என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • தாயைப்போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என விஜய் கூறினார்.

    சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில், தமிழ் ஈழ விடுதலை போராளி திலீபன் நினைவு நாளையொட்டி, அவரது படத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் நிருபர்களிடம், வைகோ கூறியதாவது:-

    தமிழ் ஈழ வரலாற்றில் அழியாத புகழ்பெற்ற திலீபன் 7 அணு ஆயுத வல்லரசுகளை எதிர்த்து, 7 ஆயிரம் விடுதலைப் புலி வீரர்களை வைத்து தோற்கடித்தார். தாயைப் போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென த.வெ.க தலைவர் விஜய் தனது பிரசாரத்தில் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, ஈழத் தமிழர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அதை மனதார மெச்சி வரவேற்பதாக வைகோ பதில் அளித்தார். 

    • நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன்.
    • அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் 13 கோடி மக்கள்தொகை கொண்ட இனம் தமிழ் இனம். சோழன் பல்வேறு நாடுகளை படை எடுத்து வெற்றி கண்டாலும் புலி கொடியை ஏற்றினார். ஆனால் இனக்கொடியை ஏற்றவில்லை. இதனால் தமிழ் இனத்துக்கு நாடு இல்லாமல் போனது.

    தாயகத்தின் விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த திலீபனின் வழியில் எங்களது இலக்கை அடைவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.

    சென்னையில் தமிழக அரசு நடத்திய கல்வி விழா பாடல் வெளியீட்டு விழா போன்றே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த அரசு விளம்பர மாடல் அரசாகவே செயல்பட்டு வருகிறது.

    அந்த விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு கல்வியாளர்களை ஏன் அழைக்கவில்லை.. கல்வி வளர்ச்சி பற்றி தமிழக அரசு பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.

    இன்றைக்கு பள்ளிப் படிப்பை படித்த பிறகும் மாணவர்கள் தமிழ் எழுத முடியாமல் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழக அரசின் கல்வி சாதனையாகும்.

    அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 ஆட்சிகளிலும் தொழில் முதலீடு தொடர்பாக என்ன சாதித்து விட்டார்கள். ஒன்றுமே கிடையாது.

    வெளிநாட்டில் இருந்து வரும் முதலாளிகள் மக்கள் நலனையா பார்ப்பார்கள். அவர்கள் லாப நோக்கோடு தான் செயல்படுவார்கள். என்னுடைய காருக்கு 5 லட்சம் சாலை வரி கட்டி உள்ளேன். பின்னர் எதற்காக சுங்கச்சாவடிகளை வைத்து கட்டணம் வசூலிக்கிறீர்கள். எங்களையெல்லாம் இதுபோன்று ஏமாற்ற முடியாது.

    நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன். எனது உள்ளங்கையிலேயே அனைத்து விவரங்களும் உள்ளன. தமிழக அரசு அனைத்து இடங்களுக்குமே கருணாநிதியின் பெயரை வைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த பெயரை எல்லாம் மாற்றுவோம்.

    விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டி கொண்டு இருக்கிறார்.

    அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார். அண்ணா, எம்.ஜி.ஆர். என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் விஜய் சென்று வருகிறார்.

    மண்ணரிப்பா மீன் அரிப்பா என்பதை கூட அவரால் புரிந்து படிக்க முடியவில்லை. அவரால் எழுதிக் கொடுத்ததை கூட ஒழுங்காக படிக்க முடியவில்லை.

    செல்லும் இடங்களில் எல்லாம் சொன்னார்களே செய்தார்களா சொன்னார்களே செய்தார்களா என்று கேட்டால் மட்டும் போதுமா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாமா?

    பிப்ரவரி மாதம் வரையில் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவித்திருக்கிறார் அது அவரது விருப்பம். அண்ணனின் பேச்சை கேட்காவிட்டாலும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
    • குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த கால நிலை நீடிக்கிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் இருந்து நீரோடைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    குறிப்பாக முக்கிய சுற்றுலா தலமாக காணப்படும் குற்றால அருவிகளுக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதேநேரம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    அதேபோன்று புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

    குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த கால நிலை நீடிக்கிறது.

    வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கியுள்ளது. இதனால் பிற்பகலில் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 30-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.
    • மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.

