என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தகுதியுடைய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பா.ம.க. நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பொதுமக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்கள் தகுதியுடைய வாக்காளர்களாகவே இருக்கக்கூடும். இட மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடியாததால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கக் கூடும். அத்தகைய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களையும், இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாதவர்களையும் படிவம் எண் 6-ஐ நிரப்பிக் கொடுத்து சேர்க்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திருத்துவதற்கு படிவம் 8-ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்து கொள்வதற்காக படிவம் 8ஏ-வையும் நிரப்பிக் கொடுக்க வேண்டும். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடங்கிய புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணிகள் அடுத்த மாதம் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இன்றும், நாளையும் உள்பட பல சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த காலக்கட்டத்தில் தகுதியுடைய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பா.ம.க. நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமே வாக்குரிமை தான். அதை எவரும், எந்த காரணத்திற்காகவும் இழந்து விடக்கூடாது. எனவே, இன்று தொடங்கி ஜனவரி மாதம் 18-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதியவர்களைச் சேர்க்கும் தேனீக்களாக உழைக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
    • மிக குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அவர் கூறியதாவது:-

    * வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளது.

    * உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

    * மிக குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர்.

    * களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.

    * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்றவர் யார்? என்று கேள்வி எழுப்பினார். 

    • கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் சரிபாதி நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கியது. அதன்படி கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை கோவை மாவட்டத்திலும் வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்று முடிந்தது.

    பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று மாலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பவன்குமார் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு, இறந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 489 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 360 பேர், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் 3 லட்சத்து 99 ஆயிரத்து 159 பேர், இரட்டைப்பதிவுகள் 23 ஆயிரத்து 202 பேர், இதர காரணங்கள் 380 பேர் என கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சேர்த்து 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.

    அதாவது 20.17 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் குடிபெயர்ந்தவர்கள் தான் அதிகளவில் உள்ளனர். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாக வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இப்படி மாறியவர்கள் மட்டுமே 20 சதவீத வாக்காளர்கள் இருப்பர். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் போது பலரும் இறந்து விட்டனர். இவையே வாக்காளர் பட்டியலில் அதிகம் பேர் நீக்கப்பட்டதற்கான காரணம் ஆகும்.

    கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் சரிபாதி நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் நீக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்களில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 159 வாக்காளர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் தான்.

    இதற்கிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விவரங்கள், நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களுடன் அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

    நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் படிவம் 7, திருத்தம், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8, ஆதார் எண் இணைக்க படிவம் 6 பியை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவரிடம் ஜனவரி 18-ந் தேதி வரை அளிக்கலாம். ஆன்லைன் வாயிலாக www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் Voter Helpliner என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் 2 முதல் 4-ம் தளம் வரை தீ பரவிய நிலையில் தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பணி வழங்கப்படாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வறுமையையும், மன உளைச்சலையும் அனுபவித்து வருகின்றனர்.
    • தூய்மைப் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 150-ஆம் நாளை நெருங்கி உள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மாநகராட்சியின் இராயபுரம் மண்டலத்தில் உள்ள 50-ஆம் வட்டத்தில் தூய்மைப் பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், கடந்த 5 மாதங்களாக பணியும், ஊதியமும் வழங்கப்படாமல் வறுமையிலும், மன உளைச்சலிலும் வாடி வந்த தூய்மைப் பணியாளர் டி. இரவிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால் பணி வழங்கப்படாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் எத்தகைய வறுமையையும், மன உளைச்சலையும் அனுபவித்து வருகின்றனர் என்பதற்கு டி.இரவிக்குமார் தற்கொலை சிறிய எடுத்துக்காட்டு தான்.

    தூய்மைப் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 150-ஆம் நாளை நெருங்கும் போதிலும், அவர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்க மறுப்பதற்கு காரணம் ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வெகுமதிகள் தான். அந்த நிறுவனங்களிடமிருந்து ஆட்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    தங்களின் லாபத்திற்காகவும், பேராசைக்காகவும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பதை மன்னிக்க முடியாது. இரவிக்குமாரின் தற்கொலைக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கோவை:

    தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் சங்க நிர்வாகிகள் உரையாற்றினர்.

    இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் எனும் உயிர் நீதிமன்ற தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் ஒப்பந்த முறை அத்துக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • ஈரோடு மக்கள் சந்திப்பு பயணத்திற்கு பிறகு புத்துணர்ச்சியாக காணப்படும் விஜய், தொடர்ந்து சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள இருக்கிறார்.
    • ஜனவரிக்குள் கூட்டணி தொடர்பான நல்ல முடிவு எட்ட த.வெ.க. தலைமை வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    சட்டசபை தேர்தலை சந்திக்க முழு வீச்சில் த.வெ.க. தயாராகி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் 234 தொகுதிக்கும் தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். இதில், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், பெண்கள், பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். ஈரோடு மக்கள் சந்திப்பு பயணத்திற்கு பிறகு புத்துணர்ச்சியாக காணப்படும் விஜய், தொடர்ந்து சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள இருக்கிறார்.

    இதற்கான பணிகளை த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதா பாணியில் விஜய்க்கும் அவர் பயண திட்டத்தை வகுத்து வருகிறார். இதற்கிடையே, த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்கவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை கட்சியின் தலைவர் விஜய் முடுக்கி விட்டுள்ளார்.

    த.வெ.க. கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இடம் பெற உள்ளனர். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனை கூட்டணி அமைப்பதற்கான குழு தலைவராக அமர்த்துவதன் மூலம் மற்ற கட்சி தலைவர்களை எளிதாக அணுக முடியும் என்று த.வெ.க. நம்புகிறது. எனவே விரைவில் இதற்கான அறிவிப்பை த.வெ.க. வெளியிட இருக்கிறது.

