என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நெல்லை, திருச்சி, கோவையில் நடக்கிறது.
- 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்துகிறது. தமிழகத்தில் முதல் முறையாக இந்தப் போட்டி நடக்கிறது.
வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.
36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள். 26 விளையாட்டுகள் நடக்கிறது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுக்கான தமிழக அணி தேர்வு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. குத்துச்சண்டை, பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், களரிபயட்டு, நீச்சல் ஆகிய 5 விளையாட்டுகளுக்கான தேர்வு சென்னையில் நேற்று நடந்தது.
இறகுப்பந்து, மல்யுத்தம், களரிபயட்டு ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நெல்லை, திருச்சி, கோவையில் நடக்கிறது.
இறகுப்பந்து நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கிலும், மல்யுத்தம் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கிலும், களரி பயட்டு கோவை நேரு ஸ்டேடியத்திலும் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் வீரர்கள் 1.1.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழுடன் இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தான் செய்வார்கள்.
- பாராளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்.
சோழிங்கநல்லூர்:
மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா கட்சி தேசிய அளவில் பல்வேறு வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.
தென் சென்னை தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் இன்று சோழிங்கநல்லூரில் நடந்தது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைப்பாளர் கரு.நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய்சத்யன் ஆகியோர் செய்து இருந்தனர்.
மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
* வீட்டின் கதவு திறந்துதான் உள்ளது, மோடி அனைவரையும் வரவேற்பார். இந்த வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தான் செய்வார்கள்.
* எங்கள் வீட்டில் அவர்கள் இல்லை என நாம் ஏன் சொல்ல வேண்டும்?
* வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு அந்த வீட்டில் நாங்கள் இல்லை என கூறுகின்றனர்.
* வீடு நாம் கட்டியுள்ளோம், என்டிஏ கூட்டணி நமது வீடு போன்றது.
* நம் வீட்டில் உணவருந்தியவர்களை நாம் தவறாக பேச மாட்டோம்.
* 9 வருடமாக காரத்தை தாங்கியவர்கள் இப்போது வெளியே சென்றுள்ளனர்.
* உணவருந்தியவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
* பாராளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்.
* அவர்கள் என்ன சொன்னாலும் பலம் நமது பக்கம் இருக்கிறது, மக்கள் நம் பக்கம் இருக்கின்றனர்.
இவ்வாறு அண்ணாமலை பேசியுள்ளார்.
- மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
- தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை:
இந்தியாவில் மிக தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு 'ஸ்வச் சர்வேக்ஷன்' விருது என்று பெயர். இதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்தியா முழுக்க உள்ள 446 நகரங்களை பல்வேறு தரநிலைகளில் ஆய்வு செய்து இந்த ஸ்வச் சர்வேக்ஷன் 2023 பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் நாட்டிலேயே தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தூர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சூரத் 2-வது இடத்தில் உள்ளது. நவி மும்பை 3-வது இடத்திலும், புதுடெல்லி 7-வது இடத்திலும், ஐதராபாத் 9-வது இடத்திலும், அகமதாபாத் 15-வது இடத்திலும், லக்னோ 44-வது இடத்திலும், பெங்களூர் 125-வது இடத்திலும், மும்பை 189-வது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா 438-வது இடத்தில் உள்ளது.
அதேபோல சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பிரிவில், மராட்டியம் முதல் இடத்தை பிடித்தது. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பரிசுகளை வழங்கினார்.
446 நகரங்களை கொண்ட இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நகரமும் வரவில்லை. திருச்சி இந்த பட்டியலில் 112-வது இடத்தை பிடித்துள்ளது. ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள்தொகையை கொண்ட நகரங்கள் பிரிவில் திருச்சி 112-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு திருச்சி 262-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 112-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் திருச்சி 9,500 புள்ளிகளுக்கு 5,794.9 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தூய்மையான நகராக திருச்சி தேர்வாகியுள்ளது. தூத்துக்குடி 2-வது இடத்திலும், கோவை 3-வது இடத்திலும் உள்ளன. சென்னை 5-வது இடத்தில் உள்ளது. தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக சென்னை நகரம் 40-க்கும் மேற்பட்ட இடங்களையே பிடித்திருந்தது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு 45-வது இடத்திலும், 2021-ம் ஆண்டு 43-வது இடத்திலும், 2022-ம் ஆண்டு 44-வது இடத்திலும் சென்னை இருந்தது. தற்போது 199-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு 9,500 புள்ளிகளுக்கு 4313 புள்ளிகள் கிடைத்துள்ளது.
