என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் இன்றைய நிலவரப்படி 1500 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது.

    ஈரோடு:

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவரது மனைவி ஆதிரா திருப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.

    ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில் இன்று மதியம் 12.15 மணிக்கு அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஜான் சென்ற காரை வழிமறித்து நிறுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க சென்ற அவரது மனைவி ஆதிராவுக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த மர்ம கும்பல் மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிராவை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரில் சென்று பார்வையிட்டார். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது. ஈரோட்டில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த ஆண்டு என்ஜினீயரிங் வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது.
    • இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார் 1.70 லட்சம் இடங்கள் வரை உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு மொத்தம் 1.70 லட்சம் என்ஜினீயரிங் இடங்கள் இருக்கும் நிலையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

    இந்த ஆண்டு என்ஜினீயரிங் வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது. இதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தரவரிசை பட்டியலும் முன்னதாகவே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 22-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடந்தது.

    இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையின் ஒவ்வொரு செயல்முறையும் ஆன்லைனில் நடைபெற இருப்பதால் நேரத்தை மிச்சப்படுத்த கலந்தாய்வு கால அளவு குறைக்கப்படலாம். இருந்தாலும் இந்த யோசனை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது
    • அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-

    விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. இவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில், பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர்.

    அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்சுக்கும், அவரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூடல்புதூர் போலீசார், காரின் கண்ணாடிகளை உடைத்து கதவை திறந்து பார்த்தபோது, காருக்குள் படுத்த நிலையில் கருப்பசாமி பிணமாக கிடந்தார்.
    • பிணமாக கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரையை அடுத்த எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). இவர் செல்லூர் மண்டல பா.ஜ.க. ஓ.பி.சி. அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கட்சி பணியில் சமீப காலமாக தீவிரம் காட்டி வந்த அவர் தனி அணி சார்பில் பல்வேறு கூட்டங்களையும் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வந்தார்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு தனக்கு சொந்தமான காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் கருப்பசாமியை உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடினர். அத்துடன் பா.ஜ.க. நிர்வாகளிடமும் விசாரித்தனர்.

    ஆனாலும் கருப்பசாமி குறித்த எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கருப்பசாமி மாயமான குறித்து அவரது குடும்பத்தினர், கூடல்புதூர் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கருப்பசாமியை தேடினர். மேலும் அவரது கார் சென்றுவந்த பாதைகள் குறித்து டோல்கேட் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் இன்று காலை கூடல்புதூர் பகுதியில் தனியாக கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது உள்ளே ஒருவர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த கூடல்புதூர் போலீசார், காரின் கண்ணாடிகளை உடைத்து கதவை திறந்து பார்த்தபோது, காருக்குள் படுத்த நிலையில் கருப்பசாமி பிணமாக கிடந்தார். அவரது உடல் பாகங்கள் லேசாக அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    பிணமாக கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது காரில் அமர்ந்திருந்தபோது மாரடைப்பு வந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.50 மணிக்கு டெல்லி சென்றார். டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இன்று டெல்லியில் தங்கி இருக்கும் அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந்தேதி தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த இருக்கிறார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இன்று முழுவதும் டெல்லியில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மாலை சென்னை திரும்புகிறார்.

    • லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
    • பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து விவாதிக்க விஜய் வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    வேலையின்மை காரணமாக லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என, இதன் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் மக்கள் ஏராளம்.

    குறிப்பாக கிராமப்புறங்களில் வேலையின்மை மிக அதிகமாக ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஏற்ற தாழ்வை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.

    மேலும் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர். மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன்வரவில்லை.

    இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி அலைவது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாதது பல சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

    இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வண்ணம் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க வேண்டியது அரசின் கடமை.

    மேலும் தொழில் முனைவோர்களையும் ஊக்கபடுத்தி அவர்கள் தொழில்கள் தொடங்கவும் அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டியது கட்டாயம்.

    நாட்டில் இன்று நிலவி வரும் இந்த மிக முக்கியமான மக்கள் பிரச்சனையை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.
    • அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை :

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.

    எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்கனை மதுரை உயர்நீதிமன்ற கினை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    • ஜாகிர் உசேன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கொலை வழக்கு மட்டுமல்ல எந்த குற்றத்தில் ஈடுபட்டாலும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த கொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் சட்டசபையிலும் இன்று எதிரொலித்தது.

    சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது ஜாகீர் உசேன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

    * ஜாகீர் உசேன் பிஜிலி வழிமறித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    * 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.

    * ஜாகிர் உசேன் புகார் அளித்த போதே விசாரணை செய்திருந்தால் கொலை நடந்திருக்காது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * ஜாகிர் உசேன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் ஏற்கனவே 2 பேர் சரண் அடைந்துள்ளனர்.

    * ஜாகீர் உசேன் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருகிறோம்.

    * கொலைக் குற்றவாளிகள், பின்னணியில் உள்ளோர் என அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்படுவர்.

    * கொலை வழக்கு மட்டுமல்ல எந்த குற்றத்தில் ஈடுபட்டாலும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது.

    * சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை தி.மு.க. அரசு அனுமதிக்காது என்றார். 

    • பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன.
    • சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.

    நாகர்கோவில்:

    கருங்கல் அருகே உள்ள மாங்கரை தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 16-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள காட்டாற்று குளத்தில் சஜின் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.

    இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் சஜினின் உறவினர்கள் இன்று காலை கருங்கல்-தொலையா வட்டம் சாலையில் மாங்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அனுமதிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
    • சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆண்டுக்கு 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும் போது 'அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள்' என்று ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.

    இதனால் ஒரு ஆண்டுக்கு 15 கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஒருவருக்கு ஆண்டுக்கு 15 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வரை வழங்கப்படும். அதில் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். எனவே அனுமதிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏனென்றால் அந்த சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே 15 கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் வாங்க வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை விளக்கி கியாஸ் வினியோகம் செய்யும் நிறுவனத்திடம் கடிதம் கொடுத்தால் கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டாம். ஆனால் 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று கூறுவதால் பலர் பாதிக்கப்படலாம்.

    எனவே ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும் போதும் அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
    • 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.

    இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதில் எந்தவித தீர்வும் எட்டப்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதனையொட்டி கோவை சோமனூரில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியே வெறிச்சோடி கிடக்கிறது.

    கோவை, திருப்பூ மாவட்டங்களில் உள்ள 1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி கூடங்களின் முன்பு இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் ஜவுளி உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு மேலாக வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.

    அத்துடன் இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் அடைந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்தின் தலைவர் பூபதி கூறியதாவது:-

    விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் முதல்கட்டமாக இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.

    எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினைகளில் தலையிட்டு விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×