என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதாள் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது

    சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

    நாளை முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது

    பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    01-09-2025 முதல் டீக்கடை விலைபட்டியல்

    பால் - ரூ.15

    லெமன் டீ - ரூ.15

    காபி - ரூ.20

    ஸ்பெஷல் டீ - ரூ.20

    ராகி மால்ட் - ரூ.20

    சுக்கு காபி - ரூ.20

    பூஸ்ட் - ரூ.25

    ஹார்லிக்ஸ் - ரூ.25

    பார்சல்

    கப் டீ - ரூ.45

    கப்-பால் - ரூ.45

    கப் காபி - ரூ.60

    ஸ்பெஷல் கப் டீ - ரூ.60

    ராகி மால்ட் - ரூ.60

    சுக்கு காபி - ரூ.60

    பூஸ்ட் - ரூ.70

    ஹார்லிக்ஸ் கப் - ரூ.70

    ஸ்னாக்ஸ்

    போன்டா / பஜ்ஜி / சமோசா 15 /- (Each)

    • வெளிநாட்டு சுற்றுப் பயணம் நான்கு முறை மேற்கொண்டும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் ஜவுளித் தொழிலுக்கு எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கவில்லை.
    • பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொறுப்பைத் தட்டிக் கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் ஏமாற்று மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை அவரே பலவிதங்களிலும் நிரூபித்து வருகிறார்.

    அமெரிக்க அரசு தற்போது உயர்த்தியுள்ள இறக்குமதி வரியால் பாதிப்படைந்துள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

    2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை, இவர் ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்களுக்கு ஏற்படுத்திய இடையூறுகள், பிரச்சனைகள் ஏராளம். அதனால், அந்தத் தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது என்பதே உண்மை.

    * 365 கிலோ பருத்தி பேலின் விலை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்த போதும், நூல் விலையில் ஸ்திரமற்ற தன்மை நிலவிய போதும், எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. வெளிநாட்டு சுற்றுப் பயணம் நான்கு முறை மேற்கொண்டும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் ஜவுளித் தொழிலுக்கு எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கவில்லை.

    ஆனால், விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் வரிகளை உயர்த்தியும், அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை உயர்த்தியும், தொழில் முனைவோர்களையும், தொழிற்சாலைகளையும் முடக்கும் வகையில், கையாலாகாத தி.மு.க. அரசு, திறனற்ற வகையில் செயல்பட்டதன் காரணமாக தொழில் துறை ஏற்கெனவே நலிவடைந்து ஸ்தம்பித்து உள்ளது.

    இதன் காரணமாக, தென்னிந்தியாவின் மான் செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரிலும், பின்னலாடை நகரம் மற்றும் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரிலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளும், வியாபாரங்களும் மெதுவாக தமிழகத்தைவிட்டு ஏற்கெனவே 2022 முதல் வெளியேறத் துவங்கி விட்டன.

    அ.தி.மு.க. 2021, கொரோனா காலத்தில்கூட சிறப்பாக நடைபெற்று வந்த ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்கள், தற்போதைய விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் பெயிலியர் ஆட்சியில், கடுமையான வரி உயர்வு மற்றும் தொழில் கொள்கையால் தள்ளாடி வருகிறது.

    விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் பெயிலியர் ஆட்சியில், தமிழ்நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழி போடும் ஸ்டாலின், அமெரிக்காவின் தற்போதைய வரி உயர்வால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரின் ஏற்றுமதி தொழில் பாதிப்படைந்து உள்ளதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். உண்மையில் இந்த விடியா தி.மு.க.வின் 52 மாத கால ஆட்சியின் அலங்கோல செயல்பாடுகளால் கோவை, திருப்பூரில் பின்னலாடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்கள் ஏற்கெனவே கடுமையாக பாதிப்படைந்துள்ளது என்பதே உண்மை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்.
    • மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராகவும், மத்திய புலனாய்வு பிரிவிலும் பணிபுரிந்துள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமனை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி புதிய டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்த டிஜிபி வெங்கட்ராமனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இன்று அவர் டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார். ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.

