என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தங்கம் விலை அடுத்த ஆண்டில் ரூ.2 லட்சத்தை நெருங்கும் - உலக தங்க கவுன்சில் கணிப்பு
- தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- தற்போதை டாலர் மதிப்பின்படி, ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) தங்கம் சுமார் ரூ.5.40 லட்சத்துக்கும் மேல் உயரக்கூடும் என சொல்லப்படுகிறது.
சென்னை:
தங்க சந்தைக்கான ஒரு சர்வதேச அமைப்பாக இருக்கக்கூடியது ''உலக தங்க கவுன்சில்'' (டபுள்யூ.ஜி.சி.). உலகெங்கிலும் இருக்கும் முன்னணி தங்க சுரங்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட லாப நோக்கமற்ற அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பு உலக நாடுகளின் தங்கத்தின் தேவை, இருப்பு மற்றும் விலை நிலவரம் குறித்த விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த உலக தங்க கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) டேவிட் டெயிட், சமீபத்தில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அதிரடி குண்டு ஒன்றை போட்டுள்ளார். அதில் தங்கம் விலை அடுத்த ஆண்டிலும் மேலும் உயரக்கூடும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து நடுத்தர வர்க்கத்தினரை நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், உலக தங்க கவுன்சில் தலைமை செயல் அதிகாரியின் இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு டேவிட் டெயிட் பல்வேறு காரணங்களை முன்வைத்தாலும், 'உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய பண இருப்புக்கு மாற்றாக தங்கத்தை அதிகளவில் வாங்கி சேமிப்பது, சீனாவில் தங்கத்துக்கான விதிமுறைகள் தளர்த்தப்படுவது, ஜப்பானில் நிலவும் பணவீக்கத்தால் மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது, நிதிநிலையற்ற தன்மை நிலவுவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவது போன்றவை முக்கிய காரணமாக கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அப்படி விலை உயர்ந்தால், எவ்வளவு உயரும்? என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, தற்போதை டாலர் மதிப்பின்படி, ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) தங்கம் சுமார் ரூ.5.40 லட்சத்துக்கும் மேல் உயரக்கூடும் என சொல்லப்படுகிறது.
அதாவது இந்தியாவில் 10 கிராம் கொண்ட 24 காரட் தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க பொருளாதாரம் எதிர்பாராதவிதமாக மிக வேகமாக முன்னேறினாலோ அல்லது தற்போது உலக நாடுகள் மத்தியில் நிலவி வரும் போர் பதற்றங்கள் முற்றிலுமாக தணிந்தாலோ தற்போதைய கணிப்பில் மாற்றங்கள் வரக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.
2024-ம் ஆண்டில் இதேபோல் உலக தங்க கவுன்சில், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், வங்கி நிலவரங்களால் இந்தியாவில் 2025-ல், 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