தூய்மை, குப்பை சேகரிப்பு, சுகாதாரம், கழிவுநீர் அமைப்பு, மாசுபாடு உள்ளிட்டவைகளை கையா ளுவதன் அடிப்படை யில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் குவிந்த குப்பைகளில் 12 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெருங்குடி மற்றும் கொடுங்கை யூர் குப்பை கிடங்குகளில் 21 சதவீதம் குப்பைகள் மட்டுமே பயோ மெட்ரிக் முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு நாளைக்கு 6500 டன் குப்பைகள் சேருகின்றன. பொது கழிப்பறைகளில் 77 சதவீதம் தூய்மையாக பராமரிக்கப்ப ட்டுள்ளது.
அதே நேரத்தில் 95 சதவீதம் அளவுக்கு வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதிகள் 90 சதவீதம், குடியிருப்பு பகுதிகள் 91 சதவீதம் அளவுக்கு தூய்மையாக பராமரிக்கப்பட்டு உள்ளது. நீர் நிலைகள் 85 சதவீதம் தூய்மையாக உள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் உயிரி உரம் தயாரிப்பதில் நீண்ட கால திட்டங்கள் நிறைய உள்ளன. அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவுடன் சென்னையின் தரம் மேம்படும். எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் காய்வாய் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளன' என்றார்.
- வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை.
- சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு மார்கழி மாதஅமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால்,தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளபரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.
இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள ரேசன் கடை ஒன்றில் எழுத்தராக லீமா என்பவர் பணியாற்றி வருகிறார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பாளையங்கோட்டை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சகோதரரின் இறப்பு செய்தி கேட்டும் பெண் ஊழியர் ஒருவர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிவிட்டு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள ரேசன் கடை ஒன்றில் எழுத்தராக லீமா என்பவர் பணியாற்றி வருகிறார். லீமா ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்து கொண்டு இருந்தபோது அவருக்கு செல்போனில் அவரது சகோதரர் இறந்த செய்தி வந்தது. இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த லீமா கண்ணீரை துடைத்தபடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்து முடித்த அவர் பின்னர் கணக்குகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
- நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.
சென்னை:
தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நேற்று தொடங்கியது.
இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இன்று 2-ம் நாள் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்மையில் இதே அரங்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்கள் கொண்டாடும் மாநாடு இது.
இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் இங்கு வருகை தந்திருப்பதுதான்.
அவர் உலகப் புகழ்பெற்ற தமிழர் மட்டுமல்ல. உலகமே கவனிக்கிற பதவியில் இருக்கும் தமிழர். நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, நான் தங்கிய இடத்திற்கே வந்து எனக்கு சிறப்பு செய்தார். நேற்று அவரை என்னுடைய வீட்டிற்கே வரவழைத்து மகிழ்ந்தேன். அவரை இன்றும் என்றும் வாழ்த்தி வரவேற்கிறேன்.
அவரை மாதிரியே இந்த மேடையில் அமர்ந்திருக்கிற அனைவரையும் வரவேற்கிறேன். உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற உழைப்பு திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழ காரணம்.
இப்படி புலம் பெயர்ந்த தமிழ் சொந்தங்கள் அந்த நாடுகளோட வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் முதுகெலும்பாக இருந்து வருகிறவர்கள். கலைஞரால் 2010-ம் ஆண்டு வெளிநாடு வாழ் தமிழர்களின் துயரங்களை களைய, வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவை உருவாக்கி அரசாணை வெளியிட்டதோடு, வாரியம் அமைக்கவும் சட்ட முன்முடிவு உருவாக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றம் காரணமாக இந்த முயற்சிகளில் தடை ஏற்பட்டது. ஆனால் இப்போது அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி அயலகத் தமிழர் நலனுக்கு தனியாக ஒரு துறையை உருவாக்கி தனி அமைச்சரையும் நியமித்து உங்களுடைய அவசரத் தேவைகள் உடனுக்குடன் சிறப்பான முறையில் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது.
ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துறையும் வாரியமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை உள்ள தமிழர்களுடைய குழந்தைகளுக்கு தமிழ் மீது ஆர்வத்தை உருவாக்கி, தமிழ் இணைய கல்விக்கழகம் மூலம் தமிழ் கற்றுத் தரப்படுகிறது.
வெளிநாடுகளில் கைது செய்யப்படுகிற சூழலுக்கு ஆளாகிற தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் உதவி தேவைப்படுகிற தமிழர்களுக்கு மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய இந்திய தூதரகத்துடன் இணைந்து உரிய நிவாரண நடவடிக்கைகளை இந்த துறை சிறப்பாக செய்து வருகிறது.
மருத்துவ இயலாமை மற்றும் பல்வேறு காரணங்களால், தாயகம் திரும்ப முடியாமல் கஷ்டப்படுகிற தமிழர்கள், அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரவும், வெளிநாட்டில் இறக்க நேரிடும் தமிழர்களின் உடல்களை இந்தியா கொண்டு வரவும், தமிழ்நாடு அரசால் 1 கோடி ரூபாய் சுழல் நிதி ஏற்படுத்தப்பட்டு, தமிழர்களின் துயரங்களை துடைக்கிற பணி உரிய முறையில் செய்யப்பட்டு வருகிறது.
முகவர் மீதான புகார், நில அபகரிப்பு புகார் தொடர்பாக 53 இனங்களில் தீர்வு காணப்பட்டுள்ளது.
உக்ரைன், சூடான், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் இப்படி பல்வேறு நாடுகளில் இருக்கிற தமிழர்கள் அங்கே எதிர்பாராத விதமாக பிரச்சனைகளை சந்திக்கிறபோது தமிழ்நாடு அரசு விரைவாக செயல்பட்டு, பத்திரமாக அழைத்து வந்துள்ளது.
இயற்கை இடர்பாடு மற்றும் அசாதாரண சூழ்நிலைகளிலும் தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதில் கண்ணும் கருத்துமாக நாங்கள் செயல்பட்டதை நீங்களே பார்த்தீர்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 'எனது கிராமம்' திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டின் அயலகத் தமிழர் நாள் கொண்டாட்டம் 'தமிழ் வெல்லும்' என்ற சிறப்பான கருப்பொருளைக் கொண்டு, மிக எழுச்சியோடும், 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து வந்திருக்கின்ற உங்கள் எல்லோருடைய பங்கேற்போடும் மிகச் சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல், ஒரு தமிழனாகவும் இதை பார்த்து நான் அகம் மகிழ்கிறேன். நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.
தமிழ் அன்னையின் குழந்தைகள், அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்... எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, ராஜகண்ணப்பன், மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தின் தூய்மை நகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.
- கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, மேற்கண்ட தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
செங்கல்பட்டு:
பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் தூய்மை பராமரிப்பில் சிறப்பாக செயல்படும் நகரங்களைக் கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்கு விக்கும் வகையில், 'ஸ்வச் சர்வேக்ஷன்' என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ம் ஆண்டில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
'ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட இதன்படி, தேசிய அளவில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் முடிவுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். அதன்படி தமிழகத்தின் தூய்மை நகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன.
இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி, 6 பேரூராட்சிகள் என 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில் மறைமலைநகர் நகராட்சி தரவரிசை பட்டியலில் முதல் இடமும், மதுராந்தகம் 57-வது இடமும், செங்கல்பட்டு 93-வது இடமும் பெற்றுள்ளன. தாம்பரம் மாநகராட்சி 13-வது இடமும், பேரூராட்சிகளில் கருங்குழி 135-வது இடமும், திருப்போரூர் 208-வது இடமும், அச்சிறுப்பாக்கம் 308-வது இடமும், திருக்கழுக்குன்றம் 322-வது இடமும், மாமல்லபுரம் 369-வது இடமும், இடைக்கழிநாடு 540-வது இடமும் பிடித்துள்ளன.