    1994 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த வெங்கட்ராமன் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியிருக்கிறார். மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராகவும், மத்திய புலனாய்வு பிரிவிலும் பணிபுரிந்துள்ளார்.

    சேலம் சரக டிஐஜியாகவும் குற்றப்பிரிவு பெற்ற புலனாய்வு துறையிலும் பணியாற்றியுள்ள வெங்கட்ராமன் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐ.ஜி.யாகவும் இருந்துள்ளார். கூடுதல் போலீஸ் டிஜிபியாக சைபர் கிரைம் குற்ற பிரிவிலும், சிபிசிஐடி பிரிவிலும் பணியாற்றிய வெங்கட்ராமன் தற்போது நிர்வாகப் பிரிவு டிஜிபியாக பணிபுரிந்து வந்த நிலையில்தான் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்.

    சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று நடைபெறும் விழாவில் உயர் போலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் மேகவெடிப்பால் கனமழை பெய்துள்ளது.
    • விம்கோ நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது.

    எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்நிலையில், சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு, மேகவெடிப்பால் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விம்கோ நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார்.
    • மதுரையில் வருகிற 4-ந்தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த ஜூலை 14-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் மதுரையில் வருகிற 4-ந்தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக அந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "14-07-2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க 04-09-2025 அன்று மதுரையில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு கழக உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தருமபுரி:

    கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்தது.

    மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவித்துள்ளது.

    விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குவிந்தனர். அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் ஆற்றின் கரையோரம் நின்று காவிரி ஆற்றில் பாயும் தண்ணீரை ரசித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.

    சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மேகமலை வனத்துறையினர் அருவியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மேகமலை வனத்துறையினர் அருவியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 334 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1160 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது. 5796 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. கூடுதல் நீர் திறப்பால் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.73 அடியாக உள்ளது. 839 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்கு 769 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5504 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு 21.2, தேக்கடி 9.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    • மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
    • தற்போது அணையில் 91.35 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியதை அடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் 5-முறை மேட்டூர் அணை நிரம்பியது.

    மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர்அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.66 அடியாக இருந்தது.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 828 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 16 ஆயிரத்து 493 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணையில் 91.35 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர்.
    • நாளை பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூடுகிறது.

    பா.ம.க.வில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. டாக்டர் ராமதாஸ் மீது அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 19-ந் தேதி பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர்.

    இன்றுடன் அந்த கெடு முடிவடைய உள்ள நிலையில், அன்புமணி இதுவரை எந்த பதிலும் அளிக்காததால் இதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நாளை பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூடுகிறது.

    இந்த நிலையில், இன்று சமூக ஊடகப் பேரவை கூட்டம் நடக்கிறது. அதனை தொடர்ந்து நிர்வாக குழு கூட்டம், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் என 6 நாட்களுக்கு தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் டாக்டர் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • கடந்த 15-ந்தேதி உடல்நலக்குறைவால் இல.கணேசன் காலமானார்.

    மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வீட்டிற்கு நேரில் சென்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

    சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசன் வீட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு வைக்கப்பட்டு இருந்த இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், இல.கணேசன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    கடந்த 15-ந்தேதி உடல்நலக்குறைவால் இல.கணேசன் காலமானார். அந்நேரம் 'மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற தொடர் பிரசார சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு இருந்தார். அதனால் இல.கணேசனின் மறைவுக்கு வரமுடியாத காரணத்தினால் இன்று இல.கணேசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். 

    • கோவிந்தராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
    • விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனி பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் தாய், தந்தை, மகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்தில் தாய் யமுனா, மகள் ரூபினி மற்றும் கார் ஓட்டுநர் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தந்தை கோவிந்தராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
    • ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது.

    தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு செல்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் என்னுடைய பயணத்தை மேற்கொள்கிறேன். செப்டம்பர் 8-ந் தேதி நான் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருகிறேன் என்றார்.



    இந்த நிலையில், ஜெர்மனி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது. அவர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்கிறேன். தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்த பெருமையுடன் வந்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 



    ×