏதாவது ஒரு கூட்டணிக்கு போய் விடுவார் என்பதற்குதான். செத்து சாம்பலானாலும் ஆகுவோமே தவிர, கூட்டணி சேராமல் தனியாகத்தான் போட்டியிடுவோம். அது ஒன்னுமில்லாமல் போய்டும் என்கிறார்கள்.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 13ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-ந்தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36# செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






