search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அயலகத் தமிழர்களின் தேவைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது: மு.க.ஸ்டாலின்
    X

    அயலகத் தமிழர்களின் தேவைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது: மு.க.ஸ்டாலின்

    • ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
    • நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நேற்று தொடங்கியது.

    இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இன்று 2-ம் நாள் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அண்மையில் இதே அரங்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்கள் கொண்டாடும் மாநாடு இது.

    இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் இங்கு வருகை தந்திருப்பதுதான்.

    அவர் உலகப் புகழ்பெற்ற தமிழர் மட்டுமல்ல. உலகமே கவனிக்கிற பதவியில் இருக்கும் தமிழர். நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, நான் தங்கிய இடத்திற்கே வந்து எனக்கு சிறப்பு செய்தார். நேற்று அவரை என்னுடைய வீட்டிற்கே வரவழைத்து மகிழ்ந்தேன். அவரை இன்றும் என்றும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

    அவரை மாதிரியே இந்த மேடையில் அமர்ந்திருக்கிற அனைவரையும் வரவேற்கிறேன். உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற உழைப்பு திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழ காரணம்.

    இப்படி புலம் பெயர்ந்த தமிழ் சொந்தங்கள் அந்த நாடுகளோட வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் முதுகெலும்பாக இருந்து வருகிறவர்கள். கலைஞரால் 2010-ம் ஆண்டு வெளிநாடு வாழ் தமிழர்களின் துயரங்களை களைய, வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவை உருவாக்கி அரசாணை வெளியிட்டதோடு, வாரியம் அமைக்கவும் சட்ட முன்முடிவு உருவாக்கப்பட்டது.

    ஆனால் தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றம் காரணமாக இந்த முயற்சிகளில் தடை ஏற்பட்டது. ஆனால் இப்போது அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி அயலகத் தமிழர் நலனுக்கு தனியாக ஒரு துறையை உருவாக்கி தனி அமைச்சரையும் நியமித்து உங்களுடைய அவசரத் தேவைகள் உடனுக்குடன் சிறப்பான முறையில் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது.

    ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துறையும் வாரியமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை உள்ள தமிழர்களுடைய குழந்தைகளுக்கு தமிழ் மீது ஆர்வத்தை உருவாக்கி, தமிழ் இணைய கல்விக்கழகம் மூலம் தமிழ் கற்றுத் தரப்படுகிறது.

    வெளிநாடுகளில் கைது செய்யப்படுகிற சூழலுக்கு ஆளாகிற தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் உதவி தேவைப்படுகிற தமிழர்களுக்கு மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய இந்திய தூதரகத்துடன் இணைந்து உரிய நிவாரண நடவடிக்கைகளை இந்த துறை சிறப்பாக செய்து வருகிறது.

    மருத்துவ இயலாமை மற்றும் பல்வேறு காரணங்களால், தாயகம் திரும்ப முடியாமல் கஷ்டப்படுகிற தமிழர்கள், அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரவும், வெளிநாட்டில் இறக்க நேரிடும் தமிழர்களின் உடல்களை இந்தியா கொண்டு வரவும், தமிழ்நாடு அரசால் 1 கோடி ரூபாய் சுழல் நிதி ஏற்படுத்தப்பட்டு, தமிழர்களின் துயரங்களை துடைக்கிற பணி உரிய முறையில் செய்யப்பட்டு வருகிறது.

    முகவர் மீதான புகார், நில அபகரிப்பு புகார் தொடர்பாக 53 இனங்களில் தீர்வு காணப்பட்டுள்ளது.

    உக்ரைன், சூடான், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் இப்படி பல்வேறு நாடுகளில் இருக்கிற தமிழர்கள் அங்கே எதிர்பாராத விதமாக பிரச்சனைகளை சந்திக்கிறபோது தமிழ்நாடு அரசு விரைவாக செயல்பட்டு, பத்திரமாக அழைத்து வந்துள்ளது.

    இயற்கை இடர்பாடு மற்றும் அசாதாரண சூழ்நிலைகளிலும் தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதில் கண்ணும் கருத்துமாக நாங்கள் செயல்பட்டதை நீங்களே பார்த்தீர்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 'எனது கிராமம்' திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஆண்டின் அயலகத் தமிழர் நாள் கொண்டாட்டம் 'தமிழ் வெல்லும்' என்ற சிறப்பான கருப்பொருளைக் கொண்டு, மிக எழுச்சியோடும், 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து வந்திருக்கின்ற உங்கள் எல்லோருடைய பங்கேற்போடும் மிகச் சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல், ஒரு தமிழனாகவும் இதை பார்த்து நான் அகம் மகிழ்கிறேன். நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.

    தமிழ் அன்னையின் குழந்தைகள், அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்... எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, ராஜகண்ணப்பன், மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×