என் மலர்
செங்கல்பட்டு
- விஷ சாராய வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.
- விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலையிடம் இன்று காலை ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி விசாரித்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ சாராயம் குடித்ததில் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மாமியார் வசந்தா உள்பட 8 பேர் பலியானார்கள். மேலும் சின்னதம்பியின் மனைவி அஞ்சலை உள்ளிட்ட பலர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இந்த விஷ சாராய வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. நேற்று இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த நிலையில விஷ சாராயம் தொடர்பாக விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலையிடம் இன்று காலை ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி விசாரித்தார். இதைத்தொடர்ந்து பெருங்கரணை கிராமத்தில் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- குடிநீர் வழங்ககோரி கிராமமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
- ஆண்கள் சிலர் சாலையில் படுத்து நூதன போராட்டம் நடத்தினர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரையப்பாக்கம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில்கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குறைந்த நேரத்தில் தண்ணீர் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதன் காரணமாக கூடுதல் பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குடிநீர் வழங்ககோரி கிராமமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தொடர்ந்து குடிநீருக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்குதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மேலவளம்- திருக்கழுக்குன்றம் பிரதான நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள் சிலர் சாலையில் படுத்து நூதன போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, எங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வினியோகிக்கப்படாததால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் ஆதாரங்களை உருவாக்காதது தான் குடிநீர் தட்டுப்பாடுக்கு காரணம் என்றனர்.
- புதிய கடை வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
- அப்பகுதியில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கு புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சியின் ஓ.எம்.ஆர் எல்கையான 12வது வார்டு, பவளக்கா சத்திரம் பகுதியில் ரேஷன் கடை இல்லாததால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து 3கி.மீ தூரத்தில் உள்ள பூஞ்சேரிக்கு வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. புதிய கடை வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கு புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கவுன்சிலர்கள் மோகன்குமார், சரிதா கோவிந்தராஜ், சீனிவாசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
- ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நடைபெற்றது.
- அனைவரும் சி.பா.ஆதித்தனார் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.
மாமல்லபுரம்:
சி.பா.ஆதித்தனார் அவர்களின் 43வது நினைவேந்தல் நிகழ்ச்சி மாமல்லபுரம் கோவளம் சாலையில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் ம.தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள், மீனவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர். அனைவரும் சி.பா.ஆதித்தனார் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.
- குழந்தையை கண்ட தூய்மை பணியாளர்கள் உடனடியாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- மீட்கப்பட்ட குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட அதியமான் தெருவில் நேற்று முன்தினம் மறைமலைநகர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தெருவில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனையடுத்து அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பணியாளர்கள் சென்று பார்த்த போது அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக தூய்மை பணியாளர்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை மீட்டு மறைமலைநகரில் உள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். மீட்கப்பட்ட குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மறைமலைநகர் அதியமான் தெருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தாம்பரம் அடுத்த சேலையூர் கர்ணன் தெருவில் லஷ்மி என்பருக்கு சொந்தமான 2 மாடி வீடு உள்ளது.
- வீட்டை இடிக்காமல் அதனை ஜாக்கி மூலம் உயர்த்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சேலையூர் கர்ணன் தெருவில் லஷ்மி என்பருக்கு சொந்தமான 2 மாடி வீடு உள்ளது. பழமையான இந்த வீடு சாலையின் அளவுக்கு தாழ்வாக இருப்பதால் மழை நீர் அடிக்கடி வீட்டுக்குள் புகுந்தது.
இதனால் வீட்டை இடிக்காமல் அதனை ஜாக்கி மூலம் உயர்த்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார். இதற்கான பணியை உத்தர பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற் கொண்டது. கடந்த சில நாட்களாக ஜாக்கியின் மூலம் வீட்டை உயர்த்தும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வடமாநில தொழிலாளி பேஸ்கார்(28) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஜாக்கிமூலம் கட்டிடத்தை மேலும் உயர்த்தினர். அப்போது திடீரென கட்டிடத்தின் ஒருபக்க சுவர் இடிந்து சரிந்து விழுந்தது,
இந்த இடிபாடுகளில் பேஸ்கார் உள்பட 3 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதனை கண்டு மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தாம்பரம், மேடவாக்கம் தீயணைப்பு நிலையங்களுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளி பேஸ்கார் இடிபாடுகளில் சிக்கி பலியாகி கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் கட்டிட இடிபாடில் சிக்கிய தொழிலாளி ஓம்கார் என்பவருக்கு கால் எலும்பு முறிந்தது. மேலும் மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கட்டிடத்தை உயர்த்தியபோது அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட தொழிலாள்கள் வேலைபார்த்து உள்ளனர். அதிர்ஷ்டவசமாக கட்டிடம் முழுவதும் இடியாமல் ஒரு பகுதி மட்டும் இடிந்ததால் மற்ற தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.
இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
- திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
- பொன்னேரி சிவா கலந்து கொண்டு 2 ஆண்டுகளில் அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார்.