    தற்போதைய சூழ்நிலையில் எந்த அணியிலும் இல்லாத தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடம் செங்கோட்டையன் தலைமையிலான குழு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஜனவரிக்குள் கூட்டணி தொடர்பான நல்ல முடிவு எட்ட த.வெ.க. தலைமை வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

    கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்களை உடனடியாக அறிவிக்கவும் த.வெ.க. திட்டமிட்டுள்ளது. வரும் 24-ந் தேதி கட்சிக்கு புதிய சின்னம் (விசில் அல்லது மோதிரம்) கிடைத்து விடும் என்பதால் த.வெ.க. தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    • தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
    • அரசு விழாவுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.

    அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் தலைமையில் சாரதா கல்லூரி அருகிலும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பாலம் அருகே மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார். அங்கு மதிய உணவுக்கு பின்னர் நிர்வாகிகளை சந்திக்கிறார்.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள, அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் மின்னொளியில் ஜொலிக்கும் அருங்காட்சியகத்தை ஒவ்வொரு கட்டிடமாக சென்று பார்வையிடுகிறார். இதற்காக பிரத்யேக மின்சார வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மீண்டும் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு செல்கிறார். அங்கு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.

    விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். 50 புதிய பஸ் போக்குவரத்து சேவையையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்று, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    அரசு விழாவுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது. வண்ணார்பேட்டை முதல் டக்கரம்மாள்புரம் வரையிலும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. கட்சிக்கொடிகள் பறக்கின்றன. வழிநெடுகிலும் நிர்வாகிகள் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். பாளையங்கோட்டை அரியகுளம், கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை, ரெட்டியார்பட்டி மலைச்சாலை பகுதிகளில் தி.மு.க. கொடிகள், வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர முதலமைச்சர் வந்து செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு பளிச்சென்று காட்சி அளிக்கின்றன.

    • தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
    • தற்போதை டாலர் மதிப்பின்படி, ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) தங்கம் சுமார் ரூ.5.40 லட்சத்துக்கும் மேல் உயரக்கூடும் என சொல்லப்படுகிறது.

    சென்னை:

    தங்க சந்தைக்கான ஒரு சர்வதேச அமைப்பாக இருக்கக்கூடியது ''உலக தங்க கவுன்சில்'' (டபுள்யூ.ஜி.சி.). உலகெங்கிலும் இருக்கும் முன்னணி தங்க சுரங்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட லாப நோக்கமற்ற அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பு உலக நாடுகளின் தங்கத்தின் தேவை, இருப்பு மற்றும் விலை நிலவரம் குறித்த விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த உலக தங்க கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) டேவிட் டெயிட், சமீபத்தில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அதிரடி குண்டு ஒன்றை போட்டுள்ளார். அதில் தங்கம் விலை அடுத்த ஆண்டிலும் மேலும் உயரக்கூடும் என்று கூறியுள்ளார்.

    ஏற்கனவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து நடுத்தர வர்க்கத்தினரை நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், உலக தங்க கவுன்சில் தலைமை செயல் அதிகாரியின் இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்த விலை உயர்வுக்கு டேவிட் டெயிட் பல்வேறு காரணங்களை முன்வைத்தாலும், 'உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய பண இருப்புக்கு மாற்றாக தங்கத்தை அதிகளவில் வாங்கி சேமிப்பது, சீனாவில் தங்கத்துக்கான விதிமுறைகள் தளர்த்தப்படுவது, ஜப்பானில் நிலவும் பணவீக்கத்தால் மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது, நிதிநிலையற்ற தன்மை நிலவுவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவது போன்றவை முக்கிய காரணமாக கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அப்படி விலை உயர்ந்தால், எவ்வளவு உயரும்? என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, தற்போதை டாலர் மதிப்பின்படி, ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) தங்கம் சுமார் ரூ.5.40 லட்சத்துக்கும் மேல் உயரக்கூடும் என சொல்லப்படுகிறது.

    அதாவது இந்தியாவில் 10 கிராம் கொண்ட 24 காரட் தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    அமெரிக்க பொருளாதாரம் எதிர்பாராதவிதமாக மிக வேகமாக முன்னேறினாலோ அல்லது தற்போது உலக நாடுகள் மத்தியில் நிலவி வரும் போர் பதற்றங்கள் முற்றிலுமாக தணிந்தாலோ தற்போதைய கணிப்பில் மாற்றங்கள் வரக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

    2024-ம் ஆண்டில் இதேபோல் உலக தங்க கவுன்சில், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், வங்கி நிலவரங்களால் இந்தியாவில் 2025-ல், 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • முகவரி, பெயர் மாற்றத்திற்கு படிவம் 8-ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

    தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர்.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர வேண்டியவர்கள் படிவம் 6-ஐயும், ஒருவரின் பெயர் தவறாக சேர்க்கப்பட்டிருந்தால் படிவம் 7-ஐயும், முகவரி, பெயர் மாற்றத்திற்கு படிவம் 8-ஐயும் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

    • வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
    • தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

    தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், எஸ்ஐஆர் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்," ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. உண்மையான தேர்தல் நடைபெற உள்ளது. பொய் தேர்தல் அல்ல.

    நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாந்துபோகும் தேர்தலாக வரப்போகும் தேர்தல் இருக்கும்" என்றார்.

    • தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
    • வாக்காளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விவரங்களை அறிந்து கொள்ள அணுகியதால் முடங்கியுள்ளது.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியது. வாக்காளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விவரங்களை அறிந்து கொள்ள அணுகியதால் முடங்கியுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் முடங்கியதால் வாக்காளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஒரு நாள் காத்திருந்து நாளை முதல் எளிதாக அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×