மறைமலைநகர் நகராட்சி தமிழக அளவிலும் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குப்பையை கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகித்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்தல், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, மேற்கண்ட தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
- ஏதாவது ஒரு தொகுதியை தி.மு.க. கூட்டணியில் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
- 3 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் செயலாற்றி வருகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி, 3 தொகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது. தென் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 பாராளுமன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை தி.மு.க. கூட்டணியில் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த 3 தொகுதிகளில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பம்பரமாக சுழன்று செயல்பட்டு வருகிறார்கள்.
மதுரை, கோவை, தென் சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் செயலாற்றி வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ள நிலையில் இந்த கட்சிகளுக்கும் அவர்கள் கேட்கும் சீட்டை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. தலைமை உள்ளது.
தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே கூட்டணி கட்சிகள் கேட்பதால் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றி தி.மு.க. தலைமை ஆலோசித்து முடிவை அறிவிக்கும். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன. அப்படி ஒதுக்கப்படும் தொகுதியில் அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார்.
- வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
- கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன். வார்டு உறுப்பினர் வானதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்போரூர்
கேளம்பாக்கம் சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் கேளம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிகிருஷ்ணன். வெங்கடேசன், கங்காதரன், சுற்றுச்சூழல் பொது மேலாளர் லாரன்ஸ். கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன். வார்டு உறுப்பினர் வானதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டியவர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.
- முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
- பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் செலுத்த வேண்டிய தொகையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதியை தளர்வு செய்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். தற்போது அது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் செலுத்த வேண்டிய தொகை 40 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து 20 லட்சம் ரூபாயாக குறைத்தும், பிஜி டிப்ளோமா மாணவர்கள் 20 லட்சத்திற்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து கழகங்களை சார்ந்த பேருந்துகளுக்கு முன்பதிவு நடந்து வருகிறது.
- சென்னையில் இருந்து 80 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்குகின்றனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் 14-ந் தேதி வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து கழகங்களை சார்ந்த பேருந்துகளுக்கு முன்பதிவு நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இதுவரையில் இல்லாத அளவுக்கு 1.25 லட்சம் பேர் இந்த ஆண்டு முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் இருந்து 80 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்குகின்றனர்.
பிற நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் முன்பதிவு செய்துள்ளனர்.
- சென்னை தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடந்தது.
- பா.ஜனதாவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா கட்சி தேசிய அளவில் பல்வேறு வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகிறது.
கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய பிறகு பெரிய அளவிலான கட்சிகள் எதுவும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கவில்லை. பா.ம.க., தே.மு.தி.க. உள்பட சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கான முயற்சிகள் நடக்கிறது.
அதே நேரம் கூட்டணி அமைந்தாலும், அமையாவிட்டாலும் தனித்து நின்றும் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அண்ணாமலை தீவிரம் காட்டுகிறார்.
"என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செய்து வரும் அண்ணாமலை இதுவரை 146 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்றுள்ளார். இந்த யாத்திரைக்கு அனைத்து பகுதிகளிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான மக்கள் திரண்டு அவரது பேச்சை கேட்கிறார்கள். இது பா.ஜனதாவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.

தென் சென்னை தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடந்தது.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைப்பாளர் கரு.நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய்சத்யன் ஆகியோர் செய்து இருந்தனர்.
மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
தென்சென்னை தொகுதியில் முன்னாள் பா.ஜனதா தேசிய தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.
அதே போல் இல.கணேசன் தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றிருந்தார். எனவே வருகிற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் வகையில் திட்டமிட்டு பணியாற்றும்படி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு பூத்துக்கும் 13 பொறுப்பாளர்கள் கொண்ட கமிட்டி அமைத்திருக்க வேண்டும். இன்னும் நிறைவடையாத பூத்களில் பணிகளை உடனே முடிக்க வேண்டும்.
பாக பொறுப்பாளர்கள் தனது பகுதியில் உள்ள வாக்காளர்கள் வீடுகளில் நேரடி தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த அறிமுகம் மூலம் நட்பு வட்டாரத்தை உருவாக்குங்கள். அதே நேரம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து, மத்திய அரசு திட்டங்களை தகுதிக்கு ஏற்ப கிடைக்க செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டம் முடிந்ததும் மத்திய சென்னை தொகுதி நிர்வாகிகள் கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கிறார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளர்கள் வினோஜ் செல்வம், சுமதி வெங்கடேஷ், மாவட்ட தலைவர் தனஞ்செயன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.