மாமல்லபுரம்:
வடக்கு மாமல்லபுரத்தில் நகர தி.மு.க இளைஞர் அணி சார்பில், திராவிட மாடல் அரசின் 2ஆண்டு சாதனைகள் விளக்க, தெருமுனை பொதுக்கூட்டம் நகர அமைப்பாளரும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான எம்.வி மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் பொன்னேரி சிவா கலந்து கொண்டு 2 ஆண்டுகளில் அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளரும் மாமல்லபுரம் நகர கழக செயலாளருமான வெ.விசுவநாதன் முன்னிலை வகித்தார். உள்ளூர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
- குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33-வார்டுகள் உள்ளன. முக்கிய ரெயில்வே சந்திப்பு, மாவட்ட அரசு தலைைம ஆஸ்பத்திரி, ஏராளமான பள்ளி-கல்லூரிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் சீராக வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் கூடுதல் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், பழவேலி நீர் ஏற்றும் தொட்டியை முறையாக பராமரிப்பு செய்யாததை கண்டித்தும் செங்கல்பட்டு விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளரும் 9-வார்டு கவுன்சிலருமான தமிழரசன் திடீரென நகராட்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகையுடன் அமர்ந்து இருந்தார். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து கவுன்சிலர் தமிழரசன் அங்கிருந்து சென்றார். இச்சம்பவத்தால் செங்கல்பட்டு நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்பிரனீத் பொறுப்பேற்று உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாமல்லபுரத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆன்லைன் விபச்சாரம், உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஓ.எம்.ஆர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளை தனிப்படை மூலம் ரகசியமாக கண்காணித்து அவர்களை ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து, பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கும், வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர்கள் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க.பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மறைமலை நகர் பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
வண்டலூர்:
மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மகன் மனோகரன்(வயது32). பா.ம.க. பிரமுகர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது சகோதரர்களோடு சேர்ந்து சொந்தமாக ஜே.சி.பி. எந்திரங்களை வைத்து தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு, மனோகரன் மறைமலைநகர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். கொண்டமங்களம் ஊராட்சி அலுவலகத்தை கடந்தபோது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மனோகரனை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் அவர்களிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளைபோட்டு விட்டு தப்பி ஓடி அருகில் உள்ள ஒரு மாட்டு கொட்டகைக்குள் பதுங்கினார்.
ஆனாலும் மர்ம கும்பல் அவரை தப்ப விடாமல் விரட்டி சென்றனர். பின்னர் மனோகரனை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிசென்று விட்டனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட மனோகரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அவருக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
பா.ம.க.பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மறைமலை நகர் பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைத்து தரப்படும்.
- மக்களுடைய அடிப்படை தேவைகள் எதையும் கணக்கிடாமல் இந்த பஸ் முனையம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
தாம்பரம் :
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) 2023-24-ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சி.எம்.டி.ஏ.வின் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் உள்ள சென்னை வெளிவட்டச் சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் தனியார் ஆம்னி பஸ்கள் நிறுத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும் முடிச்சூரில் உள்ள சீக்கனான் ஏரியை ரூ.2 கோடியிலும், ரங்கா நகர் குளத்தை ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் மேம்பாட்டு பணி தொடர்பாகவும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் ஈஸ்வரி நகரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைப்பது தொடர்பாகவும், ஆலந்தூர் புது தெருவில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் அமைப்பது தொடர்பாகவும் நேரடியாக சென்று அமைச்சர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை பொறுத்தவரையில் முன்னதாக இந்த நிலையத்துக்கு வரும் பஸ்களின் போக்குவரத்தை கருத்தில் கொள்ளாமல் வடிவமைத்திருக்கிறார்கள்.
இந்த பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது என்னென்ன அடிப்படை தேவைகள் என்று ஒவ்வொன்றையும் ஆய்வு செய்கின்ற போது அந்த மக்களுடைய அடிப்படை தேவைகள் எதையும் கணக்கிடாமல் இந்த பஸ் முனையம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே, இந்த பஸ் நிலையத்திற்கு உண்டான அணுகு சாலைகள், அதேபோல் இந்த பஸ் நிலையத்திற்கு வருகின்ற போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு உண்டான திட்டமிடல் போன்றவற்றை கணக்கிட்டு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றோம்.
ஜூன் மாத இறுதிக்குள் இதை தொடங்க வேண்டுமென்ற நிலைபாடு இருந்தாலும், பஸ் நிலையம் தொடங்கப்பட்ட பிறகு மக்களுடைய தேவைகள் எவையும் விட்டுவிடாமல் மக்களுடைய பயன்பாட்டிற்கு வருகின்ற போது மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்குண்டான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்பாடு செய்வதற்கு ஜூன் மாதத்திற்குள் முடிந்த அளவிற்கு ஏற்பாடுகளை முடித்து, பஸ் நிலையங்களை திறப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
பணிகள் முடிந்து ஓரிரு வாரங்கள் தள்ளிப்போனாலும் ஜூலை மாத இறுதிக்குள்ளாக நிச்சயமாக இந்த பஸ் நிலையத்தை திறப்பதற்குண்டான அனைத்து பணிகளையும் நிறைவு செய்வோம்.
ஆகவே, குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைத்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
- பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூடுவாஞ்சேரி:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்க்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் மறைமலைநகர் பேரமனூர் பகுதியில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர் காளிமுத்து ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் காஞ்சிபுரம் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம், எம். எல். ஏ.க்கள் சுந்தர், இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி,
பாபு மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி, மறைமலைநகர் நகர் மன்ற தலைவர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிகள் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