    சென்னை:

    இந்தியா முழுவதும் 4ஜி சேவை நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஒடிசாவில் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் மற்றும் சென்னை தொலை பேசி தலைமை பொது மேலாளர் எஸ்.பார்த்திபன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    டிஜிட்டல் பாரத் நிதியத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவைகள் வழங்கப்படும். தமிழகத்தில் 4ஜி சேவை வழங்க 620 கிராமங்கள் கண்டறியப்பட்டன. அதில் 222 கிராமங்களில் புதிய டவர்களும் மற்றும் 35 கிராமங்களில் உள்ள 2ஜி டவர்கள் மேம்படுத்தவும் மொத்தம் 289 கிராமங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 188 வருவாய் கிராமங்களிலும் வனப்பகுதியில் உள்ள 21 கிராமங்களிலும் மொத்தம் 29 இடங்களில் 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 கிராமங்களில் உள்ள மொபைல் டவர்கள் 4ஜி சேவை வழங்க தரம் உயர்த்தப்படுகிறது.

    இந்தத் திட்டத்தின் மூலம் நீலகிரி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஏற்காடு, பச்சமலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஜருகுமலை, மார்த்தாண்டம் பில்லிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொலைதூர மலை கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து 4ஜி டவர் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மொபைல் சேவை வழங்குவதற்காக சூரிய ஒளி மின்சாரம், பேட்டரி பவர் பிளாண்ட் ஜெனரேட்டர் ஆகிய கருவிகள் நிறுவப்பட இருக்கிறது.

    இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.

    நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் பி.எஸ்.என்.எல். விரைவான முன்னேற்றம் தன்னம்பிக்கை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சக்தி வாய்ந்த சான்றாக திகழ்கிறது.

    இந்த நெட்வொர்க்கின் வேகம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பான அதிவேக நம்பகமான மொபைல் சேவையை வழங்குவதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார்.

    சென்னை:

    துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 12-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 4-ந்தேதி, முதல் முறையாக தமிழகம் வருகிறார். அவர் தமிழகத்தில் 2 நாட்கள் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.

    வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) சி.பி.ராதாகிருஷ்ணன் விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று அவர் சென்னையில் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார்.

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணுக்கு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

    மறுநாள் 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார். கோவை விமான நிலையத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவையில் அவர் தனது வீட்டுக்கும் செல்கிறார். அன்று முழுவதும் அவர் கோவையில் தங்கி இருக்கிறார். அப்போது அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் பலரையும் அவர் சந்திக்கிறார். 5-ந்தேதி இரவு அல்லது 6-ந்தேதி காலையில் அவர் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் தமிழக சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது. இன்று அல்லது நாளை அவரது சுற்றுப்பயண திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

    • எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
    • உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இவ்விழா மேடையில், 'நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்று தனது முதல் மாத சம்பளத்தை தந்தையிடம் வழங்கிய பிரேமா பேசுகையில், தந்தை ஒழுகும் வீட்டில் இருப்பதாக கூறியிருந்தார்.

    இந்த நிலையில், மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!

    எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!

    உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறியுள்ளார். 



    • பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
    • வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார்.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டார்.

    நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று வந்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் இன்று தனது இல்லத்தில் பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார். தொடக்க விழாவானது மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதனை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த யாத்திரையை தொடங்குவது குறித்தும், அதில் கூட்டணி கட்சித் தலைவர்களை பங்கேற்க செய்வது குறித்தும், சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்துதல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் இந்த யாத்திரையில் என்னவெல்லாம் திட்டங்களை கொண்டு வரலாம், கூட்டணியில் புதிய கட்சிகளை இழுப்பது எப்படி என்பது குறித்தும் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டமானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
    • விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கரூர்:

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கரூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார். அதில் விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

    தமிழக வெற்றி கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அதற்கு பதிலாக நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் வரும் விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
    • பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.

    சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னையில் நேற்று அரசு நடத்திய விழா கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை, சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் இருந்தது.

    * கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?

    * மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்துகிறீர்கள்.

    * தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல, விளம்பர மாடல் அரசு.

    * பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.

    * தாய் மொழியான தமிழ்த்தேர்வு எழுதுவதற்கு 60,000 பேர் வராத அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
    • விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது.

    பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

    விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

    • சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் 1964 - 2000 வரை நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்தார்.
    • மந்தைவெளியில் எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தமிழ் சினிமாவின் "ஜேம்ஸ்பாண்ட்" என்று அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர், சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் 1964 - 2000 வரை வசித்து வந்தார்.

    நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற வேண்டும் என்று நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கர் சாலை என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    இதேபோன்று சென்னை மந்தைவெளி 2-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையையும் அவர் திறந்து வைத்தார்.

    ×