என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 300 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1500 கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., பா.ஜ.க உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    • ஆயிரம் கோடி ஊழல் செய்த தி.மு.க அரசுக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய தகுதி இல்லை.

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    அப்போது, மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., பா.ஜ.க உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது :-

    டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    ஆயிரம் கோடி ஊழல் செய்த தி.மு.க அரசுக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய தகுதி இல்லை.

    தி.மு.க அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர் ஸ்டாலின், ரூபாய் இலட்சினை மாற்றி இருப்பதன் மூலம் அவர் பதவியேற்கும் போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.
    • லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட்டும் அமைந்துள்ளது. அதாவது உயர்கல்வித்துறைக்கு 8,494 கோடியும், கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு 2,020 கோடியும், 6,100 கி.மீ நீள சாலைக்கு 2,200 கோடியும், 1 லட்சம் வீடுகள் கட்ட 3,500 கோடியும், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 6,668 கோடியும் என பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கிய நிதியானது கடந்த ஆண்டுகளில் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது போல அமைந்து நிறைவேற்ற முடியாத திட்டங்களாக, அறிவிப்புகளாக மட்டுமே அமையும். ஏழை, எளிய மக்களின் நிலம், மனை, பத்திரம், பட்டா சம்பந்தமாக அவர்களுக்கு உரியதை உறுதி செய்வதற்கான அறிவிப்புகள் இல்லை.

    குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க அளித்த பழைய ஒய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்றைய பட்ஜெட்டில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் அம்சங்கள் இடம் பெறவில்லை. மிக முக்கியமாக போதைப்பொருட்களை ஒழிக்க, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒடுக்க, சட்டம் ஒழுங்கை கடுமையாக்க முக்கிய அம்சங்கள் இடம் பெறாத பட்ஜெட் இந்த பட்ஜெட்.

    குறிப்பாக நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான, கடன் சுமையை குறைப்பதற்கான அழுத்தமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. மக்களை திசை திருப்புவதற்காக, பல்வேறு துறைகளின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்காத, லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.

    எனவே நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக மக்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்யாத, எதிர்பார்ப்பை நிறைவேற்றாத ஏமாற்றும் பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    • வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

    விசாரணையின்போது சி.வி. சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும் அதனடிப்படையிலேயே பேசியதாகவும் அரசியல் பழிவாங்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், விமர்சனம் என்ற பெயரில் மோசமான வார்த்தைகளை சி.வி.சண்முகம் பயன்படுத்துவதாகவும் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அதுபோன்ற கருத்துகளை பேசுவதாகவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து, சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டுமென நீதிபதி கூறினார்.

    எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என்றாலும் உருவக்கேலி உள்ளிட்டவை கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார்.

    • ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
    • திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,

    தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.

    தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.

    ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.

    திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக என்று கூறியுள்ளார். 



    • சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகராட்சிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.
    • வெப்ப அலை செயல் திட்டம் 11 மாநகராட்சிகளுக்கு தனி தலைமையிடமாக உருவாக்கப்படும்.

    சென்னை:

    தமிழக பட்ஜெட்டில் உரையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சைதாப்பேட்டை தாண்டர் நகரில் ரூ.110 கோடியில் புதிதாக 190 குடியிருப்புகள் கட்டப்படும். மக்களின் முதல்வர் திட்டத்தில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

    சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகராட்சிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.

    வரும் ஆண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும். 4 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் ரூ.75 கோடியில் செயல்படுத்தப்படும்.

    வெப்ப அலை செயல் திட்டம் 11 மாநகராட்சிகளுக்கு தனி தலைமையிடமாக உருவாக்கப்படும்.

    • தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    20-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

    இதனிடையே இன்று முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும்.

    18-ந்தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.

    நாளை முதல் 18-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, வடதமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    16-ந்தேதி மற்றும் 17-ந்தேதி அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும்,

    குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என தெரிவித்தார்.
    • வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய சென்னை தொகுதி கூட்டணி கட்சி தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என தெரிவித்தார்.

    இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    உண்மைக்கு மாறாகவும் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    எடப்பாடி பழனிசாமி மனு குறித்து தயாநிதி மாறன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    • ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது.
    • தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜவாஹிருல்லாவின் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.

    இதனிடையே, தற்போது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
    • நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் ஏப்.30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

    மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ளது. மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.

    நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    • டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது.
    • மதுபான கொள்முதலில் எந்தவிதமான சலுகைகளும் காட்டப்படவில்லை.

    சென்னை:

    மதுபான முறைகேடு புகார் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாமல் அமலாக்கத்துறையை ஏவி டாஸ்மாக்கில் சோதனை நடைபெற்றது.

    * எந்த ஆண்டு போடப்பட்ட FIR என்பது பற்றி அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

    * மதுபான டெண்டர்களில் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கவில்லை.

    * டாஸ்மாக் நிறுவனத்தை பொறுத்தவரை அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் டெண்டர்களாக மாற்றப்பட்டுள்ளது.

    * பணியிடமாற்றம் பொறுத்தவரையில் எந்த தவறும் இல்லை. பணியிடமாற்றம் அவர்களது குடும்ப சூழலை பொறுத்தது.

    * ரூ.1,000 கோடி முறைகேடு என பொத்தம்பொதுவாக குறைகூறுவதை ஏற்க முடியாது.

    * ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக முன்னதாக ஒருவர் கூறுகிறார், பின்னர் அமலாக்கத்துறை சோதனை செய்துவிட்டு அதையே கூறுகிறது.

    * டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது.

    * மதுபான கொள்முதலில் எந்தவிதமான சலுகைகளும் காட்டப்படவில்லை.

    * அமலாக்கத்துறையின் வழக்குகள் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படும்.

    * பட்ஜெட் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தடுக்க நேற்று அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    * ஏற்கனவே இருந்த கடைகளில் 500 கடைகளை நாம் மூடியுள்ளோம்.

    * அரசின் மீது அவதூறை பரப்ப வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிடுகிறது.

    * ஊழியர் தவறு செய்தால் அவர்மீது நடவடிக்கை எடுத்தால் அது தவறா?

    * தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற கோஷம் மக்களின் கோஷமாக மாறியுள்ளது என்றார். 

    • நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இப்போது வரை தெரிவிக்கவில்லை.
    • காலை உணவுத்திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது நான் தான்.

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் 25 லட்சம் பட்டாக்களை வழங்கி உள்ளேன்.

    * மக்கள் பிரச்சனைகளை கவனிக்காமல் விளம்பரம் செய்வதிலே தி.மு.க. அரசு கவனமாக உள்ளது.

    * முதல்வரும், துணை முதல்வரும் தங்களை விளம்பரப்படுத்துவதிலேயே முனைப்பு காட்டுகின்றனர்.

    * புதிய பேருந்துகள் வாங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு என்பது வெற்று அறிவிப்பு.

    * கடந்த 4 ஆண்டுகளில் 95 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றம் என பொய்யாக கூறி உள்ளனர்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்கள் விடுதி திட்டத்தை தான் தி.மு.க. அரசும் செய்கிறது.

    * நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இப்போது வரை தெரிவிக்கவில்லை.

    * நிதி மேலாண்மை குழு அளித்த அறிக்கை என்ன? அதை அரசு செயல்படுத்தியதா? என்ற வெள்ளை அறிக்கை இல்லை.

    * காலை உணவுத்திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது நான் தான்.

    * காலை உணவுத் திட்டம் ஒன்றும் புதிய திட்டம் கிடையாது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய திட்டங்கள் என சட்டசபையில் அறிவித்துள்ளனர்.

    * திடக்கழிவில் இருந்து மின்சாரம், சென்னை அருகில் புதிய நகரம் போன்ற அறிவிப்புகள் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை.

    * வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடுதிகள், காலை உணவுத்திட்டம் போன்றவை புதிய திட்டங்கள் அல்ல.

    * 3.5 லட்சம் காலிபணியிடம் நிரப்பப்படும் என்றார்கள், ஆனால் 57000 பணியிடங்களுக்கு தான் நியமனம்.

    * 4 ஆண்டுகளில் 57,000 காலிப் பணியிடங்களை தான் தி.மு.க. அரசு நிரப்பி உள்ளது.

    * ஓராண்டில் மட்டும் எப்படி 40,000 காலி பணியிடங்களை நிரப்ப முடியும்.

    * ஓராண்டு காலத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் நிறைவேற்ற முடியாது.

    * டிஎன்பிஎஸ்சி-யில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 பணியிடங்களை நிரப்ப முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×