என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன், மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு.
    • ஆணவம், கடுங்கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களை கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இப்படிப்பட்ட மக்கள் இயக்கம் முப்பது ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது என்றால் அதற்குக் காரணம் தலைமைப் பண்பு மிக்க, ஆளுமை மிக்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர்தான். சாதாரணத் தொண்டன் வணக்கம் தெரிவித்தாலும், பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கும் பண்பை கொண்டவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும். தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியத் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.

    அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன், மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு. ஒரு சிறந்த தலைவர் என்பவர் அனைவரையும் துணையாகக் கொண்டு, அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து, இயக்கத்தை திறம்பட மேலாண்மை செய்வார். இதற்கு மாறாக செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்திற்குரியவராக இருப்பார். ஆணவம், கடுங்கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களை கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள். தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடத்தில் மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

    உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜு மதுரையில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்றுவிட்டு அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார்.

    இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது செல்லூர் ராஜுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.

    இதேபோன்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக பதவி வகித்தவரும், அம்மா அவர்களின் காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக பதவி வகித்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

    இது தம்பிதுரைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    "செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்" என்றார் திருவள்ளுவர். இதற்கு மாறான எந்தச் செயலும் படுதோல்வியில் தான் முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மூன்று முறை விசாரணை வந்தபோது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.
    • இனிமேல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றனர். இதில் ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடித்து சென்றனர். விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 மீனவர்கள் நீதிபதி உத்தரவின்படி வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று முறை விசாரணை வந்தபோது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 7 மீனவர்களுக்கும் தலா ரூ.1.75 லட்சம் (இலங்கை மதிப்பு) அபராதத்துடன் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகை செலுத்த தவறினால் 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் இனிமேல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

    இதேபோல் கடந்த ஆண்டு எல்லைதாண்டி வந்ததாக கூறி கைதான ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களின் கைரேகை ஒத்துப்போகவில்லை எனக்கூறி மீனவர்கள் காவலை நீட்டிப்பு செய்து வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
    • புதுக்கோட்டை மாவட்டம் அகழ் ஆய்வில் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பூம்புகாரில் நடந்தது மாநாடு அல்ல பெருவிழா. இதில் 1 லட்சம் மகளிர் பங்கேற்றனர். மழை மட்டும் இல்லாமல் இருந்தால் மிகப்பெரிய மாநாடாக அமைந்திருக்கும். இப்படி ஒரு மாநாட்டை யாராலும் நடத்த முடியாது. எத்தனை பிரமாண்டத்திற்குள்ளையும் அடக்க முடியாத மாநாடாக அமைந்தது. மாநாட்டை சிறப்பாக நடத்திய மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    அதேபோல் வருகின்ற 17-ந் தேதி மிக சிறப்பான பொதுக்குழு நடைபெற உள்ளது. அதுவும் வரலாற்று சிறப்பு பொதுக்குழுவாக அமையும்.

    சென்னை திருமங்கலம் அண்ணாநகர் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அறிந்து துடித்து போனேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல் துறை எடுக்க வேண்டும். சிறுமியின் சமூக வலைதளங்களை காவல் துறை ஆய்வு செய்து வருகிறது.

    சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு வேறு எதையோ பார்த்து வருகிறார்கள். இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீண்டும் மீட்க வேண்டும் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை தாரைவார்த்தோம். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறதோ அதேபோல் ஆற்று மணல் திருடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நிறுத்த அரசு தயாராக இல்லை.

    இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அரசு நடை முறைப்படுத்த உள்ளதாக தெரிகிறது. அப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    அகழ் ஆய்வில் தமிழ்நாடு எப்போதும் முன் மாதிரி மாநிலம் தான். புதுக்கோட்டை மாவட்டம் அகழ் ஆய்வில் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூய்மைப்பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.
    • தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

    * தூய்மை பணியாளர்களுக்கான திட்டங்கள் சென்னையில் தொடங்கி படிப்படியாக மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    * பணியின்போது இறக்கும் தூய்மை பணியாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர நடவடிக்கை.

    * தூய்மைப்பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.

    * தூய்மைப் பணியாளர்கள் துறைசார் நோய்களை கண்டறியவும் சிகிச்சை அளிக்க தனி திட்டம்.

    * தூய்மை பணியாளர்கள் குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம்.

    * தூய்மை பணியாளர்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி, விடுதி மற்றும் புத்தக கட்டணத்தை அரசே ஏற்கும்.

    * தூய்மை தொழிலாளர்கள் கடனுதவிக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் தொடங்கப்படும்.

    * தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

    * சென்னையை தொடர்ந்து மற்ற நகர்ப்புறங்களிலும் காலை உணவு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்காக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

    * நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்கு 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டி தரப்படும்.

    * கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் வீடு திட்டத்தில் முன்னுரிமை

    * தூய்மை பணியாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.

    * நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

    * தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடங்களிலேயே புதிய வீடு கட்டித்தரப்படும்.

    தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளின் முடிவில் பணி நிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்தலாம்.
    • அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும்.

    சென்னை:

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற 20 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகக் கூறி, சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில், வக்கீல்கள் ரமேஷ், வேல்முருகன், கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, 20 வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இதுசம்பந்தமான வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரினர்.

    இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை பிற்பகல் விசாரணை செய்யப்படும் என தெரிவித்தனர்.

    முன்னதாக, தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்போது கட்டுப்பாட்டுடன் செயல்பட காவல் துறைக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், காவல் துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அதனால் போராட்டம் நடத்த மாற்று இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

    இந்த முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்தலாம். அதற்கு உரிமை உள்ளது. அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது எனத் தெரிவித்தது.

    அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும். இந்த விவகாரத்தில் எந்த மனுவும் இல்லாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு மறுத்து விட்டது.

    • சென்னையில் இருந்து திருச்சிக்கு தற்போது ரூ.6404 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • பெங்களூருக்கு திருச்சியில் இருந்து கட்டணமாக தற்போது ரூ.5234 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, புதுடெல்லி போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக விமான கட்டணங்கள் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் திருச்சியில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து திருச்சிக்கும் விமான கட்டணமாக ரூ.2279 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.6404 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோன்று திருச்சியில் இருந்து ஹைதராபாத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.3575 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.6205 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து மும்பைக்கு கட்டணமாக ரூ.4826 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8,134 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோன்று பெங்களூருக்கு திருச்சியில் இருந்து கட்டணமாக ரூ.2275 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5234 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்த பின்னர் இந்த கட்டண உயர்வு சீராகும் என தெரிகிறது.

    • தூய்மைப் பணியாளர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே...
    • தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வணக்கம் மு.க.ஸ்டாலின் அவர்களே...

    ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி, கொரோனாவின்போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி, அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.

    யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.

    நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?

    அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும்போது கசக்கிறதா?

    எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினீர்களே, நினைவில் இருக்கிறதா?

    "நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணிபுரியும், நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.

    தூய்மை பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

    தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

    சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும்.

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாட்களாக அறவழியில் போராடி வந்தனர். அவர்களது கோரிக்கை ஞாயமானது என்பதை விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.

    இடது சாரி கட்சித்தலைவர்களுடன் முதல்வரை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

    இச்சூழலில், நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை.

    போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக வழக்கறிஞர் நிலவுமொழி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தோழர் வளர்மதி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    காவல்துறையின் இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

    சனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும்.

    நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது.

    தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு, போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது.
    • மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.

    பீக் ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் கிடைக்கும்.

    கூட்டம் குறைவான நேரங்களில் மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு இயக்கப்படும்.

    நீட்டிக்கப்பட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விடுதலைப்புலிகளுக்காக சிறை சென்றவா் என் தம்பி ரவிச்சந்திரன்.
    • பா.ஜ.க.வுடன் என்றும் கூட்டணி கிடையாது.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மீத்தேன், மேகதாது விழிப்புணர்வு விளக்க பொதுக் கூட்டம் பழைய மீன் மார்க்கெட் அருகில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

    ம.தி.மு.க.வில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று பேசுகின்றனா்.

    மது ஒழிப்புக்காக போராடி உயிரைவிட்டவா் என் தாயாா் மாரியம்மாள். விடுதலைப்புலிகளுக்காக சிறை சென்றவா் என் தம்பி ரவிச்சந்திரன். இவா்களுக்கு என்ன பதவி கொடுத்தேன்.

    பிரதமா் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சே வரக்கூடாது என்று கூறி பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறினோம்.

    நாங்களா இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம். பா.ஜ.க.வுடன் என்றும் கூட்டணி கிடையாது.

    தமிழக நலன்களுக்கு முற்றிலும் எதிராக கவர்னர் ஆா்.என். ரவி நிற்கிறார். கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பது தொடா்பான விவகாரத்தில் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி.

    எனவே இதை கண்டித்து, அவா் கொடுக்கும் சுதந்திர தின தேநீா் விருந்தை ம.தி.மு.க. புறக்கணிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேசிய தலைநகர் டெல்லியில், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

    இதேபோல் சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக போலீசார் 21 பேருக்கு சிறந்த சேவைக்கான விருதும், 3 போலீசாருக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது.
    • தமிழகத்தில் கூலி படத்தின் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. திரையரங்கை ரசிகர்கள் அதிரவிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழகத்தில் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு வருகின்றனர்.

    அவ்வகையில், சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்த நடிகர் தனுஷ் கூலி படத்தை கண்டு ரசித்து வருகிறார். 

    ×